ஞாயிறு, 24 நவம்பர், 2013

<>நூர்சகானின் நிக்கா!<>

              நூர்சகானின் நிக்கா!


"அலைக்கும் சலாம்"- தனக்கு சலாம் செய்தது யார் என்று கவனித்தபடியே மெளல்வி இப்ராகிம் வீட்டுக்குள் நுழைந்தார். 

யாரு கலிமுல்லாவா? அவர் கண்கள் ஆச்சரியத்தை விசிறியது. 

"ஆமாங்க" உட்கார்ந்திருந்த, கலிமுல்லா எழுந்து கொண்டான்.

"அமருப்பா". 

நானே உன்னப் பாக்க வரணும்னு இருந்தேம். ஒரு நடைய மிச்சப்படுத்திட்ட...யா...அல்லாஹ்.. என்ன வெய்யில் அல் 
ஹந்துலிலுல்லா... எம்மா நூரு தம்பிக்கு தாகத்துக்கு எதாச்சும் குடுத்தியா? " உள் பக்கம் நோக்கி குரல் கொடுத்தார். 

"தங்கச்சி மோர் குடுத்துச்சு"

"அப்டியா, கலீமு, நாளை பெரிய பள்ளிவாசல்ல ஜக்காத் கூடுது.
மதியம் தர்கா குழுக்கூட்டமும் இருக்கு. காயல்,புதுப்பட்டிணம் எல்லாத்துல இருந்தும் வர்றாங்க. ஒரு அம்பது,அறுபது 
பேருக்கு பிரியாணி, தால்சாசெய்யணும். அதான் ஒங்கிட்ட சொல்லிட்டா என் கவல தீந்துடுமில்ல"

"மன்னிச்சுடுங்க. அண்ணனுக்கு திடீர்னு ஒடம்பு முடியாம ஆஸ்பத்திரில சேத்துருக்காங்களாம். திடீர்னு தகவல்
வந்துச்சு. செலவுக்கு பணம் வேணும். அதான் ஒங்களப் பாத்து வாங்கீட்டுப் போலாம்னு வந்தேன்."

"அடடே அப்டியா? எவ்வளவு வேணும்?"

"ஒரு எறநூறு இருந்தா பரவாயில்ல"

"போற எடத்துல முன்னப் பின்ன செலவிருக்குமே போதுமா? இந்தா எதுக்கும் ஐநூறா கொண்டு போ..."

"ரொம்ப நன்றிங்க‌...நாளை..."

"அட.. அத நா பாத்துக்கிறேன். நீ கெளம்பு..."

இப்ராகிம் பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டாரே தவிர அவருடைய மனமெல்லாம் நாளைய பள்ளிவாசல் 
ஏற்பாடுகளை பற்றியதில் உழன்று கொண்டிருந்தது.

"வாப்பா...சொன்னா கோவிப்பீங்க. இதெல்லாம் எதுக்கு நீங்க இழுத்துப்போட்டுட்டு செய்யணும். ஒங்க ஒடம்பு இருக்கதுக்கு
அலய முடியுமா? " என்ற மகளின் கேள்வி அவரின் சிந்தனையிழைகளை அறுத்தது.

"நீ சொல்றது சரிதாம்மா நூரு. ஒரு வருச‌மா ரெண்டு வருச‌மா? நாப்பது வருச‌மா செஞ்சிட்டு வர்றேன். மேஸ்திரிட்ட 
சொன்னா நடந்துரும்னு வர்றாங்க. அவங்க மொகத்துல அடிச்ச மாதிரி எப்படி முடியாதுன்னு சொல்றதும்மா?

" ஒடம்புல வலு இருந்துச்சு ஓடிஒடி செஞ்சீங்க. இந்த நோம்போட
இந்த வேலை யெல்லாம் விட்டுட்டு பேசாம ஓய்வெடுங்க?" -என்றாள் மகள் நூர்ஜஹான்.

" ஒரு சின்ன திருத்தம் நூறு, இந்த நோம்போடங்கிறத, ஒன்னோட நிக்காவோடன்னு மாத்திக்கம்மா!"

" ஆமா ஒங்களுக்கு 'உ' 'ஆ'ன்னா நிக்காவுல வந்து நிப்பீங்க" என்றாள் சற்று எரிச்சலாக.

" ஒனக்கு நிக்கா காலாகாலத்துல முடிஞ்சுருந்தா ஒம் பையனுக்கோ, பெண்ணுக்கோ பதினஞ்சு வயசாவது ஆயிருக்கும். 
ம்..ம்ம் " என்ற அவரின் பெருமூச்சில் கவலை கலந்திருப்பதை அறிய முடிந்தது.

" எனக்கு நிக்காவே வேணாம். நிக்கான்ற வார்த்தையே எனக்கு புடிக்கல. ஒங்கள ஒழுங்காப் பாத்துட்டு இருந்தா... 
அதுவே எனக்கு போதும் வாப்பா..."

" ஒங்கம்மா ஒங் கவலையிலயே போய் சேந்துட்டா. ஆனா நா கண்ண நிம்மதியா மூடணும்னா ஒனக்கு ஒரு வழி 
செய்யாம முடியாதேம்மா "-

" முடியாதுப்பா. எனக்கு இந்த சென்மத்துல நிக்கா இல்லேன்னு ஆயிருச்சுன்னு போன வருச‌மே முடிவு பண்ணீட்டேன். 
ஒன்னா ரெண்டா அத்தனை பேரும் சொல்லி வச்சமாதிரி சொல்லீட்டுப் போய்ட்டாங்க. என் மனசு வெறுத்துப்போச்சு.

இப்பல்லாம் எனக்கு நிக்கா ஆகலேங்கிறத விட எனக்காக நீங்க கவலப்படறத என்னால சகிக்க முடியல. அஞ்சு வேளை 
தவறாம தொழுறீங்க. தாராவியும் விடாம தொழறீங்க. அல்லாவோட கருணை இல்லீயே வாப்பா..."- அவளின் கண்களிலிருந்து 
கண்ணீர் சரம் சரமாய் உதிர்ந்து தெறித்து விழுந்தது.

" நூறு... அழாதம்மா.. அல்லாவோட சோதனைன்னு தாம்மா நெனைக்கேம். ஒன்னோட நல்ல மனசுக்கு ஒரு கொறவும் வராதும்மா. 
நா, தொழுதுட்டு வர்றது எனக்கு அது வேணும் இது வேணும்ங்கிறதுக்கு அல்ல. நம்மள விட இந்த சமுதாயத்துல எவ்வளவோ கீழான 
நெலயிலே இருக்கிறாங்க. குடிக்க கூழுகூட இல்லாம வந்த நோய நீக்க வழியில்லாம... இப்படி இருக்கிற சமுதாயத்துல நம்மள 
அந்த மாதிரி எந்த கொறயும்  இல்லாம வச்சுருக்கிற அல்லாவுக்கு நன்றி சொல்லத்தாம்மா தொழுவுறேன். நம் மனக் கொறையை 
அல்லா அறிவார்.  தள்ளீட்டே போறதுக்கு எதாவது காரணம் இருக்கும்மா. அல்லா நம்ம கை விட மாட்டாரும்மா..."

" என்னமோ சொல்லி என்னை அடக்கி வச்சிடுறீங்க. நானாவது அழுது கொட்டித் தீத்துடுறேன். நீங்க வெளிய காட்டாம உள்ளுக்குள்ள 
அழுது புலம்பி வேதனப் படுறது எனக்கு நல்லாவே தெரியும் வாப்பா. வெளிக்கு என்னை சமாதானப் படுத்துறீங்க. இல்ல வாப்பா."

" ஆமாம்மா. இந்த கையாலாகாதவனால அதத் தான் செய்யமுடியுது... என்று எதையோ சொல்ல வந்தவர் அதை மாற்றி, ஒரு துண்டு 
குடும்மா, வெயில் சுள்ளுன்னு வர்றதுக்குள்ள மேலத் தெரு வரை போயிட்டு வந்துர்றேன்." என்றார்.


இப்ராகீம் சின்ன பட்டிணம் பேரூராட்சியில் பில் கலெக்டரா வேலைக்குச் சேர்ந்து மேற்பார்வையாளராக உயர்ந்து ஓய்வும் பெற்று விட்டார். 
வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் அந்த மேஸ்திரி பட்டம் மட்டும் ஒட்டிக் கொண்டது. ஆஸ்துமாவோடு போராடிக் கொண்டிருந்த 
மனைவி ஆமீனா பேகத்துக்கு, தம் ஒரே மகளுக்கு வயது ஏறிக் கொண்டே போகிறது.  திருமணம் ஆன பாடில்லையே என்கிற கவலையும் 
சேர்ந்து ஆக்கிரமித்து மூன்று வருஷங்களுக்கு முன் இரவில் தூங்கப் போனவள் எழுந்திருக்கவே இல்லை.

குணத்திலும் அழகிலும் நூறு மார்க் கொடுக்கலாம் நூர்சகானுக்கு. 32 வயதாகும் அவளுக்கு திருமணம் என்பது கனவாகத்தானிருந்தது. 
அவளுக்கு அழகை அள்ளிக் கொடுத்த இறைவன் ஒரேஒரு குறையை மட்டும் கொடுக்காமலிருந்தால் எப்போதோ திருமணம் முடிந்து 
போயிருக்கும்.

அன்னவாசல் அசரத் ஏற்பாட்டின் பேரில் நாளை நூரைப் பெண் பார்க்க வருவதாக இப்ராகிமுக்கு தகவல் வந்தது. மாப்பிள்ளை 
சொந்தமாக ஜவுளிக் கடை வைத்து இருக்கிறாராம். மாப்பிள்ளைக்கு ஒரு அண்ணன், ஒரு அக்கா. இருவருக்கும் திருமணமாகிவிட்டது. 
விபத்து ஒன்றில் இடது காலை இழந்த மாப்பிள்ளை சிராஜுதீன், திருமணமே வேண்டாம் என்று இருந்துவிட்டவரை இப்போது அசரத் 
ஒருவழியாக பேசி சம்மதிக்க வைத்திருக்கிறார்.

பெண்ணுக்கு வசதி முக்கியமில்லை. குணம் தான் முக்கியம் என்று மாப்பிள்ளை வீட்டார் சொல்லி விட்டார்களாம். இதெல்லாம் 
அன்னவாசல் அசரத் சொல்லி அனுப்பிய தகவல்கள்.

" எதுக்கு வாப்பா இந்த விஷப் பரீட்சை? சொன்னாலும் கேட்க மாட்டேம்பீங்க. வர்றவங்களுக்கென்ன வாய் வலிக்காம சொல்லி
அழ வச்சுட்டுப் போய்டுவாங்க." அனுபவங்கள் தந்த வேதனையில் சொன்னாள் நூர்.

" எனக் கென்னமோ இந்த தடவை நல்லபடியா எல்லாம் முடியும்மா. நம்பிக்கை இருக்கு. சந்தோச‌மா இரும்மா." ஒரு தந்தையின் 
நிலையில் அதைத்தானே சொல்லமுடியும்!

"வாப்பா... இதுவே எனக்கு முதலும் கடைசியுமா இருக்கட்டும்." முடிவாகவே சொன்னாள் நூர்.

காலையில் இருந்தே இப்ராகிம் இருப்புக் கொள்ளாமல் தவித்தார். மாப்பிள்ளை வீட்டார் வரப் போவது தான். தலப்பா கட்டி நாயக்கர் 
கடை பிரியாணி மாஸ்டரை கொண்டு வந்து நெய் மணமணக்க பிரியாணி ரெடியாகிக் கொண்டிருந்தது.

பக்கத்து வீட்டு ஃபாத்துமா, கீழத் தெரு மம்மாணி, ஜன்னத் என்று வீடே கலகலவென்று இருந்தது.

ஒரு மணி சுமாருக்கு வந்தார்கள். மாப்பிள்ளையின் உம்மா, வாப்பா, சச்சா என பத்துப் பேர்கள் வந்திருந்தனர். எல்லோரையும் வரவேற்று 
சம்பிரதாயமாக சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு இப்ராகிம் சாப்பிட அழைத்தார். பிரியாணி சிறப்பா? இல்ல தால்சா சிறப்பா? 
வாய்க்கு வாய் புகழ்ந்து கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.

" இன்சா அல்லா இந்த நிக்கா முடிஞ்சு நம்ம சின்ன பட்டிணத்துக்கும் அன்னவாசலுக்கும் விட்டுப்போன தொடர்பு எல்லாம் மீண்டும் 
கை கூடணும். நூரு குணத்தில் தங்கம். நாங்க ரெம்ப சொல்லக் கூடாது. நாளைக்கு நீங்க சொல்லணும்." என்று தாம்பூலத் தட்டிலிருந்த 
வெற்றிலை பாக்கை மென்று கொண்டே பெரியபள்ளி முத்தவல்லி மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

மாப்பிள்ளை வீட்டுத்தரப்பிலிருந்து வந்த பெண்கள் நூர் இருந்த அறைக்கு நகர்ந்தனர்.

நூரை சுற்றி இருந்தவர்கள் விலக ஜமக்காளத்தில் அமர்ந்திருந்த நூர் வேகமாக எழ முயற்சி செய்ய, மாப்பிள்ளையின் தாயார், 
"பரவாயில்லை உட்காரும்மா என்று உட்காரச் சொல்லி அருகில் உட்கார்ந்தார். வழக்கமான மாப்பிள்ளை வீட்டாரின் 
விசாரிப்புகள் நடந்தது. பின்னர் அவர்களுக்குள் ஒரு சிறு வட்டமேஜை கிசுகிசுப்புகள் எல்லாம் முடிந்த பின், எல்லோர் 
கண்களிலும் திருப்தி தெரிந்தது.

" எங்களுக்கு ஒன்ன புடுச்சிருக்கு.  "அபுவு"க்கும் நிச்சயம் பிடிக்கும். நிக்காவே வேணாம்னு இருந்தான். அது ஒனக்காகத்தான் 
போலிருக்கு. ஜவுளிக் கடைக்குப் பின்னாடியே வீடு இருக்கு. நிக்கா முடிஞ்சு நீங்க ரெண்டு பேரும்தான் அங்கு இருக்கனும்.

நாங்க பக்கத்து கிராமத்துல இருக்கோம். அவனுக்கு லாரி ஆக்சிடண்ட்ல கால் தான் போயிருச்சு. அவனுக்கு நீதான் கையும் 
காலுமா இருந்து எல்லாத்தையும் கவுனிச்சுக்கனும்," என்று மாப்பிள்ளையின் அம்மா சொன்னாள். என்ன சொல்வது, எப்படிச் 
சொல்வது என்று தெரியாமல் நூர் தலையை மட்டும் ஆட்டினாள்.

மனசுக்குள் இனம்புரியாத சந்தோச‌ம் பொங்க, உற்சாக மத்தாப்பூக்கள் மலர்ந்திருப்பதை அவள் முகம் வெளிச்சமிட்டுக் 
காட்டியது. எத்தனை வருடக் கனவுகள்? ஏக்கங்கள். உப்புக்கரித்த கன்னங்களில் இப்போது ஆனந்தக் கண்ணீர் 
ஆர்ப்பாட்டமாக இறங்கி இனிக்க வைத்திருக்கிறது. மகிழ்ச்சிப் பிரவாகம் அவளுக்குள் நடத்திக் கொண்டிருக்கும் 
வாணவேடிக்கைகளுக்குள் பரவசப்பட்டுப் போயிருந்தாள்.

" அப்ப நாங்க கெளம்புறோம்."- எல்லோரும் எழுந்து கொண்டார்கள். திடீரென அவர்கள் எழுந்ததும், சுய நினைவுக்கு வந்த 
நூர், தட்டுத் தடுமாறி கையை ஊன்றி எழுந்த போதுதான் எல்லோரும் அவளை முழுதாக கவனித்தனர்.


" அட இதென்ன? ஒனக்கு கால் இப்புடீன்னு சொல்லவே இல்லியே!? நல்ல வேளை இன்சா அல்லா என்னோட மகனை 
காப்பாற்றினார்." என்று உரத்துச் சொல்லிய மாப்பிள்ளையின் அம்மா வெளியே வந்தவர், பெண்ணுக்கு கால் ஒச்சம்னு 
சொல்லவே இல்லையே. எம் மகனுக்கும் கால் ஒச்சம் தான். அதுக்காக நாங்க நொண்டிப் பெண்ணை எடுக்க மாட்டோம்.

ஒரு வார்த்தை சொல்லாம நிக்காவ முடிச்சிறப் பாத்தீங்களே. நல்ல வேளை. எந்திரிங்க போவலாம்..." என்றார்.

இப்ராகிம் எதோ சொல்ல வந்தவரை, " போதும் நீங்க ஏதும் சொல்ல வேண்டாம். எங்களுக்கு இந்த நிக்காவில் 
விருப்ப‌மில்லை...வாங்க போகலாம்..." விடுவிடுவென்று எல்லோரும் வெளியேறிவிட்டனர்.

நூருவின் கதறல் அங்கிருந்தவர்களை உருக்குலையவைத்தது. வாராது போல் வந்த திருமணம், நிமிட‌ங்களில் நிர்மூலப்பட்டுப் 
போயிற்றே. அவள் மனதிற்குள் பூட்டிச் சிறை வைத்திருந்த ஏக்கங்களுக்கு விடிவு வந்துவிட்டதென எண்ணி ஆனந்தித்துப் 
போயிருந்த அந்தப் பொழுதுகளுக்கு அவ்வளவு சீக்கிரமாகவா ஆயுள் குறைவு நேர்ந்துவிட்டது?

அலைஅலையாய் ஆர்ப்பரித்த சந்தோஷங்கள் நொடியில் அடங்கிப் போனது. கண்ணீர் துளிகள், பன்னீர்துளிகளாக மாறிவிட்டது என்கிற
ஈர நினைவுகளில் நீந்திக் கொண்டிருந்தவளை, வக்கிர வார்த்தைக் கொதி நீரில் அல்லவா தூக்கி வீசிவிட்டார்கள். அவள் கனவுகள் 
வெடித்துச் சிதறியதில் வெளிப்பட்ட விம்மல்கள்... வேதனை கண்ணீர்த் துளிகள் கல்லையும் கரைத்து விடும்;

அவளின் கண்ணீர் துளிகளுக்கு மட்டும் சக்தியிருந்தால், திராவகத் துளிகளாக மாறி, வார்த்தைகளில் அக்கினியை விசிறிச் சென்றவர்களை 
வீழ்த்தியிருக்கும். நொறுங்கிச் சிதறிய அவள், இரத்தக் கண்ணீர் வடித்ததில் முகமே வீங்கி விட்டது. ஒரு மென்மையான மலரை 
வன்மையாகச் சிதைத்துவிட்டுப் போய் விட்டார்கள்.

"நூரு அழாதம்மா. ஒனக்குன்னு ஒருத்தன் இனிமே பொறக்கப் போறதில்ல. ஒனக்குன்னு பொறந்தவன அல்லாஹ் கொண்டுவந்து 
அவரா நிறுத்துவார். நீ அழாதம்மா..." என்று முத்தவல்லி ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தார்.

"பாய் அவள அழ விடுங்க; அழட்டும்.....அழட்டும் பாய்...அழட்டும்...அழுதாத்தான் அவ மனசு ஆறும். நிக்காவே வேணாம்னவள நான் 
தான்...நாந்தான்...என்னாலதான். ஆமீன் இதெல்லாம்... இந்தக் கொடுமையெல்லாம் பாக்க வேணாம்னுதான் போயிட்டியாம்மா..." 
என்று -சொல்லிக் குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தார் இப்ராகிம்.

யாரைத் தேற்றுவது என்று தெரியாமல் அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப் படுத்துவதில் தோற்றுப் போய் இருந்தார்கள்.

ஒரு கால் ஊனம் என்பது பெரும் குறையா? மனம் எப்படி? குணம் எப்படி? அதெல்லாம் பாக்க வேணாம்?

திருமணத்துக்கு முன்னால ஊனப்பட்டவளை வேண்டாண்டு சொல்றாங்க. இதுவே திருமணமாகி விபத்தில ஒரு காலோ, 
கையோ ஊனமானா அப்போ என்ன செய்வாங்க. மனைவியே வேண்டாம்ன்னு நிராகரிச்சுடுவாங்களா!? என்ன ஒலகமிது
என்று கலீமுல்லா மனம் பொறுக்காம இரைந்து சொல்லிக் கொண்டிருந்தான்.

அப்போது...

"அய்யா...அய்யா" என்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடி வந்த பக்கத்து வீட்டுச் சிறுவன், " ஒங்க வீட்டுக்கு வந்தவங்க மீது 
சந்தை ரோட்டுலருந்து வந்த பஸ் மோதீருச்சு. ஒரே கூட்டம்" என்றான் சிறுவன்.

"யா அல்லா... இதென்ன சோதனை..." என்ற இப்ராகிம் முத்தவல்லியை கூட்டிக் கொண்டு ஓடினார்.

மாப்பிள்ளையின் அம்மாவிற்குத்தான் தலையில் பலத்த அடி. வாப்பாவிற்கு முதுகிலும் தோள்பட்டையிலும் காயம். அரசு 
மருத்துவமனையின் கலவையான மருந்து நெடி மூக்கைத் துளைத்தது.

"ச‌மீலா உறவுக்காரங்க யாரு?"- என்றபடியே எமர்ஜன்சி வார்டிலிருந்து டாக்டர் வேகமாக வந்தார்.

இப்ராகிமும் முத்தவல்லியும் எழுந்து நின்றார்கள்.

"யார் நீங்களா... ஓ பாசிட்டிவ் ரெண்டு பாட்டில் வேணும். உறவுக்காரங்கள்ள கெடச்சா நல்லது.

இல்ல லயன்ஸ் கிளப்ல ட்ரை பண்ணுங்க. ஒரு மணி நேரத்தில எங்களுக்கு வேணும். இல்லன்னா நாங்க ஒன்ணும் செய்ய 
முடியாது என்ற மருத்துவ‌ர், அரசாங்க மருத்துவருக்கேயுள்ள இயந்திரத் தனத்தோடு, பதிலைக் கூட எதிர்பாராமல் போய்விட்டார்.

" என் மகளோட இரத்தம் 'ஓ' பாசிட்டிவ் தான் பத்து நிமிட‌த்துல வந்துர்றேன் " என்று முத்தவல்லியை இருக்க வைத்துவிட்டு 
இப்ராகிம் கிடைத்த டாக்சியில் வீட்டுக்குப் பறந்தார்.

* * *

" என்னை மன்னிச்சுரும்மா. ஒன்னை வேணாம்னு வந்தது அல்லாவுக்கே பொறுக்கல. கை மேல பலனக் கொடுத்துட்டார் 
பாத்தியா?" -என்றாள் ஜமீலா, மாப்பிள்ளையின் அம்மா.

" நீங்க பெரியவங்க அப்படி எல்லாம் சொல்லக்கூடாது." என்றாள் நூர்.

" உன் ரத்தம் குடுத்து என்னக் காப்பாத்தியிருக்க... நீ தான் என்னோட மருமக... இல்ல... என் மக " என்றாள் ஜமீலா.

இப்ராகிம் கண்கள் பனித்தன.

அப்போது அபு, ச‌மீலாவையும் நூரையும் நோக்கி 'டக்டக்' என கம்பீரமாக வந்து கொண்டிருந்தான்.

"ஒனக்குன்னு பொறந்தவன அல்லா கொண்டு வந்து அவரா நிறுத்துவார்னு " முத்தவல்லி சொன்ன வாக்குப் பலித்துவிட்டது.

இனி நூர் அழ மாட்டாள்!

திருமணங்கள் சொர்க்கத்தில் மட்டும் நிச்சயிக்கப் படுவதில்லை, அரசு மருத்துவமனைகளிலும் கூட நிச்சயிக்கப்படுகிறது!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக