சனி, 23 நவம்பர், 2013

<>நவீன்<>

                                  நவீன்

"அந்த விமானம் ஓடுபாதையிலிருந்து "விர்"ரென்று செங்குத்தாக மேலெழும்பிக் கிளம்பியது. விமானத்திலிருந்த ஐநூத்துச் 
சொச்சம் பயணிகளும் அவரவர் வேலைகளில் மூழ்கியிருந்தனர்.

அலுவலக வேலையாகச் செல்பவர்கள் கைகளிலிருந்த கோப்புகளிலும் மடிக்கணினிகளிலும் கண்ணும் கருத்துமாயிருக்க, இரவுத் தூக்கத்தைத் தொலைத்தவர்கள் தங்கள் கழுத்துப்பட்டையைத் தளர்த்தி தூக்கத்துக்கு மனுப்போடத் தயாராகிக்கொண்டிருக்க,  விமானப் பணிப்பெண்கள் குடிப்பதற்கும் கொறிப்பதற்கும் கொடுத்து நகர்ந்துகொண்டிருந்தார்கள்.

கைகளில் இருந்த ஆங்கில நாளிதழ் செய்திகளில் மேய்ந்துகொண்டிருந்தனர் சிலர்; ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்குமா? இராசபக்சேயைகுற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் நாள் வருமா என்றும், ஒருபக்கம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழக முதல்வர் செயலலிதா ஆதரவு தெரிவிப்பதும், இன்னொருபக்கம் முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்து அவர்களைக் கைதுசெய்வதும் அவர் திறமையான அரசியல் நடிகையே என்ற ஆராய்ச்சியில் 
சிலரும் ஈடுபட்டிருக்க, விமானம் முப்பதாயிரம் அடியைத் தொட்டுவிட்ட நிம்மதியில் மேகக் கற்றைகளிடையே நீந்தி சிகாகோ ஒகையர் விமான நிலையத்தை நோக்கிச் சீராகச் சென்று கொண்டிருந்தது.

திடீரென்று அத்தனை பேரையும் ஈர்க்கும் வகையில் ஒரு குரல்.....

" திஸ் ப்ளேனிஸ் ஹைஜாக்ட் பை மீ....ஹேண்ட்ஸ் அப்...டோண்ட் மூவ்... "

ஒரு இளைஞனின் குரலுக்கு பயணிகள் யோசிக்காமல் கட்டுப்பட்டனர். முன் வரிசையிலிருந்தும் நடுப்பகுதியிலிருந்தும் இர‌ண்டு, மூன்று தலைகள் இளைஞன் குரல் ஒலித்த இடம் நோக்கித் திரும்ப... "

நோ...நோ...யாரும் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் திரும்பக் கூடாது.
நான் அதிகம் பேசப் போறதில்லை. யாராவது, நான் ஒரு ஆள்தானே சமாளித்துப் பார்கலாம்ன்னு முயற்சி பண்ணுனீங்கன்னா நான் ஒங்களோட சண்டை போடப் போறதில்லை. என் கையிலிருக்கிற இந்தத் தானியங்கிப் பொத்தானை லேசா அழுத்தினாப் போதும்.


விமானம் மட்டுமில்ல நாம எல்லோருமே சுக்கு நூறா வெடிச்சுச் சிதறிடுவோம். நான் எந்த டவர்லயும் கொண்டு போய் இடிக்கப் போறதில்ல. உங்க எல்லோரையும் பணயமா வச்சு அரசாங்கத்துக்கிட்ட ஒரு பில்லியன் டாலர் கேக்கப்போறேன்.

அரசாங்கம் கொண்டு வந்து குடுக்குற வரை நீங்க எல்லாரும் என்னோட கஸ்ட்டடி!...."

" அதாவது இப்ப நான் போய் விமானி மூலமா அரசாங்கத்துக்கு செய்தி அனுப்புவேன். விமானம் சிகாகோ ஒகையர்ல எறங்குறதுக்குப் பதிலா, மிட்வே விமான நிலையத்துல போய் எறங்கும்.

உடனே உங்கள்ல ஒருத்தர் தான் விமானத்தை விட்டுக் கீழ இறங்கி அதிகாரிகளிடமிருந்து பணப்பெட்டியை வாங்கி வரணும். பணம் 
என் கைக்கு வந்ததும் உங்க எல்லோரையும் ரிலீஸ் பண்ணீட்டு விமானத்தை என்னோட நாட்டுல போய் எறங்கீட்டு விமானத்தை திருப்பி அனுப்புறதா உத்தேசம்.

அதனால எல்லாரும் அமைதியா, நல்ல பிள்ளைகளா ஒத்துழைப்புக் கொடுக்கணும், என்றான் இளைஞன். அவன் கையில் கால்குலேட்டர் சைசில் எதோ ஒன்று சின்னதாக இருந்தது.

சகலகலா வித்தையும் கற்ற ஏர் மார்சல் முன்புதான் அந்த இளைஞன் நின்று கொண்டிருந்தான். ஏர்மார்சல் தோளில் இருந்த துப்பாக்கியோ துவண்டு கிடந்தது. பயணிகள் கண்கள் கலவரத்தை நிறைத்து, மூச்சு விடுவதைக்கூட மெதுவாக விட்டுக்கொண்டிருந்தனர்.

மீண்டும் அந்த இளைஞன் பேசினான். இப்ப ஏர்மார்சலுடன் விமானியின் அறைக்குப் போகிறேன். நான் அரசாங்கத்துக்குச் செய்தி கொடுத்துட்டு வர்ற வரைக்கும் கையை எல்லாம் கீழ போட்டுட்டு, முன்னால பின்னால திரும்பாம சமர்த்தா இருந்தா நீங்க சிகாகோவில பத்திரமா இறங்க நான் பொறுப்பேத்துகுவேன்.

இல்லன்னா.... இல்ல நீங்க சமர்த்தா இருப்பீங்க..." என்று அவன் சொல்லி முடித்ததும் ரயில் போனதும் கைகாட்டி எறங்குற மாதிரி எல்லோரின் கைகளும் இறங்கின.

" நீங்க எந்திரிச்சு காக்பிட்டுக்குப் போங்க..." ஏர்மார்சலைப் பார்த்துச் சொல்ல ஆசிரியரின் கட்டளைக்கு கீழ்ப்படியும் மாணவன் போல ( அப்படிக்கூட மாணவர்கள் இருக்கிறார்களா, என்ன? ) ஏர்மார்சல் எழுந்து நடந்தார்.

" காக்பிட் கதவைத் திறந்ததும் என்னை லாவகமா வளைச்சுப் பிடிச்சுடலாம்னு மட்டும் நெனைக்காதீங்க மார்சல், என் கையிலிருக்கிற ரிமோட் கீழ விழுந்தாக்கூட அது உங்க உயிரைக் காப்பாத்தாது.. என்று இளைஞன் சொல்ல ஏர் மார்சல் மெளனமாக நடந்தார்.

ஏனோ விமானத்திலிருந்தவர்கள் விமானியின் அறைக் கதவு திறந்து மூடும் வரை இளைஞன் எப்படிப்பட்டவன் என்று பார்க்கக்கூட தலையைத் திருப்பாமல் பொம்மைகளாக இருந்தனர்.

ஆயிற்று. விமானி அறைக்குள் போய் அரைமணி நேரம் ஆகியும் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் விமானம் அதன் திசையில் சென்று கொண்டிருந்தது.

ஒரு பயணி தைரியமாக, செல்போனை எடுத்து யாருக்கோ பேசுவது மெல்லக் கேட்டது. உடனே பலர் தத்தம் செல் போன்களை எடுத்து தங்கள் வீட்டுக்கு தகவல் கொடுத்தனர்.

" ஹனி! மை ப்ளேன் ஹைஜாக்ட். எந்தடவரில் இடிக்கப் போறானோ!  ஐ லவ் யூ ஹனி! குட்பை ஹனி! " என்று ஒருவர் அவசரஅவசரமாகச் சொல்லி செல் போனை அணைத்தார்.

சிலர் செல் போனை எடுத்துவராமல் போயிட்டமே என்று வருந்தினர். சிலர் கண்களாலேயே பேசி அடுத்தவரிடமிருந்த செல்போனை வாங்கி தங்கள் கடைசி உரையாடல்களை நிகழ்த்திக் கொண்டிருந்தனர்.

ஒருவர் காக்பிட் டோரில் கண்களைப் பதித்துக்கொண்டு, 911க்குப் போன் செய்து, " தரையில நடந்தாத்தான் எங்களை காப்பாத்த வருவீங்களா? எங்க விமானம் கடத்தப்பட்டு சிகாகோ போறதப் பாத்தா சியர்ஸ் டவர்ல தான் போய் இடிப்பான் போல இருக்கு.

ஒரே ஒருத்தன் கில்லாடியா திட்டம் போட்டு கடத்துறான். பெண்ட்டகனுக்கு தகவல் குடுத்து எங்களைக் காப்பாத்த முடியுமான்னு பாருங்க..." என்று சிரமப்பட்டுச் சொல்லிவிட்டு எதோ என்னால் முடிஞ்சது என்று சொல்வது போல பக்கத்திலிருந்தவரைப் பார்த்தார்.

அவரோ, சியர்ஸ் டவர் 110 மாடியாச்சே...1707 அடி உயரமாச்சே....16,000 சன்னல் கண்கள் உள்ள அந்த டவரைத்தான் இடிக்கப் பிளான் பண்ணீருக்கானா? எவ்வளவு கலை நயத்தோட கட்டுன டவர்... அடப் பாவி மகனே... என்று தன் முடியிழந்த வழுக்கைத் தலையைத் 
தடவிக் கொண்டார்.

இவருக்கோ எரிச்சல். நம்ம உயிர் போறதப் பத்திக் கவலைப்படறோம். இந்த ஆள் என்னடான்னா டவர் போகப்போகுதேன்னு கவலைப்படறானே 
மனுசன் என்று உள்ளுக்குள் எண்ணினாலும், அது என்ன சியர்ஸ் டவர் இத்தினி அடி, இத்தனை சன்னல்ன்னு கரெக்டா எண்ணிப் பாத்த மாதிரியில்ல சொல்றீங்க?!ன்னு ஒரு கேள்வியைக் கேட்டார், இவர்.

" அட, என்னங்க இப்டிக் கேட்டுட்டீங்க. அந்தக் கட்டிடத்தை இராப்பகலா கட்டுன ஆயிரத்து அறுநூறு பேர்ல நானும் ஒருத்தன். என்னோட கொழந்தை மாதிரி. அந்த டவர் போர்த்தியிருக்கிற அலுமினியத் தோல் மாத்திரம் 28 ஏக்கர் பரப்பளவு! 76,000 டன் ஸ்டீல்!

அந்த பில்டிங்குக்கு காங்க்ரீட் மட்டும் எவ்வளவு போட்டுருப்பம் தெரியுமா? 5 மைல் நீளத்துக்கு எட்டு லேன்கள் உள்ள ஹைவே சாலையை 
உருவாக்குற அளவுக்கு காங்க்ரீட் போட்டுக் கட்டியது. அம்புட்டு ஒசர கட்டிடத்தையும் வெளிப்புறம் சுத்தம் செய்ற 6 தானியங்கி மெசின் அப்டீன்னு எவ்ளவு பாத்துப் பாத்துக் கட்டியது.

106 பேர் ஒரே சமயத்துல வான் தளம் ( sky deck ) போற மாதிரி ரெண்டு மின் தூக்கிகள் செஞ்சோம். 1353 அடி ஒயரத்துல இருக்குற வான் தளத்துக்கு நிமிசத்துல கொண்டுபோய் சேத்துடும். நீங்க சியர்ஸ் போயிருந்தீங்கன்னா தெரிஞ்சுருக்கும். சியர்ஸ் போயிருக்கீங்களா?

" சியர்ஸ் வழியா எத்தனையோ தடவை போயிருக்கேன். ஆனா மேல போய் பார்த்ததில்ல.... ·ப்ளைட் 111ல ஏறும்போதே என் மனைவி போகாதே....போகாதே என் கணவா பொல்லாத சொப்பனம் நேத்துக் கண்டேன்னு... சொன்னா... பேசாம அவ பேச்சைக் கேட்டுருக்கலாம்...." என்று சொல்லி ரெண்டு சொட்டுக் கண்ணீர் விட்டார்.  அவர் கவலை அவருக்கு!

பக்கவாட்டு வரிசையிலிருந்த ஒரு இளம்ஜோடி ரெம்ப சோகமா," நேத்துத்தான் நாங்க மேரேஜ் பண்ணிக்கிட்டோம். ஹனிமூன் போக பிளான் பண்ணோம். ஹெவன்லதான் எங்க ஹனிமூன் நடக்கணும்னுங்கிற விதி இருக்கும் போல இருக்கு.

கொஞ்சம் உங்க செல்போனை குடுங்க.... எங்க அப்பா அம்மாகிட்ட ஒரு குட்பை சொல்லிக்கிறோம் " என்று சொல்லும்போதே அந்த வாலிபனின் கண்கள் கண்ணீரைக் கொட்டியது. இளம் மனைவி மெளனமாக அழுது முகம் "ஜிவ்"வென சிவந்திருக்க மூக்கைச் சத்தம் வராமல் சிந்திக்கொண்டிருந்தார்.

"அம்மா... நான் மூத்திரம் போகணும்.... வா...வா என்று நிலைமை தெரியாமல் நச்சரித்துக் கொண்டிருக்க... கழிவறையில‌ யாரோ இருக்காங்க... சிவப்பு விளக்கு எரியுது.... கொஞ்ச நேரத்துல நாம சிகாகோ போய்டுவோம். கொஞ்சம் பொறுத்துக்க.. நல்ல பொண்ணுல்ல... சமர்த்துப் பொண்ணுல்ல... என்று அந்தச் சிறுமியைச் சமாளிக்க வெகு சிரமப்பட்டுக் கொண்டிருந்தார், அந்தத் தாய்.

47 டி இருக்கையில் அமர்ந்திருந்த நபர், தமக்கு அருகேயிருந்தவரை சைகையால் அழைத்து கீழே கையால் சுட்டிக் காட்ட அதைக் கண்ட அவரும் கலவரப் பார்வையைக் காட்ட, அவர்களுக்குப் பின்புறம் செல்போனும் கையுமாக இருந்த ஒருவர் எட்டிப் பார்க்க..... அவர்களின் திகில் நிறைந்த பார்வைக்குரிய பொருள் அந்த இளைஞனின் கைப்பெட்டி அங்கிருந்ததுதான் என்பதை உணர்ந்த அதே நேரத்தில் அந்தப்பெட்டியின் கைப் பிடியில் " நவீன் " என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்ததைப் பார்த்து விட்டார்.

" ஹைஜாக் பேர்வழியின் பெயரைக் கண்டுபிடிச்சுட்டேன். அவனோட பேர் நவீன்," என்றார் அவர்.

உடனே பக்கத்திலிருந்தவர், அது அவனோட ·பர்ஸ்ட் நேமா?
இல்ல லாஸ்ட் நேமா? என்ற கேள்வியை எழுப்பினார்.

" எந்த நாட்டுப் பேர் இது? மிடில் ஈஸ்ட் நேமா?! "

" அட நீங்க வேற! அந்தப் பெட்டியை சத்தமில்லாம எடுத்து விமானத்துக்கு வெளிய வீசணும். அதுலதான் "பாம்" வச்சிருப்பான். 
ஆனா, எப்டி அத வெளிய வீசுறது? "

" விண்டோ கண்ணாடிய ஒடச்சாவது வெளிய வீசீற வேண்டியதுதான்..."

" ஏங்க அது நடக்கிற வேலையா? நாம பெட்டிய எடுக்குற சமயத்துல அவன் வெளிய வந்து ரிமோட்டை அழுத்திட்டான்னா, நாம எல்லாம் பட்டுன்னு போய்ச் சேர்றதா என்ன? அவந்தான் ஒழுங்கா இருந்தா எல்லோரையும் கொண்டு போய் பத்திரமா விட்டு
விடுவேன்னுதான சொன்னான்?

இப்படி இவர்கள் விவாதித்துக் கொண்டிருக்கையில் சிகாகோ விமான நிலையத்தைத் தொடர்புகொண்டு, " நவீன் என்ற தீவிரவாதி விமானத்தை கடத்திக் கொண்டிருக்கிறான். ஏர்மார்சலை விமானி அறைக்கு கடத்திக்கொண்டு போயிருக்கான். கையில ஒரு ரிமோட் வச்சிருக்கான். எனக்கென்னமோ, அவன் பணத்தை வாங்கிக்கிட்டு எங்களை விட்டுர்ற பேர்வழி மாதிரி தெரியலை. மிட்வே ஏர்போர்ட்ல எறக்கி விடப்போறதா சொல்றான். ஆனா, எந்த டவரைக் குறி வச்சிருக்கானோ!? சியர்ஸ் டவர்தான் பெரிசு. எதுக்கும் கொஞ்சம் அங்க பந்தோபஸ்து போடச் சொல்லுங்கள். கூடவே எங்களையும் எப்படியாவது காப்பாத்தப் பாருங்க...!?" வேர்க்க விறுவிறுக்கச் சொல்லி முடிக்க

அருகிலிருந்தவர்கள், " என்ன சொல்றாங்க? நம்மள காப்பாத்தீருவாங்களா?... என்று கோரசாகக் கேட்க..... காக்பிட் கதவு திறக்கும் ஓசை கேட்க எல்லோரும் 
"வாய் மூடி" ஆயிட்டாங்க.

ஏர்மார்சல் துப்பாக்கி இப்போது இளைஞன் கையில்! ஏர்மார்சல் கைகளை மேலே தூக்கியவாறு முன்னால் வர நவீன் என்ற இளைஞன் பின்னால் வந்தான்.


" கொஞ்சப்பேர் நான் சொன்னதைக் கேட்டு நடந்துகிட்டீங்க.
கொஞ்சப் பேர் செல் போன் இருக்குங்கிறதுக்காக அங்கங்க தகவல் கொடுத்துட்டீங்க. சில பேர் கிட்ட செல் போன் இல்ல. இருந்திருந்தா நீங்களும் பேசியிருப்பீங்க... என்று இளைஞன் சொல்லத் துவங்க செல்போன் பேசியவர்கள் முகமெல்லாம் வெளிறிக் கொண்டிருந்தது.

பரவாயில்லை.... இந்த உலகத்துல பொறந்த எல்லாருக்குமே உயிர் மேல் ஆசை உள்ளவங்கதான். அரசாங்கத்துக்கிட்ட பேசியிருக்கேன். எல்லாம் நல்லபடியா முடிஞ்சா நீங்க எல்லாம் பத்திரமா அவங்கவங்க போக வேண்டிய எடத்துக்குப் போயிடலாம். யாராவது அவசரமா, ரெஸ்ட் ரூம் போகணும்ன்னா ஒவ்வொருத்தரா போய்ட்டு வரலாம், என்றான் அந்த இளைஞன்.

ஏனோ, யாரும் எழுந்து கழிவ‌றைப் பக்கம் போகவில்லை. சியர்ஸ் கோபுரத்தைக் கட்டியவர்களுள் ஒருவரான அந்தப் பெரிசு மட்டும் எழுந்தார். அந்த இளைஞனை ஒரு நிமிடம் பார்த்தார். அவன் கையிலிருக்கும் துப்பாக்கிக்கும் அந்த முகத்துக்கும் என்ன சம்பந்தம் என்பது போல அலசிவிட்டு என்ன நினைத்தாரோ மீண்டும் உட்கார்ந்து விட்டார்.

விமானம் சிகாகோ மிட்வே ஏர் போர்ட்டில் ஒரு சில நிமிடங்களில் இறங்கப் போவதாக விமானி அறிவித்த போது பயணிகளுக்கு தங்கள் காதுகளை நம்ப முடியாமல் ஆச்சரியத்தைக் கண்களில் நிறைத்து அந்த இளைஞனைப் பார்த்தனர். இளைஞனோ எந்தவிதமான பரபரப்புமின்றி விமானத்தின் வால் பகுதியிலுள்ள ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தான்.

சன்னலோரம் உட்கார்ந்திருந்த ஒருவர் வெளியே எட்டிப் பார்த்தவர் முகத்தில் சற்று திகில் பரவ அருகேயிருந்தவரிடம் ப்ளைட் மிட்வே ஏர்போர்ட்டுக்குப் போகலை. பிரசிடெண்ட்சியல் டவர் பக்கமா போகுது என்று கிசுகிசுக்க எதோ நடக்கப் போகிறது என்றெண்ணி தங்கள் கடைசி நேரக் கோரத்தை பார்க்க விரும்பாதது போல கண்களை இறுக்கமாகக் மூடிக் கொண்டனர்.

விமானம் பெருத்த ஓசையோடு தலை குப்புறப் பாய்வது போல ஒரு கணம் உணர்ந்த பயணிகள் அடுத்த நிமிடம் விமானம் தரையில் ஓடுவதையுணர்ந்த போதுதான் நின்றுபோன அவர்கள் இருதயம் ஓடத் துவங்கியது.

விமானம் ஓடுபாதையில் ஓடி நின்றது.

"யாரும் கீழே இறங்க முயற்சிக்கக்கூடாது. என் கைக்குப் பணப்பெட்டி வந்ததும் உங்களை எல்லாம் ரிலீஸ் பண்ணீருவேன், என்றான் இளைஞன்."

"பின் ட்ராப் சைலன்ஸ்" என்பார்களே அது போல அப்படியொரு அமைதி நிலவியது. பணப்பெட்டிய வாங்க யாரையாவது ஒருவரைக் கூப்பிடுவானே. எல்லோரும் என்னைக் கூப்பிட்டால் உடனே இறங்கி ஓடிவிட வேண்டும் என்று ஒரே நேரத்தில் எல்லோரும் 
நினைத்தார்களோ என்னவோ.

மரணத்தின் விளிம்பிலிருந்து 50 விழுக்காடு தப்பிவிட்டதாகக் கருதியவர்கள், தங்கள் உடமைகளைக்கூட விட்டுவிட்டு இறங்கி ஓடத் தயாராக இருக்கை விளிம்பில் உட்கார்ந்திருந்தனர்.

யாராவது ஒருவர் வாங்க....என்ற இளைஞன் குரலுக்கு ஒரே நேரத்தில் எல்லோருமே எழுந்திருக்க..." நோ...நோ.. எல்லாரும் 
உட்காருங்க. நீங்க மட்டும் வாங்க என்று சியர்ஸ் டவர் பெரியவரைத் தோளைத் தொட்டு அழைத்தான்.

தன் அருகில் அந்தப் பெரியவரை உட்காரச் சொன்னான். விமானச் சிப்பந்தியை அழைத்து கதவைத் திறக்கச் சொன்னான்.
எல்லோரும் பொம்மைகளாய்ப் போயிருக்க ஒருவர், தலையைத் திருப்பாமலே சன்னலுக்கு வெளியே பார்த்தார். போலீஸ் வாகனங்கள், துப்பாக்கி வீரர்கள் என்று குவிந்திருப்பது தெரிந்தது.

என்னா நடக்கப் போகிறதோ என்று பெருமூச்சு ஒன்றை மெதுவாக வெளியேற்றினார்.

அடுத்த சில நிமிடங்கள் பயணிகள் எதிர்பாராத சில விசயங்கள் மளமளவென நடந்தது.

விமானத்தின் கதவு திறக்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை வீரர்கள் மளமளவென்று விமானத்துக்குள் புகுந்தனர். சொல்லி வைத்தாற் போல அவர்களில் சிலர், வெவ்வேறு இடங்களில் அமர்ந்திருந்த நான்கு பேர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். பயணிகளில் பலர் கண்ணிமைகளை விலக்கிப் பார்த்து ஆச்சரியம் காட்டினர்.

அவர்கள் ஆச்சரியம் நீங்குவது போல, அப்போது உள்ளே நுழைந்த அமெரிக்க துணை அதிபர், " உங்கள் விமானப் பயணத்தில் ஏற்பட்ட 
அசெளகரியத்துக்கு வருந்துகிறேன்.

நான்கு தீவிர வாதிகளில் இருவர் பேசுவதைத் தற்செயலாய்க் கேட்டு அவர்கள் நால்வரையும் பற்றிய தகவல்களை எங்களுக்கு 
விமானி மூலம் தெரிவித்து தான் அதற்காக விமானத்தில் நடத்துகிற கடத்தல் நாடகத்தையும் சொன்னார். பிடிபட்ட தீவிரவாதிகள் 
மிக முக்கியமாக தேடப்பட்டுவரும் "அல்கேடா" தீவிரவாதிகளாவார்கள்.

நீங்கள் எல்லோரும் இங்கே பத்திரமாக வந்து சேரவும், தீவிரவாதிகளைக் கத்தியின்றி ரத்தமின்றி முழுதாகப் பிடித்து ஒப்படைத்தும், 
அதைவிட அந்தத் தீவிரவாதிகளின் திட்டப்படி ஏற்படவிருந்த பெருத்த உயிர், பொருட் சேதங்களைத் தன் புத்தி சாதுர்யத்தால் தவிர்த்த 
அகிம்சா மூர்த்தி காந்தி பிறந்த இந்தியாவைச் சேர்ந்த தமிழகச் சகோதரர் நவீன் அவர்களைப் பாராட்டுகிறேன்.

வெறுமனே பாராட்டினால் போதாது. தீவிரவாதிகள் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு பரிசளிக்கப்படும் என அமெரிக்க அரசு 
அறிவித்திருந்தது. அதன்படி பத்து மில்லியன் டாலர்களை பரிசாக அரசு அளிக்கும். அவரை நம் அதிபர் கெளரவிக்க விரும்புவதால் 
அழைத்துச் செல்ல நானே நேரில் வந்திருக்கிறேன்....." என்று சொல்லிக்கொண்டு போக ஆங்கெழுந்த கைதட்டல் ஆரவாரம் 
விமானம் தாண்டி வெளியே கேட்டது.

வேலை தேடி வந்த இடத்தில் அரசாங்க விருந்தாளியாக துணை அதிபரோடு ஒரு "கதாநாயகன்" போல அமெரிக்க அரசு விமானத்தில் நவீன் ஏற முன்பின் தெரியாத அந்த அமெரிக்க மக்கள் மகிழ்ச்சியோடு ஆரவாரித்து அவனை நோக்கி கை அசைத்தனர்.

                           <><>******<><>

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக