ஞாயிறு, 24 நவம்பர், 2013

<>கிறிஸ்துமஸ் பரிசு! - 1<>

                            கிறிஸ்துமஸ் பரிசு!

லிசாவின் கைகளில் கற்றையாக இருந்த பேப்பர்கள் காற்றில் படபடத்துக் கொண்டிருக்க மனசு மட்டும், மனம் போன போக்கில் எங்கெங்கோ சுற்றியலைந்து கொண்டிருந்தது. 

அவளின் கனவுலக சஞ்சரிப்புகளுக்கு அவள் பிரியமாக வளர்க்கும் 'மிரியம்' முற்றுப்புள்ளி வைத்தது. எங்கிருந்தோ ஓடிவந்த மிரியம் அவள் மடியில் 'தொப்'பென விழுந்ததுதான் காரணம். 

கைகளிலிருந்த பேப்பர்களை அருகிலிருந்த மேஜை மேல் வைத்துவிட்டு மிரியத்தை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தாள் 
லிசா. தொலைபேசியின் 'கிணுகிணு'ப்புச் சத்தம் கேட்கவே மிரியத்தை கீழிறக்கிவிட்டுவிட்டு தொலைபேசியை 
நோக்கிப் போனாள். 

லிசாவின் தங்கை மகள் 'ஏரின்' தான் பேசினாள்.

"ஆண்ட்டி எனக்கு கிறிஸ்மஸ் பரிசா ஒரு புக் வாங்கித்
தரவேண்டும்?"

"அப்படியா, என்னவிலை?"

"தர்ட்டி பக்ஸ்..."

"அவ்வளவுதானே, விடு கவலையை வாங்கித்தர்றேன்."

ஏரினிடம் பேசிவிட்டு வந்த லிசா, மீண்டும் வைத்த பேபர்களை எடுத்துப் பார்வையை ஓடவிட்டாள்.

ஏழாவதாக இருந்த அந்த பேப்பர் ஏற்படுத்திய பாதிப்பு மறுபடியும் லிசாவைச் சூழ்ந்து கொண்டது. 
மனது மீண்டும் யுத்தகளமாகிப் போனது.

"இவங்கெல்லாம் என்னை என்னன்ணு நெனைக்கிறாங்க? லிசா ஒரு பணம் அச்சடிக்கும் இயந்திரம்ன்னு 
நெனைக்கிறாங்களா? இருந்தாலும் ரோசிக்கு இவ்வளவு ஆசை கூடாது.

உறவுகளை நினைத்து ஒரு கணம் வெறுத்துத்தான் போனாள், லிசா.
அவளின் கவலைக்கு காரணம் இல்லாமல் இல்லை.

பொதுவா கிறித்துமசுக்கு, " எங்களுக்கு இதெல்லாம் தேவையான பொருள்கள், நீங்கள் வசதிப்பட்டதை அல்லது 
அனைத்தையும் வாங்கிக் கொடுக்கலாம்," என்று ஒரு லிஸ்ட்டை கிறித்துமசுக்கு முன்பாக உறவினர்களிடமிருந்தும் 
நண்பர்களிடமிருந்தும், சேவை மையங்கள், சர்ச்சுகளிலிருந்தும் வரும்.

இப்படி பொருள்கள் கோரி வந்த பட்டியல்களைத் தான் லிசா பார்த்துக்கொண்டிருந்தாள். கடைசித் தங்கை 
ரோசியிடமிருந்து வந்த கோரிக்கைப் பட்டியலில் ஒரே ஒரு கோரிக்கைதான் இருந்தது. என் காரை நிறுத்த 
ஒரு மகிழுந்து நிறுத்தும் கூடம் தேவை.

உத்தேச மதிப்பீடு என அடைப்புக் குறிக்குள் "பத்தாயிரம் டாலர்" கண் சிமிட்டிக் கொண்டிருந்தது. இதுதான் லிசாவிற்குள் யுத்தம் மூளக் காரணமாய் இருந்தது.

தனியார் நிறுவனமொன்றின் தலைமை நிர்வாகியாக இருக்கும் லிசா திருமணம் என்று தன்னை கட்டிப்போட்டுக் 
கொள்ளவில்லை நாற்பத்தி ஐந்து வயது ஆனாலும் முப்பது வயதே மதிக்கத்தக்க தோற்றம். சொந்த வீடு, கார், நல்ல
வேலை இதைவிட வேறு என்ன வேண்டும்? போதும் போததற்கு அப்பா இறந்ததும் லிசாவின் பங்கிற்கு அப்பாவின் கிராமத்துப் பண்ணை வீடு, கொஞ்சம் நிலம் எல்லாம் அவளை வசதியின் விளிம்புகளில் தூக்கி வைத்திருந்தது.

லிசாவின் இரண்டு அண்ணன்களும் இரண்டு தங்கைகளும், ஒரு அக்காவும் திருமணமாகி நல்ல நிலையிலிருக்கிறார்கள்.  ஆனாலும் லிசாவிடம், அது வேண்டும் இது வேண்டும் என்று அக்காவும் தங்கைகளும் பிச்சுப்பிடுங்கி எடுத்துவிடுவார்கள்.  லிசாவும் மனம் சலிக்காமல் செய்வாள்.

வருடாவருடம் கிறித்துமசுக்கு மட்டும் பத்து முதல் பதினைந்தாயிரம் டாலர்கள் வரை செலவு செய்வாள். நெருங்கிய, தூரத்து உறவுகள் என்று வித்தியாசம் பார்க்காமல் எல்லோரையும் திருப்திப்படுத்துவாள்.

இந்த முறை கிறித்துமசுக்கு இருபதாயிரம் டாலர் தேவைப்படும் என கணக்குப் போட்டுக் கொண்டிருந்தபோதுதான் தங்கை ரோஸியின் கோரிக்கை, திடீரென உறவுகளின் மீது ஒரு வெறுப்பு நெருப்பை லிசாவிற்குள் உற்பத்திசெய்தது;

இன்னும் கிறித்துமசுக்கு எத்தனை நாள் இருக்கிறது? லிசாவின் மனம் கணக்குப் போட்டது. பதினாறு நாட்கள்.
இப்படிச் செய்தால் என்ன? அவளின் மூளையில் மின்னல் கீற்றாக அந்த எண்ணம் உதித்தது.

எத்தனையோ வருடங்கள் ஒத்திப்போட்ட விஷயம். அதை செயல் படுத்தினால் என்ன? லிசாவின் மனம் "விசா" இல்லாமல் கண்டம்
விட்டு கண்டம் தாண்டிப் பயணப்பட்டது;

லண்டனில் வில்லியம்சு குடும்பத்தாரோடு சிறிது நாளும் ஆத்திரேலியாவில் மேக்கி வீட்டிலும் அப்படியே சென்னையில்
அமலி வீட்டுக்கும் விசிட் அடித்தால் என்ன?! மேக்கி என்னைக் கண்டு விட்டுவிடுவாளா, என்ன?

மெல்பெர்னில் உள்ள அவளின் 'தோட்ட வீடு' ஓ! மை காட்.... நினைத்தாலே இனிக்கிறதே...! அமலி மட்டும் என்ன?

வா,வாவென்று சொல்லி அலுத்தல்லவா போய்விட்டாள்.

" என் சொந்த ஊரான கடற்கரை கிராமத்திற்கு கூட்டிப் போவேன். அங்குள்ள தென்னந்தோப்பில் பொழுதை 
இனிமையாகக் களிக்கலாம். எங்க கடற்கரையழகினை ஒரு முறை ரசித்துவிட்டால் ஃப்ளோரிடா கடற்கரைப் பக்கம் 
எட்டிக்கூடப் பார்க்க மாட்டீர்கள்" என வரிந்து,வரிந்து எழுதியிருந்தாளே! அந்த ஊர் பெயர்கூட கன்...குமாரி... ஓ! 
ஐ ஆம் ஸாரி...கேப்காமரீனா? எதோ ஒன்று.

இந்தவருடம் கிறித்துமசு, " எனக்கே ...எனக்குத்தான்.

" அவளுள் உற்சாகம் கொப்பளித்தது; சந்தோசிப்புகளில் அவள் மனம் பொங்கிப் பிரவகித்தது. கண்களை மூடிக்கொண்டு 
கற்பனை உலா போவதில்கூட எவ்வளவு இனிமை?

அப்படியே அந்தப்பொழுதுகளில் மனம் லேசாகி...லேசாகி இலவம் பஞ்சாய் பறந்து போவது நிரந்தரமாகிடாதா? 
என்ற ஏக்கம் அவளுள் ஒட்டிக் கொண்டது.

கிறித்துமசுப் பரிசுப் பொருள்கள் கோரிவந்த கடிதங்களில் சேவைச் சங்கங்களிடமிருந்து வந்ததை மட்டும் எடுத்து 
வைத்துக்கொண்டு மற்றவற்றை மடித்துச் சுருட்டி குப்பைக் கூடையில் போட்டாள்.

அட... ஏரின் ரொம்ப ஆசையா புத்தகம்கேட்டாளே... என்று உள் மனம் நினைவு கூர்ந்தது. கூடவே அடி மனம் ஒரு 
அதட்டல் போட்டது.
" நோ... நோ... இந்த வருடம் கிறிஸ்மஸ் ஷேரிங்...கேரிங்... எதுவும் கிடையாது." -லிசாவிற்குள் வலிய ஒரு இரும்புத்
திரை இறங்கி வாரி வழங்கும் எண்ணக் குவியலுக்கு வணக்கம் சொன்னது.

மெல்லிய பட்டுத்திரையொன்று பூங்காற்றாய் விலகி புத்துலகப் பயணத்துக்கு பூபாளம் சொன்னது.

வணக்கம்... வந்தனம் அவளுக்குள் மிசிசிப்பி நதி போல ஜில்லிப்பாக பாய சிலிர்த்துக்கொண்டாள்.

மறுநாள், மளமளவென புறப்படுகைக்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டாள். லண்டன், ஆஸ்திரேலியா, சென்னை 
என தொடர்பு கொண்டு தனது வருகை குறித்துத் தெரிவித்தாள். சந்தோச நதியின் இரு கரைகளிலும் ஆனந்த 
அலைகள் ஆரவாரித்தது; லிசாவுக்குள் இவ்வளவு குதூகலமா?! அவள் முகம்தான் எப்படி ஜொலிக்கிறது! என்ன 
விசேசம்? என அலுவலகத்தில் ஆளாளுக்குத் துளைத்து எடுத்தனர். எல்லாருக்கும் புன்முறுவலைப் பதிலாகத் 
தந்து நழுவினாள்.

நாளை மாலை விமானத்தில் நியூயார்க் வழியாக லண்டன் புறப்படவேண்டும். உறவுகளுக்கோ நண்பர்களுக்கோ இது பற்றி
மூச்சு காட்டவில்லை; அலுவலகத்தில் நெருங்கிய ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்கு மூன்று மாத விடுப்பில் செல்வது மட்டும்
தான் தெரியும்.

பிரயாணத்துக்கு தேவையான ஒன்றிரண்டை வாங்கிக் கொள்ளலாம் என "டார்கெட்" டில் நுழைந்தாள்.

ஒரே கூட்டம். எள் போட்டால் எண்ணெய் எடுத்துக்கொள்ளலாம். அவ்வளவு கூட்டம். கிறித்துமசு நெருங்க, நெருங்க 
இப்படித்தான் கூட்டம் அலைமோதும். கையிருப்பைத் தீர்க்க நாளுக்கு நாள் தள்ளுபடி, ஒன்று வாங்கினால் ஒன்று 
இலவசம், எதை எவ்வளவு விலையில் வாங்கினாலும் இன்னொன்றை 99சென்ட்டிற்கு வாங்கிக்கொள்ளலாம் என்ற 
அறிவிப்புகள்தான் மக்களை கடைகடையாய் அள்ளிச் சேர்க்கிறது;

லிசா தேவையானதை எடுத்துக்கொண்டு கவுண்ட்டர் பக்கம் வந்தாள். பத்து, இருபது கவுண்ட்டர்கள் இருந்தும் நீண்ட 
இரயில் வண்டி போல மக்கள் கியூ நின்றிருந்தது. லிசா ஐந்து பொருட்களும் அதற்கு குறைவான பொருட்களும் 
என்றிருந்த அறிவிப்புக் கவுண்ட்டர் வரிசையில் பொறுமையாக காத்திருந்தாள்.

" வீட்டுக்குப் போய் முதலில் குளிக்கவேண்டும். அப்போதுதான் இந்த அலுப்பு போகும். நாளை இந் நேரம் கற்றை, 
கற்றையான மேகக் கூட்டங்களில் நுழைந்து நம் விமானம் பயணித்துக் கொண்டிருக்கும். வில்லியம் வழிமேல் விழி 
வைத்து 'ஹீத்ரூ' வில் தன் பரிவாரங்களோடு காத்திருப்பார். கலவையாக எண்ணங்கள் மனத்திரையில் மாறி, மாறி 
ஓடிக்கொண்டிருந்தது.

" அட... ஏரின் கேட்ட அந்தப் புத்தகம். " 'சேல்' அட்டைக்கு கீழிருந்ததை லிசா கவனித்துவிட்டாள். சட்டென்று 
அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டாள். கிரடிட் கார்டைக் கொடுத்து கணக்கை முடித்துக் கொண்டு 
வெளியே வந்தபோது, தலைவலி மண்டையை இரண்டாகப் பிளப்பது போல இருந்தது, லிசாவுக்கு.

காரை எடுத்துக்கொண்டு வீட்டில் போய் விழுந்தால் போதும் என 70, 80 என ஒரே விரட்டாக விரட்டிப்போனாள். 
நல்லவேளையாக போலீஸ் கார் எதுவும் தட்டுப்படவில்லை. தட்டுப்பட்டிருந்தால் காரின் வண்ணவண்ண விளக்குகளை 
போட்டுக் காண்பித்து ஏழெட்டுப் பாய்ண்ட்டாவது வர்ற மாதிரி டிக்கட் போட்டிருக்கக் கூடும்;

வாசிங்டன் அவென்யூவில் சிக்னலுக்காக நிறுத்திக் காரைக் கிளப்பிய நொடிப் பொழுதில், " ஓ!காட்!.." என்ற 
அலறலுடன் சடன் பிரேக் போட்டு நிறுத்தினாள். கார் முன்பாக, தலை குப்புற சிறுமி ஒருத்தி கிடந்தாள்.

ஓ...மை ஜீசஸ்!?... லிசா சிறுமியைப் புரட்டித் தூக்கினாள்.

"ஐ'ம் டெட்... டெட்..." என்று கண்களை இறுக மூடிக் கொண்டே சொன்ன சிறுமியிடம், நீ நல்லா இருக்கே...கண்ணைத் திறந்து
என்னைப் பார்" என்றாள்.

"இல்ல... நான் செத்துட்டேன்...ம்ம்...ம்ம்... நான் செத்துட்டேன்..." என்றாள் சிறுமி அழுது கொண்டே.

" கண்ணைத் தெறந்து பார்... நீ சாகல... நல்லா இருக்க. வா, மெக்டனால்டுல எதாவது சாப்பிடலாம்," என்றாள் லிசா.

" ஐயோ... நான் சாகலையா? அப்ப என்னை சாகடிச்சுருங்க..." என்று விசும்பி, விசும்பி அந்தப் பிஞ்சு அழத் துவங்க 
லிசாவால் சமாதானப்படுத்த இயலவில்லை. அவளுக்கோ ஏற்கனவே தலைவலி. "நீ சாக என் கார்தானா கெடச்சுது. 
சரியான சாவுகிராக்கி," என்று லிசாவால் அந்தச் சிறுமியை ஓரம் கட்டிவிட்டுச் செல்ல முடியவில்லை.

ஒருவழியாக அவள் விருப்பத்தை பூர்த்தி செய்வதாகச் சொல்லி
காரின் பின்சீட்டில் படுக்கவைத்து வீட்டுக்கு கூட்டி வந்தாள்.

சிறுமிக்கு ஜூஸ் கொடுத்து," உன் பெயர் என்ன? " என்று கேட்டாள்.

ஜூஸை வாங்க மறுத்ததோடு, "நான் சாகணும்... நான் சாகணும்," என திருப்பி,திருப்பிச் சொல்லி அழுதாள்.

"இது என்ன சோதனை? எனக்கு ஏன் இப்படி நிகழுகிறது?

ஓ! இயேசு பாலனே!" என்று குடிலில் இருந்த இயேசு பாலகனை
நோக்கி ஒரு நொடிப் பொழுது கண்களை மூடித் தியானித்தாள்.

"தாகத்தால் தவிப்பவனுக்கு தாகம் தீர உதவு; உண்ண உணவில்லாதவனுக்கு உணவு கொடு; உடுக்க 
உடையில்லாதவனுக்கு உடைகொடு; உண்மையில் நீ அவர்களுக்குச் செய்வது எனக்கே செய்தது போல" 
என்று குழந்தை இயேசு சொல்லிச் சிரிப்பது போல லிசாவுக்குப் புலப்பட்டது.


"ஓகே! நீ சாகணும். அவ்வளவுதானே. நானே ஏற்பாடு பண்றேன்.  அதுக்கு முன்னால நீ, ஏன்? எதுக்காக சாகணும்? 
எனக்குச் சொல்.  நான், நீ சாக ஏற்பாடு பண்றேன். சரியா?" என்றாள்.

"என் அப்பா சாகறதுக்கு முன்னால நான் செத்துப் போகணும். அதான்..."

"ஏன், உன் அப்பா சாகவேண்டும்?"

"எங்க அப்பாவுக்கு எதோ வியாதி. அதுக்கு நெறையா செலவாகுமாம். இன்சூரன்ஸ் இல்லியாம். அதுக்கெல்லாம் 
எங்களுக்கு வசதி இல்லை. இன்னைக்கு, நாளைக்கு செத்துருவார்னு சொல்லீட்டாங்க. அம்மா இல்லை. அப்பா 
இருந்தார்.  அவரும் போய்ட்டா எனக்கு யார் இருக்காங்க? அப்பா, அம்மாட்ட போய் சேந்துருவாங்களாம்.

நானும் செத்துப்போய்ட்டா... அப்பா அம்மாவோட சேர்ந்து கிறித்துமசு கொண்டாடலாமே! அதுக்காகத்தான் நான் 
சாகணும். ப்ளீஸ் ஐ வாண்ட் டு பி டெட். ப்ளீஸ்... கில் மீ... கில்... மீ... " கதறுகிறது அந்தப் பிஞ்சு.

பாவம். கலைந்த முடி. கிழிந்த ஆடை. அவள் இந்தக் கிறித்துமசுக்கு நல்ல உடை கேட்கவில்லை; பசித்துப் பசித்து 
ஒரு ரொட்டித் துண்டுக்குக் கூட வழியில்லாத நிலையில் புசிப்பதற்கு எதுவும் கேட்கவில்லை; அவள் கேட்கும் கிறித்துமசு 
பரிசு, சாவு... மரணம். லிசாவால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அந்த முகவரி அறியாச் சிறுமிக்காக 
லிசா மனசுக்குள் பெருங்குரலெடுத்துக் கதறியழுதாள்.

அந்த அழுக்குச் சிறுமியை அப்படியே வாரி எடுத்து, வாய்விட்டுக் கதறவும் செய்தாள்.

இடி, இடித்துப் பெய்யும் கோடை மழை ஓய்ந்த பிறகு வானம் வெளி வாங்கிப் "பளிச்" சென வெளிச்சம் பாய்ச்சுவதைப் 
போல, அழுது ஓய்ந்த லிசாவின் கண்களில் ஒரு தெளிவு தீர்க்கமாகத் தெரிந்தது.

எத்தனையோ முறை ஒத்திவைக்கப்பட்ட லண்டன், ஆத்திரேலியா, சென்னைக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

உறவுகளின் கதவுகளை இழுத்துச் சாத்த எண்ணிய லிசாவுக்கு இன்னொரு புது உறவு !

                                                     <>########<>

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக