ஞாயிறு, 24 நவம்பர், 2013

<>கிறிஸ்துமஸ் பரிசு! - 1<>

                            கிறிஸ்துமஸ் பரிசு!

லிசாவின் கைகளில் கற்றையாக இருந்த பேப்பர்கள் காற்றில் படபடத்துக் கொண்டிருக்க மனசு மட்டும், மனம் போன போக்கில் எங்கெங்கோ சுற்றியலைந்து கொண்டிருந்தது. 

அவளின் கனவுலக சஞ்சரிப்புகளுக்கு அவள் பிரியமாக வளர்க்கும் 'மிரியம்' முற்றுப்புள்ளி வைத்தது. எங்கிருந்தோ ஓடிவந்த மிரியம் அவள் மடியில் 'தொப்'பென விழுந்ததுதான் காரணம். 

கைகளிலிருந்த பேப்பர்களை அருகிலிருந்த மேஜை மேல் வைத்துவிட்டு மிரியத்தை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தாள் 
லிசா. தொலைபேசியின் 'கிணுகிணு'ப்புச் சத்தம் கேட்கவே மிரியத்தை கீழிறக்கிவிட்டுவிட்டு தொலைபேசியை 
நோக்கிப் போனாள். 

லிசாவின் தங்கை மகள் 'ஏரின்' தான் பேசினாள்.

"ஆண்ட்டி எனக்கு கிறிஸ்மஸ் பரிசா ஒரு புக் வாங்கித்
தரவேண்டும்?"

"அப்படியா, என்னவிலை?"

"தர்ட்டி பக்ஸ்..."

"அவ்வளவுதானே, விடு கவலையை வாங்கித்தர்றேன்."

ஏரினிடம் பேசிவிட்டு வந்த லிசா, மீண்டும் வைத்த பேபர்களை எடுத்துப் பார்வையை ஓடவிட்டாள்.

ஏழாவதாக இருந்த அந்த பேப்பர் ஏற்படுத்திய பாதிப்பு மறுபடியும் லிசாவைச் சூழ்ந்து கொண்டது. 
மனது மீண்டும் யுத்தகளமாகிப் போனது.

"இவங்கெல்லாம் என்னை என்னன்ணு நெனைக்கிறாங்க? லிசா ஒரு பணம் அச்சடிக்கும் இயந்திரம்ன்னு 
நெனைக்கிறாங்களா? இருந்தாலும் ரோசிக்கு இவ்வளவு ஆசை கூடாது.

உறவுகளை நினைத்து ஒரு கணம் வெறுத்துத்தான் போனாள், லிசா.
அவளின் கவலைக்கு காரணம் இல்லாமல் இல்லை.

பொதுவா கிறித்துமசுக்கு, " எங்களுக்கு இதெல்லாம் தேவையான பொருள்கள், நீங்கள் வசதிப்பட்டதை அல்லது 
அனைத்தையும் வாங்கிக் கொடுக்கலாம்," என்று ஒரு லிஸ்ட்டை கிறித்துமசுக்கு முன்பாக உறவினர்களிடமிருந்தும் 
நண்பர்களிடமிருந்தும், சேவை மையங்கள், சர்ச்சுகளிலிருந்தும் வரும்.

இப்படி பொருள்கள் கோரி வந்த பட்டியல்களைத் தான் லிசா பார்த்துக்கொண்டிருந்தாள். கடைசித் தங்கை 
ரோசியிடமிருந்து வந்த கோரிக்கைப் பட்டியலில் ஒரே ஒரு கோரிக்கைதான் இருந்தது. என் காரை நிறுத்த 
ஒரு மகிழுந்து நிறுத்தும் கூடம் தேவை.

உத்தேச மதிப்பீடு என அடைப்புக் குறிக்குள் "பத்தாயிரம் டாலர்" கண் சிமிட்டிக் கொண்டிருந்தது. இதுதான் லிசாவிற்குள் யுத்தம் மூளக் காரணமாய் இருந்தது.

தனியார் நிறுவனமொன்றின் தலைமை நிர்வாகியாக இருக்கும் லிசா திருமணம் என்று தன்னை கட்டிப்போட்டுக் 
கொள்ளவில்லை நாற்பத்தி ஐந்து வயது ஆனாலும் முப்பது வயதே மதிக்கத்தக்க தோற்றம். சொந்த வீடு, கார், நல்ல
வேலை இதைவிட வேறு என்ன வேண்டும்? போதும் போததற்கு அப்பா இறந்ததும் லிசாவின் பங்கிற்கு அப்பாவின் கிராமத்துப் பண்ணை வீடு, கொஞ்சம் நிலம் எல்லாம் அவளை வசதியின் விளிம்புகளில் தூக்கி வைத்திருந்தது.

லிசாவின் இரண்டு அண்ணன்களும் இரண்டு தங்கைகளும், ஒரு அக்காவும் திருமணமாகி நல்ல நிலையிலிருக்கிறார்கள்.  ஆனாலும் லிசாவிடம், அது வேண்டும் இது வேண்டும் என்று அக்காவும் தங்கைகளும் பிச்சுப்பிடுங்கி எடுத்துவிடுவார்கள்.  லிசாவும் மனம் சலிக்காமல் செய்வாள்.

வருடாவருடம் கிறித்துமசுக்கு மட்டும் பத்து முதல் பதினைந்தாயிரம் டாலர்கள் வரை செலவு செய்வாள். நெருங்கிய, தூரத்து உறவுகள் என்று வித்தியாசம் பார்க்காமல் எல்லோரையும் திருப்திப்படுத்துவாள்.

இந்த முறை கிறித்துமசுக்கு இருபதாயிரம் டாலர் தேவைப்படும் என கணக்குப் போட்டுக் கொண்டிருந்தபோதுதான் தங்கை ரோஸியின் கோரிக்கை, திடீரென உறவுகளின் மீது ஒரு வெறுப்பு நெருப்பை லிசாவிற்குள் உற்பத்திசெய்தது;

இன்னும் கிறித்துமசுக்கு எத்தனை நாள் இருக்கிறது? லிசாவின் மனம் கணக்குப் போட்டது. பதினாறு நாட்கள்.
இப்படிச் செய்தால் என்ன? அவளின் மூளையில் மின்னல் கீற்றாக அந்த எண்ணம் உதித்தது.

எத்தனையோ வருடங்கள் ஒத்திப்போட்ட விஷயம். அதை செயல் படுத்தினால் என்ன? லிசாவின் மனம் "விசா" இல்லாமல் கண்டம்
விட்டு கண்டம் தாண்டிப் பயணப்பட்டது;

லண்டனில் வில்லியம்சு குடும்பத்தாரோடு சிறிது நாளும் ஆத்திரேலியாவில் மேக்கி வீட்டிலும் அப்படியே சென்னையில்
அமலி வீட்டுக்கும் விசிட் அடித்தால் என்ன?! மேக்கி என்னைக் கண்டு விட்டுவிடுவாளா, என்ன?

மெல்பெர்னில் உள்ள அவளின் 'தோட்ட வீடு' ஓ! மை காட்.... நினைத்தாலே இனிக்கிறதே...! அமலி மட்டும் என்ன?

வா,வாவென்று சொல்லி அலுத்தல்லவா போய்விட்டாள்.

" என் சொந்த ஊரான கடற்கரை கிராமத்திற்கு கூட்டிப் போவேன். அங்குள்ள தென்னந்தோப்பில் பொழுதை 
இனிமையாகக் களிக்கலாம். எங்க கடற்கரையழகினை ஒரு முறை ரசித்துவிட்டால் ஃப்ளோரிடா கடற்கரைப் பக்கம் 
எட்டிக்கூடப் பார்க்க மாட்டீர்கள்" என வரிந்து,வரிந்து எழுதியிருந்தாளே! அந்த ஊர் பெயர்கூட கன்...குமாரி... ஓ! 
ஐ ஆம் ஸாரி...கேப்காமரீனா? எதோ ஒன்று.

இந்தவருடம் கிறித்துமசு, " எனக்கே ...எனக்குத்தான்.

" அவளுள் உற்சாகம் கொப்பளித்தது; சந்தோசிப்புகளில் அவள் மனம் பொங்கிப் பிரவகித்தது. கண்களை மூடிக்கொண்டு 
கற்பனை உலா போவதில்கூட எவ்வளவு இனிமை?

அப்படியே அந்தப்பொழுதுகளில் மனம் லேசாகி...லேசாகி இலவம் பஞ்சாய் பறந்து போவது நிரந்தரமாகிடாதா? 
என்ற ஏக்கம் அவளுள் ஒட்டிக் கொண்டது.

கிறித்துமசுப் பரிசுப் பொருள்கள் கோரிவந்த கடிதங்களில் சேவைச் சங்கங்களிடமிருந்து வந்ததை மட்டும் எடுத்து 
வைத்துக்கொண்டு மற்றவற்றை மடித்துச் சுருட்டி குப்பைக் கூடையில் போட்டாள்.

அட... ஏரின் ரொம்ப ஆசையா புத்தகம்கேட்டாளே... என்று உள் மனம் நினைவு கூர்ந்தது. கூடவே அடி மனம் ஒரு 
அதட்டல் போட்டது.
" நோ... நோ... இந்த வருடம் கிறிஸ்மஸ் ஷேரிங்...கேரிங்... எதுவும் கிடையாது." -லிசாவிற்குள் வலிய ஒரு இரும்புத்
திரை இறங்கி வாரி வழங்கும் எண்ணக் குவியலுக்கு வணக்கம் சொன்னது.

மெல்லிய பட்டுத்திரையொன்று பூங்காற்றாய் விலகி புத்துலகப் பயணத்துக்கு பூபாளம் சொன்னது.

வணக்கம்... வந்தனம் அவளுக்குள் மிசிசிப்பி நதி போல ஜில்லிப்பாக பாய சிலிர்த்துக்கொண்டாள்.

மறுநாள், மளமளவென புறப்படுகைக்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டாள். லண்டன், ஆஸ்திரேலியா, சென்னை 
என தொடர்பு கொண்டு தனது வருகை குறித்துத் தெரிவித்தாள். சந்தோச நதியின் இரு கரைகளிலும் ஆனந்த 
அலைகள் ஆரவாரித்தது; லிசாவுக்குள் இவ்வளவு குதூகலமா?! அவள் முகம்தான் எப்படி ஜொலிக்கிறது! என்ன 
விசேசம்? என அலுவலகத்தில் ஆளாளுக்குத் துளைத்து எடுத்தனர். எல்லாருக்கும் புன்முறுவலைப் பதிலாகத் 
தந்து நழுவினாள்.

நாளை மாலை விமானத்தில் நியூயார்க் வழியாக லண்டன் புறப்படவேண்டும். உறவுகளுக்கோ நண்பர்களுக்கோ இது பற்றி
மூச்சு காட்டவில்லை; அலுவலகத்தில் நெருங்கிய ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்கு மூன்று மாத விடுப்பில் செல்வது மட்டும்
தான் தெரியும்.

பிரயாணத்துக்கு தேவையான ஒன்றிரண்டை வாங்கிக் கொள்ளலாம் என "டார்கெட்" டில் நுழைந்தாள்.

ஒரே கூட்டம். எள் போட்டால் எண்ணெய் எடுத்துக்கொள்ளலாம். அவ்வளவு கூட்டம். கிறித்துமசு நெருங்க, நெருங்க 
இப்படித்தான் கூட்டம் அலைமோதும். கையிருப்பைத் தீர்க்க நாளுக்கு நாள் தள்ளுபடி, ஒன்று வாங்கினால் ஒன்று 
இலவசம், எதை எவ்வளவு விலையில் வாங்கினாலும் இன்னொன்றை 99சென்ட்டிற்கு வாங்கிக்கொள்ளலாம் என்ற 
அறிவிப்புகள்தான் மக்களை கடைகடையாய் அள்ளிச் சேர்க்கிறது;

லிசா தேவையானதை எடுத்துக்கொண்டு கவுண்ட்டர் பக்கம் வந்தாள். பத்து, இருபது கவுண்ட்டர்கள் இருந்தும் நீண்ட 
இரயில் வண்டி போல மக்கள் கியூ நின்றிருந்தது. லிசா ஐந்து பொருட்களும் அதற்கு குறைவான பொருட்களும் 
என்றிருந்த அறிவிப்புக் கவுண்ட்டர் வரிசையில் பொறுமையாக காத்திருந்தாள்.

" வீட்டுக்குப் போய் முதலில் குளிக்கவேண்டும். அப்போதுதான் இந்த அலுப்பு போகும். நாளை இந் நேரம் கற்றை, 
கற்றையான மேகக் கூட்டங்களில் நுழைந்து நம் விமானம் பயணித்துக் கொண்டிருக்கும். வில்லியம் வழிமேல் விழி 
வைத்து 'ஹீத்ரூ' வில் தன் பரிவாரங்களோடு காத்திருப்பார். கலவையாக எண்ணங்கள் மனத்திரையில் மாறி, மாறி 
ஓடிக்கொண்டிருந்தது.

" அட... ஏரின் கேட்ட அந்தப் புத்தகம். " 'சேல்' அட்டைக்கு கீழிருந்ததை லிசா கவனித்துவிட்டாள். சட்டென்று 
அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டாள். கிரடிட் கார்டைக் கொடுத்து கணக்கை முடித்துக் கொண்டு 
வெளியே வந்தபோது, தலைவலி மண்டையை இரண்டாகப் பிளப்பது போல இருந்தது, லிசாவுக்கு.

காரை எடுத்துக்கொண்டு வீட்டில் போய் விழுந்தால் போதும் என 70, 80 என ஒரே விரட்டாக விரட்டிப்போனாள். 
நல்லவேளையாக போலீஸ் கார் எதுவும் தட்டுப்படவில்லை. தட்டுப்பட்டிருந்தால் காரின் வண்ணவண்ண விளக்குகளை 
போட்டுக் காண்பித்து ஏழெட்டுப் பாய்ண்ட்டாவது வர்ற மாதிரி டிக்கட் போட்டிருக்கக் கூடும்;

வாசிங்டன் அவென்யூவில் சிக்னலுக்காக நிறுத்திக் காரைக் கிளப்பிய நொடிப் பொழுதில், " ஓ!காட்!.." என்ற 
அலறலுடன் சடன் பிரேக் போட்டு நிறுத்தினாள். கார் முன்பாக, தலை குப்புற சிறுமி ஒருத்தி கிடந்தாள்.

ஓ...மை ஜீசஸ்!?... லிசா சிறுமியைப் புரட்டித் தூக்கினாள்.

"ஐ'ம் டெட்... டெட்..." என்று கண்களை இறுக மூடிக் கொண்டே சொன்ன சிறுமியிடம், நீ நல்லா இருக்கே...கண்ணைத் திறந்து
என்னைப் பார்" என்றாள்.

"இல்ல... நான் செத்துட்டேன்...ம்ம்...ம்ம்... நான் செத்துட்டேன்..." என்றாள் சிறுமி அழுது கொண்டே.

" கண்ணைத் தெறந்து பார்... நீ சாகல... நல்லா இருக்க. வா, மெக்டனால்டுல எதாவது சாப்பிடலாம்," என்றாள் லிசா.

" ஐயோ... நான் சாகலையா? அப்ப என்னை சாகடிச்சுருங்க..." என்று விசும்பி, விசும்பி அந்தப் பிஞ்சு அழத் துவங்க 
லிசாவால் சமாதானப்படுத்த இயலவில்லை. அவளுக்கோ ஏற்கனவே தலைவலி. "நீ சாக என் கார்தானா கெடச்சுது. 
சரியான சாவுகிராக்கி," என்று லிசாவால் அந்தச் சிறுமியை ஓரம் கட்டிவிட்டுச் செல்ல முடியவில்லை.

ஒருவழியாக அவள் விருப்பத்தை பூர்த்தி செய்வதாகச் சொல்லி
காரின் பின்சீட்டில் படுக்கவைத்து வீட்டுக்கு கூட்டி வந்தாள்.

சிறுமிக்கு ஜூஸ் கொடுத்து," உன் பெயர் என்ன? " என்று கேட்டாள்.

ஜூஸை வாங்க மறுத்ததோடு, "நான் சாகணும்... நான் சாகணும்," என திருப்பி,திருப்பிச் சொல்லி அழுதாள்.

"இது என்ன சோதனை? எனக்கு ஏன் இப்படி நிகழுகிறது?

ஓ! இயேசு பாலனே!" என்று குடிலில் இருந்த இயேசு பாலகனை
நோக்கி ஒரு நொடிப் பொழுது கண்களை மூடித் தியானித்தாள்.

"தாகத்தால் தவிப்பவனுக்கு தாகம் தீர உதவு; உண்ண உணவில்லாதவனுக்கு உணவு கொடு; உடுக்க 
உடையில்லாதவனுக்கு உடைகொடு; உண்மையில் நீ அவர்களுக்குச் செய்வது எனக்கே செய்தது போல" 
என்று குழந்தை இயேசு சொல்லிச் சிரிப்பது போல லிசாவுக்குப் புலப்பட்டது.


"ஓகே! நீ சாகணும். அவ்வளவுதானே. நானே ஏற்பாடு பண்றேன்.  அதுக்கு முன்னால நீ, ஏன்? எதுக்காக சாகணும்? 
எனக்குச் சொல்.  நான், நீ சாக ஏற்பாடு பண்றேன். சரியா?" என்றாள்.

"என் அப்பா சாகறதுக்கு முன்னால நான் செத்துப் போகணும். அதான்..."

"ஏன், உன் அப்பா சாகவேண்டும்?"

"எங்க அப்பாவுக்கு எதோ வியாதி. அதுக்கு நெறையா செலவாகுமாம். இன்சூரன்ஸ் இல்லியாம். அதுக்கெல்லாம் 
எங்களுக்கு வசதி இல்லை. இன்னைக்கு, நாளைக்கு செத்துருவார்னு சொல்லீட்டாங்க. அம்மா இல்லை. அப்பா 
இருந்தார்.  அவரும் போய்ட்டா எனக்கு யார் இருக்காங்க? அப்பா, அம்மாட்ட போய் சேந்துருவாங்களாம்.

நானும் செத்துப்போய்ட்டா... அப்பா அம்மாவோட சேர்ந்து கிறித்துமசு கொண்டாடலாமே! அதுக்காகத்தான் நான் 
சாகணும். ப்ளீஸ் ஐ வாண்ட் டு பி டெட். ப்ளீஸ்... கில் மீ... கில்... மீ... " கதறுகிறது அந்தப் பிஞ்சு.

பாவம். கலைந்த முடி. கிழிந்த ஆடை. அவள் இந்தக் கிறித்துமசுக்கு நல்ல உடை கேட்கவில்லை; பசித்துப் பசித்து 
ஒரு ரொட்டித் துண்டுக்குக் கூட வழியில்லாத நிலையில் புசிப்பதற்கு எதுவும் கேட்கவில்லை; அவள் கேட்கும் கிறித்துமசு 
பரிசு, சாவு... மரணம். லிசாவால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அந்த முகவரி அறியாச் சிறுமிக்காக 
லிசா மனசுக்குள் பெருங்குரலெடுத்துக் கதறியழுதாள்.

அந்த அழுக்குச் சிறுமியை அப்படியே வாரி எடுத்து, வாய்விட்டுக் கதறவும் செய்தாள்.

இடி, இடித்துப் பெய்யும் கோடை மழை ஓய்ந்த பிறகு வானம் வெளி வாங்கிப் "பளிச்" சென வெளிச்சம் பாய்ச்சுவதைப் 
போல, அழுது ஓய்ந்த லிசாவின் கண்களில் ஒரு தெளிவு தீர்க்கமாகத் தெரிந்தது.

எத்தனையோ முறை ஒத்திவைக்கப்பட்ட லண்டன், ஆத்திரேலியா, சென்னைக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

உறவுகளின் கதவுகளை இழுத்துச் சாத்த எண்ணிய லிசாவுக்கு இன்னொரு புது உறவு !

                                                     <>########<>

<>கிறித்துமசு பரிசு! - 2<>

                   கிறித்துமசு பரிசு!

ந்தச் சாக்கடை முடைநாற்றத்தில் இவர்கள் எப்படித்தான் குடித்தனம் நடத்துகிறார்களோ?

வானமே கூரை!பேருந்து நிலையத்தின் பக்கவாட்டுச் சுவர்தான் ஒரே சுவர்; நான்கு பக்கச் சுவரெல்லாம் 
இந்தக் குடித்தனத்துக்கு கிடையாது. அந்தச் சுவரில் எப்படியோ போட்ட கள்ளத்தனமான துளையில் ஒரு குச்சியைச் செருகி பழைய கந்தல் சாக்கை ஒட்டுப்போட்டு தைத்து முன் பக்கம் நடப்பட்ட இரண்டு குச்சிகளில் இணைத்துக் கட்டியிருப்பதுதான் அவர்களுக்குரிய இடம் என்பதைத் தெரிவிக்கும் அடையாளம்!

இப்போது ஓரளவுக்கு உங்களுக்கு இது யாருக்குச் சொந்தமான குடித்தனம் என்று யூகித்திருப்பீர்கள்.

பகல் முழுக்க நகரின் பல பகுதிகளில் சுற்றியலைந்து கையேந்தலில் கிடைக்கும் காசிலும், வீடுகளில் மிச்சம் மீசாடிகளை இவர்கள் பாத்திரங்களில் கவிழ்க்கப்படுவதைக் கொண்டு கால்வயிறோ அரை வயிறோ நிரப்பிக் கொண்டு இரவுப்பொழுதுக்கு கந்தைத் துணிகளைப் பரப்பிய சொகுசு மெத்தைகளில் முடங்கிக்கொள்வார்கள்!

கொஞ்சம் காலை மாற்றிப் புரண்டு நீட்டினால் சாக்கடை நீர் கால்களை வாரியணைத்துக் கொள்ளும். இவர்களின் 
சுவாசப்பைகள் சாக்கடைச் சந்தன வாசத்துக்கு பழ‌க்கப்பட்டுவிட்டது.

ஒருகாலத்தில் மதுரையின் பிரதான நதியாக நகரை வகிர்ந்து ஓடிய கிருதமால் நதி ஒரு புராண கால நதி. வைகை
யிலிருந்து பிரிந்து செல்லும் சிற்றாறு. இன்று கிருதமால் நதி என்பது பல ஆக்கிரமிப்புக்களால் கழிவுநீர்சாக்கடையாகிவிட்டது.

இந்தச் சாக்கடைச் சங்கமத்தில் அந்தியும் இரவும் ஒப்பந்தம் செய்துகொள்ளும் பொன்பொழுதுகளில் துவங்கி பின்னிரவு வரை 
எங்கெங்கோ சிதறிப்போனவர்கள் சங்கமிப்பதும் காலை வெய்யில் உடம்பைச் சுடும்வரையிலும் மூவேந்தர் பரம்பரையினர் உறங்கி 
விழிப்பதும் அன்றாட நிகழ்வுகள் என்றாலும் அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்து கிடக்கும் வாழ்வின் உட்புறம் சுகங்களும் சோகங்களும் உள்ளடங்கிய் இரகசியப் புதையல்கள்!


பிலிப், ஆறடி உயரம்;சிறு வயதில் ஏற்பட்ட விபத்தில் இடது கால் ஊனம்! இருந்தாலும் ஊன்றுகோலின்றி விந்திவிந்தி நடப்பான்; குடும்பம் என்ற ப‌ந்த‌த்திலிருந்து வில‌கி நாடோடியாய் எங்கிருந்தோ மாரிய‌ம்மாளாக‌ வ‌ந்து ம‌ரியாளாகி பிலிப்பும் ம‌ரியாளும் த‌ம்ப‌திக‌ளாய்க் க‌ட‌ந்த ஆறு வ‌ருட‌ங்க‌ளாக‌ இணைபிரியாம‌ல் வாழ்க்கைச் ச‌க்க‌ர‌த்தை ந‌க‌ர்த்திவ‌ருகின்ற‌ன‌ர்.

ம‌ரியாவுக்கு க‌ட‌ந்த‌ ப‌த்து நாளாக‌ விசச் சுர‌ம் வ‌ந்து ப‌டுத்தே கிட‌க்கிறாள். காலையில் ஒரு தேனீரும் ப‌ண்ணும் வாங்கிக்கொடுத்துவிட்டு பிலிப் த‌ன் தொழிலுக்கு கிள‌ம்பி விடுவான்.தொட‌ர்வ‌ண்டி நிலைய‌ம்,பேருந்து நிலைய‌ம் எங்கெங்கோ சுற்றிவிட்டு கையில் சேர்ந்த‌ காசுக்கு ஏற்றார் போல‌ 12ம‌ணிக்கு ம‌ரியாவின் த‌லைமாட்டில் சாப்பாட்டுப் பொட்ட‌ல‌த்தோடு வ‌ந்து உட்கார்ந்துவிடுவான்.

அவ‌ள் சாப்பிடுவ‌தை அப்படியே உட்கார்ந்து
பார்த்துக்கொண்டிருப்பான். மாலையில் ஒரு த‌ர‌ம் வ‌ந்து அவ‌ளை எழுப்பி தான் வாங்கி வ‌ந்த‌ தேனீரைக் கொடுத்துவிட்டு போனால் இர‌வு ஒன்ப‌துக்கோ ப‌த்துக்கோதான் வ‌ருவான்.

"இந்தா, இந்த‌ மாத்திரையைப் போட்டுக்க‌,நாளைக்காவ‌து நீ எந்திருச்சுட்டா ப‌ரவா இல்லை; கிறித்துசு இன்னும் ரெண்டுநாள்தான் இருக்கு. நீ இப்ப‌டியே ப‌டுத்துக் கெட‌ந்தா நல்லாவா இருக்கு..."

"என்னா சொன்னீங்க‌? இன்னும் ரெண்டுநாள்தான் இருக்கா? விசாழ‌னோட‌ விசாழ‌ன்..ஏழு..எட்டு.. வெள்ளி,ச‌னி,ஞாயிறு...
அட‌ங்கொப்புறான.. ப‌த்துநாளாவா நான் ப‌டுத்துக் கெட‌க்கேன்.."என்றாள் வாரிச்சுருட்டி எழுந்து உட்கார்ந்து!

"ச‌ரியாச் சொன்னா, இன்னைக்கு ப‌தினோராவ‌து நாள்...ம‌ரியா..." மாத்திரைய‌ போட்டு ப‌டுத்த‌வ‌ள் ம‌றுநாள் பிலிப் 
த‌லைமாட்டில் தேனீர் குவ‌ளையோடு வ‌ந்து எழுப்பிய‌போதுதான் ம‌ரியா அலங்க மலங்க விழித்தவாறே எழுந்தாள்.

தன்னுடைய நீளமான கூந்தலை இட‌து கையைப் பின்பக்கமாகக் கொண்டுபோய் பிடித்துக்கொண்டு வல‌து கையால 
வளையம்வளையமாக வளைத்துக் கொண்டை போட்டுச் சொம்பில் இருந்த தண்ணீரால் முகம் கழுவி பிலிப் நீட்டிய 
தேனீரை வாங்கிக்கொண்டாள், மரியா!

"சரி, நீ தேத்தண்ணியச் சாப்பிடு, நாங் கெளம்புறேன், நீ இன்னைக்கும் பேசாம படுத்துக்க‌ நாளைக்கு ஒரு நாள் தான் 
குறுக்க இருக்கு. அதுக்குள்ள ஒனக்கும் சரியாயிரும்; ஞானஒளிவுபுரம் கோவிலுக்கே போவம்,என்ன?" என்று சொல்லிக்
கொண்டே சாக்குப்படுதாவை தூக்கிவிட்டுவிட்டு அவள் பதிலுக்குக் கூட காத்திராமால் கிளம்பினான்,பிலிப்.

பிலிப் அந்தப்பக்கம் போனதும் தேனீர் குவளையை ஒரு ஓரமாக வைத்துவிட்டு மூட்டை முடிச்சுகளாக இருந்த மூலையில் 
கையைவிட்டு எதையோ தேடி எடுத்தாள். அதில் சில கசங்கிய‌ ரூபாய் நோட்டுக்களும் சில்லறைக்காசுகளும் இருந்தது. 
அதை அப்படியே கீழே கொட்டி எண்ணத் துவங்கினாள். ஐம்பத்தி நான்கு ரூபாயும் இருபது காசும் இருந்தது. இதை 
வச்சு எப்படி அதை வாங்குறது? அவள் மனசுக்குள் கணக்குப் போட்டுக்கொண்டிருந்தாள்.

சரி நாமளும் கெளம்பிட வேண்டியதுதான், கடைவீதிப் பக்கம் போய் பார்ப்போம்...என்று தனக்குள் முடிவு செய்த அடுத்த 
பத்தாவது நிமிடம் கிளம்பியும் விட்டாள்.

ஒரு பிரபலமான கெடிகாரக் கடையின் "காட்சிப் பேழகம்" முன்பாக நின்றாள்,மரியா.

கண்ணாடிப் பெட்டிகளில் அழகழகான கெடியாரங்கள் பளபளவென்று கண்ணைப் பறித்தது. அவள் தேடுவது 
அங்கு இல்லையே.... ஒரு ஓரமாக இருந்த வெல்வெட்டுப் பெட்டியில்அவள் எதிர்பார்த்தது இருந்தது; விலை 
தெரியவில்லை. எம்பி எம்பிப் பார்க்க முயன்றபோது கடை வேலையாள் வந்து," ஏய் இங்க என்ன பண்றே..
போ...போ.. அந்தப்பக்கம்" என்று விரட்டினான்.

"அந்தச் சங்கிலி வெலை எவ்வளவு?" என்றாள்.

"அதெல்லாம் வெலை சாஸ்தி... நகரு...நகரு... ஆளுங்க வர்ற நேரத்துல நீ வேற...பெரிய‌ செயின் வாங்க வந்த 
மூஞ்சைப் பாரு.."என்று அடிக்காத கொறையா வெரட்டின்னான்.

"இல்லை, நெசமாவே வாங்கத்தான் வந்தேம்...வெலை எவ்வளவு...."என்றாள்.

"அதெல்லாம் வெலை சாஸ்தி. ஒன்னால வாங்க முடியாது. கெளம்பு...கெளம்பு..." என்று கடை வேலையாள் 
இவளை விரட்டுவதில் குறியாக இருந்தான்.

"என்னமோ ஒங்ககிட்ட சும்மா குடுங்கன்னு கேட்டமாதிரியில்லவெரட்டுறீங்க. வெலையச் சொல்லுங்க; நாங் 
காசுகுடுத்தா குடுங்க. ரெம்பத்தான் மெரட்டுறீங்களே..."என்றாள் இவள்.

"எவ்வளவு நீ வெச்சுருக்க அதச் சொல்லு மொதல்ல..."என்று விலையைச் சொல்லாமல் கடையாள் அதட்டலாக் 
கேட்டான்.

"ம்ம்ம்....அம்பது ரூவா வச்சிருக்கேன். எவ்வளவுன்னு தெரிஞ்சா மேக்கொண்டு போய்காசு கொண்டாருவம்ல்ல..." 
என்றாள் மரியா.

" அம்பதா? அதுக்கு அஞ்சு சங்கிலித் துண்டு கூட வராது. இன்னொரு சைபர் சேத்துக் கொண்டா...பாக்கலாம்.."
என்றான் கடையாள்.

"அடியாத்தே....ஐநூறு ரூபாயா? நெசமாலுமா?" என்று வாய் பிளந்து கேட்டாள், மரியா.

"அதான் மொதல்லயே சொன்னேன். நீயெல்லாம் வெலை கேக்க வந்துட்ட.. போ..போ..போய்

கவரிங்கடையில போய்க் கேளு;அவங்கூட  அம்பது ரூபாய்க்குத் தரமாட்டான்...கெடிகாரச் சங்கிலி 
வாங்குற மூஞ்சியப் பாரு காலங்காத்தால வந்து உசிரை எடுக்குது..."என்று எரிந்துவிழ ஆரம்பித்தான் கடையாள்.

கடையாளை மொறச்சுப் பாத்துக்கிட்டே அங்கிருந்து நகர்ந்தாள்,மரியா.

அங்குமிங்குமாக அலைந்து ஒரு கவரிங்கடைக்கு வந்து கவரிங்கில் வாச்சுக்கு சங்கிலி வேணுமுங்க‌. 
எவ்வளவு வெலைங்க? என்று கேட்டாள்.

"யாருக்கு? ஆம்பளைக்கா? பொம்பளைக்கா? என்று கேட்டான் கடைக்காரன்.

"எங்க வூட்டு ஆம்பளைக்குத்தாங்க..வெலையச் சொல்லுங்க," என்றாள்.

"நூத்தம்பது ரூபாயாகும்..ரூபா வச்சிருக்கியா?"

"என்னங்க தங்க வெலை சொல்றீங்க?"

"நூத்தி இருபத்தஞ்சுன்னா குடுக்கலாம்;அதுக்கு மேல கொறைக்க முடியாது.."

"எங்க அந்தச் சங்கிலியக் காட்டுங்க பாக்கலாம்,"

"மொதல்ல ரூபா வச்சிருக்கியான்னு சொல்லு..."

"இருக்குங்க..என்னமோ ஓசியா கேட்டமாதிரியில்ல சலிச்சுக்கிறீங்க"

"இந்தா பாரு...இதான்.... தொடாத...தொடாத... தொடாமப் பாரு"என்றான்.

"ம்ம்...சரி வூட்டுக்குப் போய் பணங்கொண்டாந்து வாங்கிக்கிறேனுங்க" என்று அங்கிருந்து புறப்பட்டாள். 
செயின் வாங்குற ஆளைப்பாரு என்று கடைக்காரன் எதோ சொல்லிக்கொண்டிருந்தான்.

நடந்துகொண்டே யோசித்தாள்; பணம் இருந்தால் கவரிங்கில் நூத்தி இருபத்தஞ்சு ரூபாய்க்கு வாங்குவதற்கு 
ஐநூறு ரூபாய் கொடுத்து அதையே வாங்கிவிடலாம். என்ன செய்வது? நாலு கோவில், பேருந்து நிலையம்ன்னு
சுத்துனாலும் நாலு ரூபாயும் கெடைக்கலாம்;நாப்பது ரூபாயும் கெடைக்கலாம்; இல்ல எதுவும் கெடைக்காமலே 
போனாலும் போகலாம். யோசனையாகவே நடந்தாள்,மரியா.

பிலிப்போட, தாத்தாவுக்கு அப்பாரு கட்டியிருந்த தங்கக் கெடியாரமாம். அது ஒவ்வொருத்தர் கையா மாறி இப்ப 
பிலிப்புகிட்ட இருக்கு. அந்தக் கெடியாரத்தோட சங்கிலி அறுந்து, அங்க வச்சு இங்க வச்சு அதுவும் காணாமப் போச்சுது. 
எப்படியாவது பிலிப்புக்கு இந்தக் கிறிஸ்மஸ் பரிசா ஒரு சங்கிலிய வாங்கிக் கொடுத்திடனும்ன்னுதான் மரியா இப்பத் 
தெருத்தெருவாய் அலைஞ்சுகிட்டு இருக்கா.

ஒரு சந்தில் நுழைந்து வெளிய வந்தபோதுதான் அந்தக்கடை இவள் கண்ணில் தட்டுப்பட்டது. இவ்விடம் பெண்களின் 
நீண்ட தலைமுடி விலைக்கு வாங்கப்படும். அவள் கண்ணில் மின்னல் கீற்று போல ஒரு எண்ணம் உதயமானது. விறுவிறு
வென்று கடைக்குள் நுழைந்தாள்.

தனது கூந்தலைக் காட்டி இதை விலைக்கு எடுத்துக்கொள்வீர்களா? என்று விசாரித்தாள். கடையிலிருந்த பெண் மரியாவின் 
கூந்தல் நீளத்தைப் பார்த்து வியந்து போனாள். முடியின் நீளத்தை அளந்து பார்த்துவிட்டு வாங்கிக்கொள்வேன், முடி 
பராமரிக்கப்படாமல் சிக்குப் பிடித்துப் போயிருக்கிறது.  சுத்தம் செய்ற‌ வேலை நெறைய இருக்கு..."என்று இழுத்ததும் 
மரியாவின் மனசு உள்ளுக்குள் படபடத்தது.

முடியை வாங்க இயலாது என்று சொல்லிவிட்டால்....குறைந்தபட்சம் ஒரு நூறாவது கொடுத்தால் அந்தக் கவரிங் கடைக்கே 
போய்விடலாம் என்று மனமெங்கும் முட்டிமோதி.....கடைசியில் மாதாவே, இயேசு பாலனே கொறைஞ்சுது நூறு ரூபாய்க்கு 
வழி செஞ்சுடு என்று பிரார்த்தனையில் வந்து முடிந்தது.

"ஒரு அரைமணி நேரமாகும்; நல்லா முடியை அலசி சுத்தப்படுத்தி வெட்டி எடுக்க வேண்டியிருக்கும், கிராப் மாதிரி கொஞ்சம் 
விட்டுட்டு வெட்டி எடுத்துக்கிறேன். சரியா?"என்றாள் கடைக்காரி.

"எவ்வளவு குடுப்பீங்கம்மா?" மென்று விழுங்கிக்கொண்டே கேட்டாள் மரியா.

கடைக்காரி ஒரு தாளில் கூட்டிக்கழித்துக் கணக்குப்போட்டு 525 ரூபாய் குடுக்கலாம் என்றாள்.

மரியாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இவ்வளவு கிடைக்கும் என்று கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை. 
என் முடிக்கு இவ்வளவு விலையா?

இவள் யோசிப்பதைப்பார்த்ததும் என்னம்மா யோசிக்கிற, வெட்டலாமா?வேண்டாமா? என்று கேட்டாள்.

இல்லை...இல்லை.. வெட்டிக்கங்க, என்று அவசரமாகச் சொன்னாள். வயித்துப் பசியில் சுருட்டிப்பிடித்து வலித்தது வயிறு.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்தக்"காட்சிப் பேழகம்" முன்பு இருந்தாள். அவள் பார்த்துச் சென்ற இடத்தில் இப்போது 
வேறு கெடிகாரம் இருந்தது. அந்தச் சங்கிலி இருந்த பெட்டியைக் காணோம். கடைக்குள் சென்று அந்தக் கடையாளிடம் 
படபடப்போடு, கேட்டாள். ஒரு வாடிக்கையாளர் கேட்டார், காட்டீட்டு இதோ இங்க இருக்கு, நீ ரூபாய் கொண்டாந்தியா? 
என்று கடையாள் கேட்டான்.

நீங்க கேட்ட மாதிரி இதோ ஐந்து நூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினாள்.

"இதோ பாரும்மா, நான் ஒரு பேச்சுக்காக அப்படிச் சொன்னேன், சரியான இதன் விலை 590.99பைசா! எடு 
இன்னொரு நூறு ரூபாயை,"என்றான்.

தன்னிடம் இருந்த 50ரூபாயையும் முடி வாங்கியவள் கொடுத்ததிலிருந்த 25 ரூபாயையும் சேர்த்தால் 575தான் வந்தது.

இந்தாங்க 575ரூபாயை வச்சுக்கிட்டு அதைக் குடுங்க"என்று கேட்டாள், மரியா.

இன்னும் பதினாறு ரூபாய் குடுத்திட்டு வாங்கீட்டுப் போ"கடையாள் கறாராகப் பேசினான்.

எவ்வளவோ மன்றாடிக்கேட்டுப்பார்த்தாள்; கடையாள் மசியவில்லை.

"சரி, இந்த ரூபாயை வச்சுக்குங்க; இன்னும் ஒரு மணிநேரத்துல வந்துருவேன்; யாருக்கும் குடுத்துராதீங்க,"என்று 
சொல்லிவிட்டு மீனாட்சியம்மன் கோவிலை நோக்கி ஓடினாள்,மரியா.

அரைமணி நேரத்துக்கும் மேலாகி சல்லிக்காசுகூட கிடைக்கவில்லை; அப்போது ஒரு வசதியான குடும்பம் கோவிலிலிருந்து 
வெளியே வந்தது. அவர்களை நோக்கி நம்பிக்கையோடு நெருங்கினாள்.

"அய்யா ரெம்பப் பசிக்குதுங்கய்யா, புண்ணியமாப் போகட்டும். ஒரு சாப்பாட்டுக்கு ஒதவி பண்ணுங்க அய்யா..அய்யா...விடாது 
தொடர்ந்தாள் மரியா. ஒரு புது பத்து ரூபாய் தாள் வந்து விழுந்தது, அவளிடம்.

அடுத்த அரைமணிநேரத்தில் அரை ரூபாய், ஒரு ரூபாய் என்று ஏழெட்டு ரூபாய் கிடைக்கவே ஓட்டமும் நடையுமாய் அந்தக்கடைக்கு 
ஓடினாள். வயிறு சுருக், சுருக்கென்று வலித்தது அவளுக்கு.

இன்னும் கொஞ்ச நேரத்துல அந்தத் தங்கச் சங்கிலி கைக்கு வரப்போகிறது, என்பதில் பசி,வலி மறந்து வேகம் காட்டிப்போனாள். 
இந்தாங்க என்று பதினாறு ரூபாயைக் கொடுத்து அந்தத் தங்க முலாம் பூசப்பட்ட கெடிகாரச் சங்கிலியை பளபளப்பான வெல்
வெட்டுப் பெட்டியில் வைத்துக் கொடுத்ததைப் பத்திரமாக வாங்கிக்கொண்டு தன் இருப்பிடத்தை நோக்கி விரைந்தாள்.

பிலிப் எதுனாச்சும் சாப்பிடக் கண்டிப்பா கொண்டாந்து வச்சிட்டுப் போயிருக்கும், அதச் சாப்பிட்டுக்கலாம் என்று வயித்துக்குச் சமாதானம்
சொல்லிக்கொண்டு ஒரு வழியாக வந்து சேர்ந்தாள்.

காலையில் ஒரு தேனீர் குடித்தது. இப்போது சாயாந்திரமாகிப்போச்சு. ஒரு இடத்தில் வாங்கி வந்த பொருளை வைத்துவிட்டு, 
ஒரு கிழிசல் போர்வையை போர்த்திக்கொண்டு அப்படியே சுருண்டு படுத்துவிட்டாள்.


"மரியாம்மா...மரியாம்மா...என்னம்மா எழுந்திரு.... இங்க பாரு ஒனக்கு என்ன வாங்கி வந்திருக்கேன் கிறிஸ்மசுக்கு?!
என்று எழுப்பினான் பிலிப்.

மரியா, வழக்கமாக இவன் கூப்பிட்டதும் எழுந்துவிடுபவள் எழவே இல்லை,என்றதும் பயந்துபோய் அவளைத் தொட்டு
உசுப்பி மரியா..மரியா..என்று சொல்லி எழுப்பினான்.

மெல்ல, முனங்கிக்கொண்டே எழுந்தவள், நீங்க‌ எனக்கு வாங்கீட்டு வந்தது இருக்கட்டும், நான் உங்களுக்கு ஒன்று 
வாங்கீட்டு வந்து இருக்கேன், அது என்னன்னு சொல்லுங்க? என்றாள்.

அவன் உடனே அருகில் உட்கார்ந்து கை இரண்டையும் தலைக்குப் பின்னால் கோர்த்துக் கொண்டு சுவற்றில் சாய்ந்து 
உட்கார்ந்துகொண்டான். "சரி, என்ன வாங்கி வந்த? நீ எதுக்கு உடம்பு முடியாதபோது வெளிய கிளம்பிப் போன. நான் 
மதியம் வந்து ஒனக்கு வாங்கி வந்து வச்ச சாப்பாட்டுப் பொட்டலம் அப்படியே இருக்கு!?"என்றான்.

"சரி நாம ரெண்டுபேருமே சாபிடுவோம்; நான் வாங்கி வந்தது என்னன்னு சொல்லுங்க? பார்ப்போம்"என்று மரியா தான் 
போர்த்தியிருந்த போர்வையை விலக்காமலே சொன்னாள்.

"எனக்கு எதாவது புது துணி எடுத்தாந்துருப்ப; வேற என்ன? சரி நான் என்ன வாங்கி வந்துருக்கேன்னு நீ கண்டுபுடிக்க 
முடியாது; நீ என்ன வாங்கி வந்துருக்கேன்னு நான் கண்டு புடிக்க முடியாது. நான் என்ன வாங்கி வந்தேன் என்பதை 
நாஞ்சொல்றேன், முதல்ல,"என்றான்.

"எத்தனை தடவை நாம ரெண்டுபேரும் கடைவீதியில் அந்தப் பல்பொருள் அங்காடிக்கடையில விதவிதமா பெரிய பல், 
சின்னப்பல் சீப்புகள், பேன் சீப்பு இதெல்லாம் யானைத் தந்தத்துல செஞ்சத நாம வாங்க முடியுமா?ன்னு ஏக்கப் பெருமூச்சு 
விட்டுக் கேட்டிருக்க. அதை ஒனக்காக இந்தக் கிறிஸ்மஸ்சுக்கு பரிசா வாங்கியாந்தேன். நீ, என்ன‌ வாங்கி வந்த? என்றான் பிலிப்?

அவள் கன்னங்களில் கண்ணீர் கரகரவென்று வழிந்ததை அவன் அறியாமல் துடைத்துக்கொண்டே," அந்தக் கையை 
நீட்டுங்க,"என்றாள்.

"ஏன்? எதுக்கு, சும்மா சொல்லு,"

"நீங்க ஒங்க வாச்சு கட்டியிருக்கிற‌ கையை இப்படி நீட்டுங்க..."

"தலைக்கு அணவா கையை வச்சிட்டு இருக்குறதுல ஒரு சொகம்...நி, சொல்லு மரியா.."

கையை நீட்டி அவனின் வலது கரத்தை வெடுக்கென இழுத்தாள், மரியா.

அந்தக் கையில் கெடிகாரம் இல்லை; கை வெறுமையாக இருந்தது.

"எங்கங்க,அந்த வாச்சு?"

ஒரு சின்னச் சிரிப்புக்குப் பின், அந்தச் செயின் தொலைஞ்ச பொறவு அதக் கையில கட்டவே பிடிக்கல..."

"சரி,சரி...அத எடுங்க...இந்தாங்க அதுக்கு ஏத்த தங்கச் சங்கிலி...." சங்கிலியை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

யானைத் தந்தத்துல வாங்குறதுக்காக அதை நான் வந்த விலைக்கு வித்துப்புட்டேன்; அது கையில‌ இருந்து 
ஆகப்போறது என்ன மரியா? வானத்தைப் பார்த்துக்கொண்டே மெல்லச் சொன்னான்,"பிலிப்.

ஏங்க இப்புடிப் பண்ணினீங்க? எனக்காகவா ஒங்க பரம்பரை பரம்பரையா காத்த சொத்தை வித்தீங்க?

போர்வையை உதறிவிட்டு அவன் மீது சாய்ந்து கதறினாள்.

அப்போதுதான் பார்த்தான் அவள் தலை மொட்டையாக இருந்ததை.

கெடிகாரச் சங்கிலியும் யானைத் தந்தச் சீப்புகளும் குப்பையில் கிடக்கும் "கோமேதக"மாக அங்கே காட்சியளித்தது.

<>கிறித்துமசு ப‌ரிசு -3<>

                   கிறித்துமசு ப‌ரிசு -3

ங்கிங்கெனாத‌ப‌டி எங்கும் அஞ்ச‌ல‌ட்டைக‌ள்,அஞ்ச‌லுறைக‌ள், கிறித்துமசு வாழ்த்த‌ட்டைக‌ள் என்று நிர‌ம்பிக் கிட‌ந்த‌ குவிய‌லுக்கு ந‌டுவே ச‌காய‌ம் உட்கார்ந்திருந்தான். ஒவ்வொன்றாக‌ எடுத்து முக‌வ‌ரியைப் ப‌டிப்ப‌தும், அந்த உறையைக் கிழித்து உருப்ப‌டியான‌ முக‌வ‌ரி இருக்கிற‌தா என்று க‌ண்க‌ள் துழாவுவதும், இல்லையென்றால் உத‌ட்டைப் பிதுக்குவ‌தும், இருந்தால் உத‌டு உவ‌ப்பான‌ ஒரு புன்ன‌கையை விடுவிப்ப‌துமாக‌ நேர‌ம் ந‌க‌ர்ந்துகொண்டிருந்த‌து.

நகரின் பிரதான அஞ்சல் பிரிப்பக அலுவ‌ல‌க‌த்தில் ச‌காய‌த்துக்கு வேலை. ச‌காய‌ ராஜ் முழுப்பெய‌ர். அவ‌னுக்கு ச‌காய‌ம் என்று அவ‌ன் பெற்றோர் பெய‌ர் வைத்தாலும் வைத்தார்க‌ள். எதாவ‌து உத‌வியா? ந‌ம்ப‌ ச‌காய‌த்துக்கிட்ட‌ கேளுங்க‌ம்பாங்க‌. இங்க‌ இருந்த கோப்பைக் காணோமே, யாராவ‌து பாத்தீங்க‌ளா? "ஸார், ச‌காய‌த்தைக் கேளுங்க‌. தேடிக்க‌ண்டுபிடிச்சு கொண்டுவ‌ந்து சேக்க‌ ந‌ம்ம‌ ச‌காய‌த்தை விட்டா யாரு இருக்கா? இப்ப‌டி அஞ்ச‌ல் நிலைய‌த்தில் ச‌காய‌ம்..ச‌காய‌ம்...ச‌க‌ல‌மும் ச‌காய‌ம்தான்!

வாப்பா, ஒரு "டீ" ஊத்திக்கிட்டு வ‌ருவோம் என்று அந்தோணி ச‌காய‌த்தின் அறைக்குள் நுழைந்தார்.

"அட‌, நீங்க‌ வேற‌ ம‌னுச‌னுக்கு அதுக்கெல்லாம் நேர‌ம் எங்க இருக்குண்ணே? நீங்க‌ போய்ட்டு வாங்க‌" என்றான் ச‌காய‌ம்.

"என்ன‌மோ, டீ குடிச்சுட்டு வ‌ர்ற‌ நேர‌த்துல‌ இதெல்லாம் முடிச்சு அனுப்ப‌ப்போற‌ மாதிரி சொல்ற‌, அடுத்த‌ கிறித்துமசுக்கு கூட‌ 
நீ இதெல்லாம் அட்ர‌ஸ்கார‌ங்க‌ கிட்ட‌ சேப்பியான்னு என‌க்குச் ச‌ந்தேக‌மா இருக்கு. ச‌ரி,ச‌ரி வா..போயிட்டு சுருக்கா 
வ‌ந்துர‌லாம்" என்று அந்தோணி விடாப்பிடியாக‌ ச‌காய‌த்தை இழுத்துப்போவ‌திலேயே இருந்தார்.

"ச‌ரிண்ணே, இதை ம‌ட்டும்....இங்க‌ பாருங்க‌ண்ணே.. முகவரியில் "எல்லாம் வ‌ல்ல‌ க‌ட‌வுள்"ன்னு போட்டு அனுப்பீருக்கிற‌தை. 
இப்ப‌டியெல்லாம் அனுப்பி ந‌ம்மைச் சோதிக்க‌னுமாண்ணே?!

"ஸ்டாம்பும் ஒட்ட‌ல‌ ஒண்ணும் ஒட்ட‌ல‌ தூக்கி *டி.எல்.ஒ* வுல‌ போடுவியா, அத‌ப்போய் ஆராச்சி ப‌ண்ணிகிட்டு" என்று 
அந்தோணி ச‌காய‌த்தைக் கெள‌ப்புவ‌தில் குறியாக‌ இருந்தார்.

"க‌ட‌வுளுக்கு என்ன‌தான் கோரிக்கை போகுதுன்னு பாப்ப‌மே..."

"யாரோ ஒரு அரைக் கிறுக்கு அனுப்பிய‌தைப் போய் ப‌டிச்சு நேரத்தை வீண் ப‌ண்ணீட்டு இருக்கியே,ச‌காய‌ம். 
டீயை ஊத்தீட்டு வ‌ந்து அப்புற‌மா அந்த‌ கோரிக்கையை ப‌ரிசீல‌னை ப‌ண்ணு" என்று அந்தோணி க‌ரும‌மே க‌ண்ணாயிருந்தார்.

"அண்ணே, ஒரு நிமிச‌ம், இந்த‌க் க‌டித‌த்தை ப‌டிக்கிறேன். பாவ‌ம்ண்ணே...இந்த‌ பாட்டிக்கு நாம‌ எதாவ‌து செய்ய‌ணும்ண்ணே. 
ப‌டிக்கிறேன். கேளுங்க‌ண்ணே!"

"ச‌காய‌ம், ஆர‌ம்பிச்சுட்டியாப்பா? உன்னைக் கூப்புட‌ வ‌ந்தேம்பாரு, என்ன‌ச் சொல்ல‌ணும்...ச‌ரி..ச‌ரி ப‌டி" என்று 
அந்தோணி சுவார‌சிய‌மின்றிக் கேட்க‌த் த‌யாரானார்.

"என்னினிய‌ க‌ட‌வுளுக்கு, தோத்திர‌ம்.
என‌க்கு வ‌ய‌து 97 ஆகியும் உங்க‌ளை வ‌ந்த‌டையாம‌ல் அர‌சு கொடுக்கும் முதியோர் உத‌வித் தொகையில் வாய்,வ‌யிற்றைக் 
க‌ழுவி வ‌ருப‌வ‌ள் நான் என்ப‌து நீங்க‌ள் அறியாத‌து அல்ல‌. எனக்கென்று எந்த‌ உற‌வும் இல்லை, உங்க‌ளைத் த‌விர‌. வ‌ரும் 
கிறித்துமசுக்கு என் அந்த‌க் கால‌ சினேகிதிக‌ள் இருவ‌ரை விருந்து சாப்பிட‌ ப‌க்க‌த்து ந‌க‌ர‌த்திலிருந்து வ‌ர‌ச் சொல்லிவிட்டேன். 
இதெல்லாம் இந்த‌ வ‌ய‌தில் தேவையா? என்று நீங்க‌ள் கூட‌ நினைக்க‌லாம்.

அந்த‌ இருவ‌ருக்கும் என்னைபோல‌வே உற‌வு என்று சொல்லிக்கொள்ள‌ யாருமில்லை? அவ‌ர்க‌ளோடு நான் கொண்ட‌ ந‌ட்பை 
நினைவு ப‌டுத்தி இருவ‌ரும் க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம்தான் என்னை தொட‌ர்புகொண்டார்க‌ள். அப்போதே அவ‌ர்க‌ளிட‌ம் அடுத்த‌ வ‌ருட‌ம் 
கிறித்துமசுக்கு என் வீட்டில் விருந்து வைப்ப‌தாக‌ச் சொல்லிவிட்டேன். அவ‌ர்க‌ளும் ச‌ரி என்று சொல்லிவிட்டார்க‌ள்.
அப்போதிலிருந்தே மாசாமாசம் என் பென்ச‌ன் தொகையிலிருந்து ரெண்டும் அஞ்சுமாக‌ 300 ரூபாய் சேர்த்து சுருக்குப் 
பையில் போட்டு ப‌த்திர‌மாக‌ வைத்திருந்தேன். எப்ப‌டியோ க‌ள‌வு போய்விட்ட‌து. அதிலிருந்து என‌க்கு தாங்க‌ முடியாத‌ 
வ‌ருத்த‌மாக‌ உள்ள‌து. அடுத்த‌வார‌ம் கிறித்துமசு. என் அடுத்த‌ பென்சன் கூட‌ ஜனவரி மாதம் தான்!

என் தோழிக‌ளை விருந்துக்கு வ‌ர‌ச் சொல்லிவிட்டு இப்ப‌டியாகிவிட்ட‌தே என்று பெருங்க‌வ‌லையாக‌ இருக்கிற‌து. என், அன்பான‌ க‌ட‌வுளே என‌க்கு நீங்க‌ள்தான் உத‌வி செய்ய‌வேண்டும். உங்க‌ளை விட்டால் என‌க்கு யாருமில்லை. எப்ப‌டியும் உத‌வி செய்வீர்க‌ள், என்ற‌ ந‌ம்பிக்கையோடு இந்த‌க் க‌டித‌த்தை எழுதுகிறேன். என் ஆண்ட‌வ‌ரே, இயேசு கிறித்துவே உம்மையே ந‌ம்பியிருக்கும் மேரி.

"சிறுக‌ச் சிறுக‌ச் சேர்த்து ஒரு துணிம‌ணிகூட‌ த‌ன‌க்கு வாங்க‌ ஆசைப்ப‌டாம‌ல் த‌ன் தோழிய‌ருக்காக‌ விருந்து கொடுக்க‌ முடியாம‌ல் போய்விட்ட‌தே என்ற‌ இந்த‌ப் பாட்டிக்கு நாம‌ எதாச்சும் செய்ய‌ணும்ண்ணே" என்றான் ச‌காய‌ம் அந்தோணியிட‌ம்.

"பாவ‌மாத்தான் இருக்கு. என்ன‌ செய்ய‌லாம்? சொல்லு?" என்றார் அந்தோணி.

"அண்ணே இந்த‌ப் பாட்டிக்காக‌ இன்னைக்கு ந‌ம்ப "டீ"க்காசை தியாக‌ம் செய்ய‌லாம்ண்ணே!" என்ற‌ ச‌காய‌ம், ஒரு க‌வ‌ரை எடுத்து தன்னிடமிருந்த பத்து ரூபாயை அந்தக் க‌வரில் போட அந்தோணியும் பத்து ரூபாய் போட்டார். ம‌ள‌ம‌ள‌வென்று, அந்த‌ மேரிப் பாட்டியின் க‌டித‌த்தை படியெடுத்து அறிவிப்புப்பலகையில் ஒட்டி ந‌ன்கொடைய‌ளிப்ப‌வ‌ர்க‌ள் அளிக்க‌லாம் என்று ஒரு உறையையும் அருகில் தொங்க‌விட்டான், ச‌காய‌ம்.

அடுத்த‌ நாள் உறையை எடுத்து ச‌காய‌மும் அந்தோணியும் எண்ணிப்பார்த்தார்க‌ள். 272 ரூபாய் இருந்த‌து. ம‌றுப‌டியும் ஒரு சிறு வ‌சூல் ந‌ட‌த்திச் சேர்த்த‌தில் 287 ரூபாயான‌து. ச‌காய‌ம் த‌ன் பையில் அக‌ப்ப‌ட்ட‌ மூன்று ரூபாயையும் போட்டு 290 ரூபாய் ஆக்கினான். 

இன்னும் ஒரு ப‌த்து ரூபாய் குறையுதேண்ணே, என்றான் ச‌காய‌ம். அட‌, மேரிக் கிழ‌விக்கு இதுவே போதும்ப்பா. அதுகிட்ட‌ இத‌ச் 
சேக்குற‌ வ‌ழியைப் பாரு என்று அந்தோணி சொல்ல‌, அரைம‌ன‌தோடு ச‌காய‌ம் அந்த‌ப் ப‌ண‌த்தை உறையிலிட்டு ஒரு கிறித்துமசு வாழ்த்த‌ட்டை ஒன்றையும் வைத்து ஒட்டினான்.

மேரி பாட்டியின் முக‌வ‌ரிக்கு விநியோகம் செய்யும் அஞ்சல்கார‌ர் அப்துல்லாவிட‌ம் கொடுத்து விச‌ய‌த்தைச் சொல்லி நேரில் 
சேர்த்துவிடும்ப‌டி கொடுத்துவிட்டான். எதோ, இந்த‌க் கிறித்துமசுக்கு ஒரு உருப்ப‌டியான‌ கிறித்துமசு ப‌ரிசு கொடுத்த‌ 
ம‌கிழ்ச்சி ச‌காய‌த்திட‌ம் தென்ப‌ட்ட‌து.

ஆயிற்று. கிறித்துமசு வந்து முடிந்தும் போன‌து.


வ‌ழ‌க்க‌ம்போல‌ ச‌காய‌ம் முக‌வ‌ரி ச‌ரியில்லாத‌ க‌டித‌ங்க‌ளைப் பார்த்துகொண்டே வ‌ந்த‌வ‌னுக்கு அந்த‌க் க‌டித‌ம் யாரிட‌மிருந்து 
வ‌ந்த‌து என்று தெரிந்துவிட‌வே, அந்தோணி அண்ணே, மாரிமுத்து, அருணாச‌ல‌ம், இசுமாயில் இங்க‌ வாங்க‌ என்று 
உற்சாக‌மாக‌க் கூப்பிட்டான். நாம‌ மேரிப்பாட்டிக்கு அனுப்பிய‌த‌ற்கு ந‌ன்றி தெரிவிச்சு ம‌ட‌ல் வ‌ந்திருக்கு..வாங‌க...வாங்க‌.. 
எல்லோரும் வாங்க‌ என்று ச‌காய‌ம் உற்சாக‌ம் பொங்கக் கூப்பிட்டான்.

ச‌காக்க‌ள் புடை சூழக் கடவுள் என்று முகவரியிட்ட‌ மேரியின் க‌டித‌ உறையைக் கிழித்து உள்ளிருந்த‌ க‌டித‌த்தைப் ப‌டிக்க‌த் 
துவ‌ங்கினான் ச‌காய‌ம்!

என்னினிய‌ இறைவா!

ந‌ன்றி! இந்த‌ மூன்றெழுத்து போதாது நீங்க‌ள் செய்த‌ உத‌விக்கு. நீங்க‌ள் அன்போடு அனுப்பிவைத்த‌ ரூபாயில் என் தோழிக‌ளுக்கு 
விருந்து வைத்தேன். அதும‌ட்டுமா, அந்த‌ விருந்துக்கு உங்களின் பிரதிநிதியாக இன்னொரு விருந்தாளியும் வ‌ந்திருந்தது, எங்க‌ளை 
மிகுந்த‌ ப‌ர‌வ‌ச‌ப்ப‌டுத்திய‌து. எங்க‌ள் ப‌ங்குத்த‌ந்தை அருட்திரு.பிலிப் அடிக‌ளார் இந்த‌ ஏழையின் இல்லத்துக்கு வ‌ந்து விருந்துண்டு 
ஆசீர்வ‌தித்த‌தை நீங்க‌ள் ஆசீர் வ‌தித்த‌தாக‌வே கருதுகிறேன்.

இந்த கிறித்துமசுக்கு நீங்கள் எனக்குத்தந்த பரிசுக்காக‌ மீண்டும் உங்க‌ளுக்கு என்னினிய‌ ந‌ன்றிக‌ளைச் ச‌ம‌ர்ப்பிக்கிறேன்.

க‌டித‌த்தை முடிக்கும் முன் உங்க‌ளிட‌ம் ஒன்றைச் சொல்லிவிட‌ விரும்புகிறேன். நீங்க‌ள் என‌க்கு அனுப்பிய‌ ரூபாய் 300ல் 
10 ரூபாய் குறைந்த‌து. அது வேறொன்றுமில்லை. அஞ்ச‌ல் அலுவ‌ல‌க‌த்தில் இப்ப‌டித் திருடுவ‌த‌ற்கென்றே ஒரு கூட்ட‌ம் 
இருக்கிற‌து. அது அவ‌ர்க‌ளின் கைவ‌ரிசை என்ப‌து என் எண்ணம்.

இப்ப‌டிக்கு

ந‌ன்றியுள்ள‌
மேரி.

ச‌காய‌ம் உட்பட‌ எல்லோரும் ஒருவ‌ரை ஒருவ‌ர் பார்த்துக்கொண்ட‌ன‌ர்.

                          <>()()()()()()()<>

<>ப்ரியமுள்ள வாலண்டைனிடமிருந்து....!<>

                 ப்ரியமுள்ள வாலண்டைனிடமிருந்து....!

அடையார் என்றதுமே எல்லோருக்கும் நினைவில் வருவது அந்த அதிசய ஆலமரம்தான். ஆனால் கிரிக்கு மட்டும்
அடையார் "போட் கிளப்"பை ஒட்டி ஆரவாரமின்றி, அமைதியே உருவான அந்த நூலகம்தான்.

அவன் வசிக்கும் பெசண்ட் நகர் பகுதி நூலகத்தைவிட இந்த நூலகம்தான் கிரிக்குப் பிடித்துப் போயிருந்தது. விடுமுறை என
அவன் வீட்டுக்கு வந்தால் தவறாமல் ஆஜராகி விடுவான்.

"கவிதைக் களஞ்சியம்" என்று எழுதப்பட்டிருந்த பகுதியில் அவன் கண்கள் சுழன்று கொண்டிருந்தது. பாக்கெட்நாவல் அளவிலிருந்த
ஒரு புத்தகத்தை உருவி எடுத்தான். நார்வே நாட்டுக் கவிஞனின் "ப்ரியமுள்ள வாலண்டைனிடமிருந்து..." என்கிற கவிதைத் தொகுப்பு
அது.

புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஜன்னலோரமாகப் போய் உட்கார்ந்து கொண்டான். ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். நூலகத்தின் பின்
பகுதி, அடையார் ஆற்றின்பக்கம் நீண்டு கிடந்தது. உச்சி வெய்யிலிலும் அடர்ந்து கிடந்த வேப்பமரங்களாலோ என்னவோ மனதுக்கு 
இதமான தென்றல் காற்று சீராக வந்து ஒரு புத்துணர்வை விசிறியது. வசதியாக சாய்ந்து கொண்டு புத்தகத்தைப் புரட்டத் துவங்கினான்.

"சொர்க்கம் பார்த்தேன்.

உன் கண்களில்.....

சொக்கிப் போய்விட்டேன்!

நான் கண்டு பிடித்த உலகம் நீ !

மாண்டு போகாத அன்பு - என்னுள்

பொங்கிப் பிரவகிக்கிறது.

உன் விழியில் நிறைந்து வழியும்

அன்பு என் இருதயத்தை நிறைத்திருக்கின்றது ! "

- வாசித்த வரிகள் அவனுக்குள் சுகமாக நாற்காலி போட்டு சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டது. சட்டென்று மன வலிகள்
மறைந்து இதயம் இலவம் பஞ்சாய் மாறி உயர, உயர பறப்பது போன்றதோர் மென் சுகம். அடுத்தடுத்த பக்கங்களை அவன் 
மனம் உள்வாங்கிக் கொண்டிருந்தது.

அனிச்சையாக‌ அவன் விரல் அடுத்த பக்கத்தை வருடிப் புரட்டியபோது, வில்லிலிருந்து வெளிக்கிளம்பிய அம்பு போலசர்ரென்று
சறுக்கிக் கீழே விழுந்தது ஓர் துண்டுக் காகிதம். கிரி, அதைக் குனிந்து எடுத்தான்.

நம்மை வினோதமாகப் பார்க்கிறவர்களைப் பற்றிநான் கவலைப்படவில்லை - உன் கையை என் கையோடு கோர்த்துநட; திரும்பிப்
பாராமல் நட; உலகமே நம் பின்னால் திரண்டு வருகிறது! - அந்தத் துண்டுத் தாளில் முத்து, முத்தான கையெழுத்தில் இந்த வரிகள்.

வரிகளுக்குக் கீழே இடது ஓரத்தில் "ரோஸி"- எம்.எஸ்.14. என்றிருந்தது.

இந்தக் கையெழுத்தைப் பிரசவித்தகையை எடுத்து என் கையில் கோர்த்துக் கொண்டால்... நினைவுகள் இனிப்பாக நரம்புகளில் 
ஊர்வலமாக ஊர்ந்துஇனம் புரியாத கிளர்ச்சியில்..." கிரியின் உடம்பு சிலிர்த்துக் கொண்டது. புத்தகத்தில் அவன் பார்வை 
மீண்டும்விழ... அட துண்டுக் காகிதத்திலிருந்த அதே வரிகள்... மீண்டும் வாசித்தான் கிரி. அதற்கு மேல் அவனுக்குப் பொறுமை இல்லை.

ரோஸியின் முகவரியை நூலகத்தில் பெறுவதில் அவனுக்கு எந்தச் சிரமும் இருக்கவில்லை. அந்தப் புத்தகத்தையும் பதிவு செய்து 
வாங்கிக் கொண்டு கிளம்பினான். வீட்டுக்கு வந்ததும் கடிதம் எழுத ரம்பித்தான்.  வேறு யாருக்கு? உருவத்தைப் பார்க்காது 
எழுத்துக்களை மட்டுமே தரிசித்து, நூலகத்தில் கருக்கொண்டு மனதில் வரித்துக்கொண்ட வசீகரிக்குத்தான்.

வார்த்தைகளை நாகரீகமாகக் கையாண்டு, வாக்கியங்களில் ஒருவித வரையறைக் கட்டுப்பாட்டோடு, அவள்எழுத்துக்களில் 
மிளிர்ந்த கவிதை வரிகளில் இவன் மனம் கோர்த்துக் கொண்டதை நயமாக வெளிப்படுத்தியிருந்தான்.

முகவரியை எழுதி அஞ்சல் பெட்டியில் சேர்த்துவிட்டு வந்தபோது அவனுக்கு வந்திருந்தது ஒரு அவசர ஓலை, தந்திவடிவில்.
இலங்கைக்குச் செல்லும் விமானப்படையின் ஒரு பிரிவுக்கு அவன் பொறுப்பேற்று இன்று இரவேபுறப்படவேண்டும், என்றது
அந்தச் செய்தி. படித்துக் கொண்டிருந்தபோதே தொலைபேசி சிணுங்கியது. மேஜர்.சுரீந்தர் கோசு தான் பேசினார்.

விமானப் படையின் ஒய் பிரிவிற்கு தலைமைதாங்கி வழி நடத்துவது பற்றி தெரிவித்து விட்டு தாம்பரம் விமானப்படை
விமான தளத்திற்கு இரவு ஏழு மணிக்கு வந்துவிடவேண்டு மென்றும் இரகசியக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு ஒன்பது
மணிக்கு கிளம்பவேண்டும் என்றவர் தமது வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டார்.

ஐந்து மணித்துளிக்கெல்லாம் விமானப்படையின் வாகனம் வீட்டுக்கு வந்துவிட்டது. எப்போதும் தயார் நிலையில் இருக்கும்
ஒரு சூட்கேஸ், இன்னொரு தோல்பை, படுக்கை, மறவாமல் கவிதைப் புத்தகத்தினைத் தோல் பைக்குள்பத்திரப்படுத்திக்
கொண்டான்.

அவ்வளவுதான். கிரி கிளம்பிவிட்டான். வாகன ஓட்டியை அடையார் அஞ்சல் நிலையத்தின் ஓர் ஓரமாய் நிறுத்தச் சொல்லிவிட்டு
" ரோஸி"க்கு இன்னொரு கவரை அஞ்சல் பெட்டியில் சேர்த்தான்.

தீபாவளி நேரத்துப் பட்டாசு வெடிப்பதுபோல துப்பாக்கிக் குண்டுகளின் அலறல்; வழி தவறி மேகம் தரையிறங்கிவிட்டதோ என்பது 
போன்ற புகை மூட்டம்; அப்போது தொலைவில் விமானம் ஒன்று தீப்பந்தாக வெடித்துச் சிதறியது. இத்யாதிகளுடனான சூழலில் யாழ் 
நகருக்கு அறுபது கல் தொலைவில் இருந்த முகாமில் இறங்க இடம் பார்த்து இவனது விமானம் வட்டமடித்துக்கொண்டிருந்தது.

உயிருக்கு உத்திரவாதமில்லாத இடம். முப்பது சிப்பாய்கள் சென்ற டிரக் ஒன்று கண்ணி வெடியில் மாட்டி இரண்டுபேர்களை மட்டுமே 
இரத்தமும் சதையுமாக கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள். முகாம் முழுக்க பரபரப்பு; முகங்கள் இறுகி, சிரிப்பிழந்து சாவி 
கொடுக்கப்பட்ட பொம்மைகளாக இயங்கிக் கொண்டிருந்ததை அவனால்பார்க்க முடிந்தது.

ஸ்லோ மோசனில் நாட்கள் நகர்ந்ததாக கிரி எண்ணியது ரோஸியிட
மிருந்து கடிதம் வரும் வரைதான்.

பலாலி விமானதளத்தருகேயுள்ள முகாமில் நள்ளிரவில் மின் விளக்குகள் மின்சாரத்தை விவாகரத்து செய்த இருட்டில் கிரி,
மெழுகுவர்த்தி ஒளியில் தூக்கம் தொலைத்திருந்தான். கைகளில் கற்றையாக கடிதங்கள். சென்னையிலிருந்து வந்த 
இருபதாவது நாள் ரோஸியிடமிருந்து முதல் கடிதம் வந்தது.

" கவிதைகள் எழுத, படிக்கப் பிடிக்கும்; கவிதைகளை நேசிக்கத் தெரிந்தவர்களையும் எனக்குப் பிடிக்கும்...." என்று எழுதத் துவங்கியவள்,
பத்து நாளைக்கு ஒரு கடிதமாகி, இப்போது இரண்டு நாளைக்கு ஒரு கடிதமாக எழுதிஅனுப்பிக்கொண்டிருக்கிறாள். கிரியும் அதற்கு 
ஈடாக எழுதிக்கொண்டிருக்கிறான்.

இரவு பகலின்றி பறந்து, திரிந்து அலுத்துச் சலித்து வருபவனுக்கு ரோஸியின் கடிதங்கள் களைப்பைப் போக்கி புத்துணர்வைப் பூக்க
வைக்கும். அவள் எழுதியிருந்தாள்:-

அன்பே!புயல் சூறாவளி எதுவும் நம்மைத் தடுக்க முடியாது - இந்தஉலகமே காதலர்களை உதறிவிட்டு, ஓடினாலும் நாம் மட்டும் இருவர், 
ஒருவராக இணைந்திருப்பதை - எந்தசக்தியாலும் தடுக்க.....பிரிக்க முடியாது..! - ஒரு கணம் சிலிர்த்துக் கொண்டான், கிரி.

காரணம், அன்று உச்சி வேளையில் நடந்த சம்பவமும் ரோஸியின் எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியாது, என்ற வரிகளையும் 
நினைத்துத்தான் அந்தச் சிலிர்ப்பு ஏற்பட்டது.

வவுனியாக் காடுகளின் அடர்ந்த பகுதியொன்றில் தற்காலிகமாக சிறு விமான தளம் அமைப்பது தொடர்பாக மூன்றுடிரக்குகளில்
சிப்பாய்களோடு கிரி சென்று கொண்டிருந்தான். வழியில் பச்சிளம் பாலகர்களோடு தாய்மார்கள் மூட்டை முடிச்சுகளை சுமந்து
நடந்து கொண்டிருந்தனர். டிரக்கை நிறுத்தி விசாரித்தான். காட்டைக் கடந்து ஒரு சிறு கிராமத்திற்குப் போய்க் கொண்டிருப்பதாகச்
சொன்னார்கள்.

அவர்கள் தலைச் சுமையைவிட, கொடுமையான மனச்சுமையைச் சுமந்து, பசி பட்டினியோடு பயணித்துக் கொண்டிருக்கிற அவர்களின்
நரக வாழ்க்கையை எண்ணி மனத்துயரப்பட்டான். தனக்குப் பின்னால் வந்த டிரக்கில் அவர்களை ஏறிக்கொள்ளும்படி சொன்னன். 
18 பெண்கள், 12குழந்தைகள். தங்களிடமிருந்த பிஸ்கட், பழங்களை எல்லோர்க்கும் கொடுக்கச் செய்தான். எதைப் பற்றியும் 
கவலையில்லாத சிறு பிள்ளைகளிடம் தமாசாகப் பேசிச் சிரிக்க வைத்தான், கிரி.

அதில் ஒரு சிறுவனை, நீ பெரியவனாகிஎன்ன செய்யப் போகிறாய்? என்று கேட்டான்.

" இந்த நாட்டுக்கு ச‌னாதிபதியாகி, முதல்ல சண்டைய நிறுத்தி அம்மா,அப்பாக்களோடு எல்லாரும் சந்தோஷமாஅவங்கவங்க வீட்டுல 
இருக்கச் செய்வேன்.  இராணுவமே வேணாம்னு சொல்லிருவேன். புலியும் வேணாம், பூனையும் வேணாம் அப்டீன்னு சொல்லீருவேன்" 
என்றான்.

அந்தப் பிஞ்சு உள்ளம் கூட எந்த அளவு ரணமாகி இருக்கிறது என்பதனை எண்ணி கண்களில் நீர் துளிர்க்க கட்டி அணைத்துக் 
கொண்டான் கிரி. அவர்களை வழியில் அந்தக் கிராமத்தில் இறக்கிவிட்டுவிடும்படி சொல்லிவிட்டு, கை அசைத்து வழி அனுப்பினான்.

அவர்களை அனுப்பிவிட்டு உடன் வந்த அந்தப் பகுதிப் பொறுப்பாளியான கர்னல்.வீரசிங்க நாயகா விடம் வரைபடத்தைக் காட்டி 
எந்த இடத்தில் இருக்கிறோம் என்று கேட்டுக் கொண்டிருந்த அந்தச் சில நிமிடங்களில் அந்தக் கொடூரம் மிக மோசமாக 
நடந்தேறிவிட்டது.

தூரத்தில் காதைச் செவிடாக்கும் வெடியோசை. இது கண்ணி வெடியோசை போலிருக்கிறதே என்று கிரியும் மற்றவர்களும் அங்கு
விரைந்தனர். என்ன கொடுமை? சற்று முன் பேசிச் சென்றவர்கள் வெடித்துச் சிதறி வெந்துகொண்டிருந்தார்கள். கவலையில்லாமல்
சிரித்துப் பேசிய அந்தச் சின்னஞ்சிறுசுகள் வெளிச்சப் பந்துகளாய்வெந்துகருகிக் கொண்டிருந்ததைக் காணச் சகிக்காமல்
மனதைக் கல்லாக்கி ததும்பியெழும் கண்ணீரைக் கட்டுப்படுத்தி மனசுக்குள் 'ஓ'வென கதறியழுதது வேறு யாருக்கும் தெரியாது.

அவர்களை வழியில் பார்க்கவில்லையென்றால் இவனுமல்லவா எரிந்து கருகிக் கொண்டிருப்பான். நாளும் நடக்கும் அவலங்கள் 
தான் என்றாலும்யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாத பிஞ்சுகள் கண்ணெதிரே கருகியதை அவனால் தாங்க முடியவில்லை.
கண்ணீர் வழிய ரோஸிக்கு இதை எழுதினான். இப்படி நாளும் நடக்கும் சம்பவங்களை, அனுபவங்களை கடிதங்களில் பகிர்ந்து 
கொள்வான்.


காலச் சக்கரம் சுழன்றதில் ஒரு வருடம் தாண்டிப்போயிருந்தது.  அடுத்த மாதம் 14ம் தேதி இரவு சென்னை வருகிறேன். இரவு 
9லிருந்து 9.30க்குள் உன்னை எங்கு சந்திக்கலாம்? இடத்தை எனக்குத் தெரிவி.  அங்கு அந்தநிமிடத்தில் உன் முன்பு நானிருப்பேன்.

ஓ! அனைத்திற்கும் அற்புதம் நீ!

வேறெந்த அற்புதமும்

வேண்டாம் எனக்கு

இந்த உலகில்

எல்லாமுமாக நான்,

விரும்புவது

உன்னை மட்டும் தான்

என் தேவதை நீ!

வேண்டும் நீ!எனக்கு
எப்போதும்...எப்போதும்... எப்போதும்..."

- உன் ப்ரியமுள்ள வாலண்டைன் என்று எழுதினான்.
இந்தியப்படை சுமந்த தபால்களில் இவன் தபாலும் பறந்துபோனது.  போன வேகத்தில் பதிலும் பறந்து வந்தது.

" உங்களைப் பார்க்கவேண்டுமென்கிற தவிப்பு நாளும் அதிகரித்து வருகிறது. ஆனாலும் நாம் ஏன் சந்திக்கவேண்டும்? கடிதங்களில்
சந்திப்பது மட்டுமே தொடர்ந்தால் போதாதா? என்ற எண்ணமும் எனக்குள் எழுகிறது. மடல்களில் நாம் பரிமாறிக்கொள்ளும் 
ஏராளமான எண்ணப் பகிர்வுகளில் இல்லாத சந்தோச‌ம் நம் சந்திப்பில் ஏற்பட்டுவிடுமா என்ன? நம் சந்திப்புக்குப் பிறகும் இந்தச் 
சந்தோச‌ம் தொடருமா?

ஒரு வேளை தொடராது போனால் இருக்கிற சந்தோச‌த்தை விட்டுவிட்டு இல்லாத சந்தோச‌த் தேடலில் நாம் இறங்க வேண்டுமா? 
நேற்றிரவு முழுக்கத் தூங்காமல் யோசித்தேன். பொழுதும் புலர்ந்தது; முடிவும் முகிழ்த்தது. நாம் சந்திக்கிறோம். அண்ணா சாலை 
ஸ்பென்ஸர் ப்ளாசாவில் மூன்றாம் தளத்தில் 3425வது எண் அங்காடி முன்பு இருப்பேன். ஆமாம்... என்னை எப்படி அடையாளம் 
கண்டு பிடிப்பீர்கள்?

என் புகைப்படத்தைக்கூடப் பார்த்ததில்லை. இந்த ரோஸியிடம் ஒரு "ரோஜா"இருக்கும். அன்று இரவு என்னோடுதான் 
சாப்பிடுகிறீர்கள்! - பாதி பயமுறுத்தியும் மீதியை சந்தோச‌த்திலும் முடித்து இருந்தாள் ரோஸி.

அன்று பலாலி விமான தளத்திலிருந்து சென்னைக்கு கிளம்பும் கிரி மனசு முழுக்க மகிழ்ச்சித் துள்ளல்கள். இவன்சாதனை என 
எதைஎதையோ பட்டியலிட்டு யார் யாரோ பாராட்டினார்கள்; வாழ்த்தினார்கள். மாலைகள், நினைவுப் பரிசுகள் கொடுத்து யார் 
யாரோ கைகுலுக்கினார்கள். முகம் சிரித்துக் கொண்டிருந்தது. மனம் மட்டும் ஸ்பென்சர் ப்ளாசாவில் பறந்து திரிந்தது.

" என் மேனி சிலிர்க்க வைத்த அந்தக் கவிதை நல்லாள் எப்படி இருப்பாள்? கனவுக்கு உயிர் கொடுத்த காரிகையன்றோ!
எடுத்த காரியம் யாவினும் வெற்றி தேடிக் கொள்ளக் காரணமாயிருந்த அவள் பாரதி கண்ட புதுமைப் பெண்ணோ! என்
கனவு தேசங்களில் மட்டுமே கர்வமாக உலவியவள் இன்னும் சிறிது நேரத்தில் என் முன்னே..." அவன் மனம், அவன் செலுத்தும்
விமானத்தைவிட வேகமாக ஸ்பென்சர் பிளாசாவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.


"ஸ்பென்சர் பிளாசா" - வேகமாக வெளியேறிக் கொண்டிருந்த ச‌னத் திறளைக் கடந்து, மேலேறும் தானியங்கிப்படிகளில் நிற்கப் 
பொறுமையின்றி தாவி ஓடி மூன்றாம் தளம் வந்தான்.

கடை எண் 3415... 20... 24 ... அவளா? வானத்துத் தேவதை வழிதவறி இங்கு இறங்கிவிட்டதா?  அஞ்சலி, அமலா பால், திரிசா, 
இவர்களெல்லாம் சேர்ந்த கலவையோ! என அவன் மூளைக்கணினி ப்ராஸஸ் செய்து கொண்டிருந்தபோது 'டமால்' என அந்தத் 
திருப்பத்தில் வந்தவர் மீது இடித்து மன்னிக்கச் சொல்லித் திரும்பிய வேளையில் அந்தத் தேவதையைக் காணோம். கடை எண் 
3425 என்றிருந்ததைப் பார்த்த அந்த இடத்தில் கையில் ஒற்றைச் சிவப்பு ரோஜாவோடு ஓர் வனிதை.

அந்த வனிதைக்கு வயது அறுபதுக்கு குறையாமல் இருக்கும்.  சட்டென்று முகம் வாடிப் போனாலும் அதை வெளிக் காட்டிக்
கொள்ளாமல் மறைத்து செயற்கைப் புன்னகையை படரவிட்டுக் கொண்டு,
" வணக்கம். நான்... கிரி... கிரிதரன்," கைகூப்பினான்.

கைகோர்க்க வந்தவன் கை கூப்பி நின்றான்.

" வணக்கம். வாங்க... நீங்க தான் கிரியா? "

" ஆமாம். வாங்க.... நாம போய் சாப்ட்டுக்கிட்டே பேசுவோமே..." என்றான் கிரி.

" என்ன? என்னெப் பாத்ததும் தெகச்சுப் போயிட்டீங்களா?! "

" இல்லையே நா எதுக்கு தெகைக்கணும்? நீங்க தான் எல்லாம்..." அவன் முடிக்கவில்லை.

" ஆமா. ரோஸிக்கு எல்லாம் நாந்தான். ரோஸியோட அத்தை.   இப்பத்தான் உணவு விடுதியில் முன்பதிவு செய்ய‌ப் போனாள்" 
என்று மூதாட்டி சொன்ன போது ஒரு நூறு மெர்குரி விளக்குகள் கிரியின் முகத்தில் பிரகாசிக்க "போகலாமே என்று கிரி 
குனிந்து ரோஸியின் அத்தை வைத்திருந்த பையை எடுத்து நிமிர்ந்தான்.

அங்கே...அப்போது...

" நான் ரோஸி" உதடு குவித்துச் சொல்லியதே கவிதை  போலிருந்தது.

கிரியை நோக்கி கை நீட்டினாள். கை கோர்த்து நடந்தார்கள்.

" நம்மை வினோதமாகப்

பார்க்கிறவர்களைப் பற்றி

நான் கவலைப் படவில்லை -

உன் கையை என் கையோடு

கோர்த்து நட; திரும்பிப் பாராமல் நட;

உலகமே நம் பின்னால் திரண்டு வருகிறது! " -

ஸ்பென்சர் ப்ளாசா மூடுகிற நேரமாகிவிட்டதால்

உள்ளிருந்து திமுதிமுவென கூட்டம்,

கிரி-ரோஸிக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தது.

                              <0>**************<0>

<>இன்பவல்லி நீ எனக்கு...!?<>

                       இன்பவல்லி நீ எனக்கு...!?


ருட்டு வெளிச்சத்துக்கு விடை தந்திருந்தது.  விண்ணும் மண்ணும் இருள் கவிந்திருக்க ராஜமாளிகையிலிருந்து
இரண்டு உருவங்கள் வெளிவந்ததது. தட்டுத் தடுமாற்றம் இல்லாமல் நடந்து தென்வடலாக நீண்டு இருந்த ஆழி
மண்டபத்துக்குள் நுழைந்ததும் கதவு ஓசையின்றி மூடிக் கொண்டது.

கிசுகிசுத்த குரலில் இரண்டு உருவங்களும் எதைப் பற்றியோ விவாதித்து சட்டென ஒரு முடிவுக்கு வந்ததும் பின்னர் ஒரு
உருவம் கொல்லைப் புற வழியாக வெளியேறி மரத்தடியில் கட்டப்பட்டிருந்த புரவியை நோக்கிச் சென்றது. கண்ணிமைக்கும்
நேரத்தில் புரவி புழுதியைக் கிளப்பிக் கொண்டு பறந்தது.

இதை ஆரம்பத்திலிருந்து ஒன்றுவிடாமல் கவனித்த மூன்றாவது உருவம் நிம்மதிப் பெருமூச்சு விட்டு ராஜமாளிகைக்குள் நழுவியது.

அப்போது...முரட்டுக் கரம் ஒன்று அந்த உருவத்தின் தோள்பட்டையை இறுகப் பற்றி நிறுத்தி, யார் ? என வினவவும் செய்தது.

"சாரங்கன்" என்று ஒற்றை வரிப்பதில் ஒன்று உதிர்ந்தது.

" ஓ! மெய்காப்பாளரா? என்ற குரலில் சற்றே ஏளனம் கலந்திருந்தது.

சாரங்கனின் மெளனத்தை தொடர்ந்து, இருட்டில் காற்றாடச் சென்று வருகிறீரோ என்ற வினாவிற்கும் "ஆம்" என்ற ஒற்றைச் 
சொல்லையே பதிலாகத் தந்தான் சாரங்கன்.

"அரசனிடம் மெய்க்காப்பாளனாக இருப்பதை விட ஒற்றர் படைத் தலைவராக உம்மிடம் ஏராள தகுதிகள் உள்ளது" என்று 
சொல்லி சேனாதிபதி சேரலாதன் சிரித்தான்.

"இளவரசனை அழைத்து வந்து விட்டீர்களா?" என்று சாரங்கன் கேட்டதொனி அனாவசியப் பேச்சுக்குச் செல்ல 
விரும்பாததை குறிப்பால் உணர்த்தியது போலிருந்தது.

"நானும் புலி குத்தி, நீலிமலை எல்லாம் சென்று, சுற்றி அலைந்து திரிந்து சல்லடை போட்டுப் பார்த்துவிட்டேன். இளவரசர் அந்தப்
பக்கம் வேட்டைக்குச் சென்றதற்கான அறிகுறியே இல்லை. நானும் மற்றவர்களும் இப்போதுதான் திரும்பினோம்."

"மன்னர் இன்னும் நினைவு திரும்பாத நிலையிலேயே இருக்கிறார்.  இப்போது என்ன செய்வது?"

"அரண்மணை வைத்தியர் என்ன சொல்கிறார்?"

"இருபது நாழிகை கழிந்த பின் தான் எதையும் சொல்லமுடியும் என்கிறார்."

"மன்னருக்கருகில் யார் இருக்கிறார்கள்?"

"இளவரசி இன்பவல்லி இருக்கிறார்." - இருவரும் பேசிக்கொண்டே வந்ததில் மன்னர் மகேந்திர பூபதி படுத்திருந்த 
அறை முன் வந்து விட்டிருந்தனர்.

வழக்கமாக இரண்டு காவலாளிகள் இருக்குமிடத்தில் இருபதுக்கும் மேற்பட்ட ஆயுதந்தாங்கிய காவலாளிகள் 
ஓசையின்றி குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தனர். மெய்க்காப்பாளரையும் சேனாதிபதியையும் 
வாயிலிலிருந்த காவலாளி சிரம் தாழ்த்தி வணங்கி, இளவரசியார் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று 
சொல்லியிருக்கிறார்கள் என்றான்.

எங்களைச் சொல்லியிருக்க மாட்டார் என்று உள்ளே நுழைய சேனாதிபதி முற்பட்டபோது, "சற்றுப் பொறுங்கள் 
சேனாதிபதி " என்று சொல்லிய சாரங்கன் நாங்கள் இருவரும் வந்து காத்து இருப்பதாக இளவரசியாரிடம்
போய்ச் சொல், என்றார் வாயிற் காப்போனை நோக்கி.

சேனாதிபதியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

"மெய்க்காப்பாளரை மட்டும் இளவரசியார் வரச் சொல்லுகிறார்கள்" என்றான், உள்ளே சென்று திரும்பிய 
வாயிற்காப்போன்.

" மன்னிக்கவும் சேனாதிபதி அவர்களே இதோ வந்து விடுகிறேன்"
என்று சாரங்கன் உள்ளே நுழைந்து மறைந்தான்.

சேனாதிபதி பற்களை நறநறவென கடித்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு வேகமாக வெளியேறி, 
ராஜமாளிகையின் வெளி வாயிலுக்கு வந்தான்.

அதே நேரத்தில் சேனாதிபதியின் வலதுகரமான வீனசேணன் வேர்க்க விறுவிறுக்க வந்து கொண்டிருந்தான். 
வந்தவன், பதற்றத்தோடு சேனாதிபதியின் காதில் கிசுகிசுத்தான். சேனாதிபதி மிகுந்த கலவரத்தோடு, வீனசேணனோடு 
கிளம்பினான். அவர்கள் அறியாமல் இரு விழிகள் பின் தொடர்ந்தது. அமைதியான அந்த மூன்றாம் ஜாம வேளையில் 
ராஜமாளிகை பலவிதமான குழப்பங்களிலும், சதிவலைப் பின்னல்களிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது.


விடிவதற்கு ஒரு நாழிகை இருக்கும்போது ராஜமாளிகையைச் சுற்றி அகழி போல குதிரைப் படை வீரர்களும், காலாட்படை 
வீரர்களும் சூழ்ந்திருந்தனர். ரகசிய கட்டளைகளைப் பிறப்பித்த கம்பீரத்தோடு, தனது சமிக்ஞை கிடைத்ததும் வீரர்களை வழி 
நடத்தும்படி சொல்லிவிட்டு ராஜமாளிகைக்குள் நுழைந்தது அந்த உருவம்.

மன்னர் மகேந்திர பூபதியின் சயன அறைக்குள் அத்துமீறி அந்த உருவம் நுழைய முற்பட்டபோது வாயில் காவலர்கள் குத்தீட்டியை
குறுக்கே நீட்டி தடுத்தி நிறுத்த, உருவம் உடைவாளை உருவி "விலகுங்கள்" என கர்ஜிக்க சிறு சலசலப்பு எழுந்தது.

அப்போது...

"யாரங்கே... சேனாதிபதியை உள்ளே அனுப்புங்கள்," என்று இளவரசியிடமிருந்து குரல் வந்தது.

சரேலெனப் புயலாக உள்ளே நுழைந்த சேனாதிபதியிடம், "அப்படி என்ன அவசரம் சேனாதிபதி அவர்களே? என்று இளவரசி 
இன்பவல்லி எதிர் கொண்டு கேட்டதும், வந்த வேலையை மறந்தான். இளவரசியை இமைக்காமல் பார்த்தான்.

நிலவின் ஒளி கொண்டு தீற்றப்பட்ட ஓவியமா? அல்லது கை தேர்ந்த சிற்பியால் செதுக்கப்பட்ட சிற்பமா? அதரங்கள் அசைவில் 
அகிலமே அடிபணியுமே ! விம்மி எழுந்த மார்புகள், விழித் திரைக்குள் வளைய வளைய வரும் கருவிழிகள், தரை தொடும் ஆலம் விழுதாய்
கார்கூந்தல்... காண்போரைக் கிறங்கச் செய்யும் அவள் பேரழகில் சேனாதிபதி சொக்கிப் போய் நின்றதில் ஆச்சரியம்
ஏதுமில்லைதான்.

இன்பவல்லி நீ எனக்கு மட்டும் தான்...என்று சேனாதிபதி வாய் விட்டுச் சொல்லவும் செய்தான்.

என்ன சேனாதிபதி சிலையாக நின்றுவிட்டீர்கள்? என்று இளவரசி கேட்டபோது சுய நினைவு பெறாமலே
"இன்பவல்லி நீ எனக்கு மட்டும் தான்" என்று சற்று உரக்கவும் சொன்னான்.

என்ன சேனாதிபதி யாரிடம் பேசுகிறீர்கள் என்பது நினைவு இருக்கட்டும், என்று இளவரசி சீற்றமாகச் சொல்லவே 
சுய நினைவுக்குத் திரும்பினான் சேனாதிபதி.

இன்பவல்லி இனி நீ என் இதயராணி'; என் இதய சிம்மாசனத்தில் எப்போதோ அமர்ந்து விட்டாய். நான் சொல்லியதில் 
தவறேதும் இல்லை இன்பவல்லி, என்றான் சேனாதிபதி.

"மதி கெட்டவனே முதலில் இங்கிருந்து வெளியே போ"

"ஆம். இந்த மதிமுகத்தாளின் அழகில் மயங்கி மதி கெட்டுத்தான் போய்விட்டேன். சொல்கிறேன் கேட்டுக் கொள்: நீ 
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உனக்கு மாலையிடப்போவது நாந்தான்.

சேனாதிபதியை எப்படி மணப்பது என்று யோசிக்கிறாயா? கவலையை விடு நாளை நீ மணக்கப் போவது மகேந்திரபுரி
மன்னனை! என்ன விழிக்கிறாய்? சேனாதிபதிதான் நாளை, மகேந்திரபுரி நாட்டின் மன்னனாக முடிசூட்டப்படப் போகிறான்."

" விசுவாசமற்ற கயவனே பகற் கனவு காண்கிறாய். இனியும் இங்கு நின்று கொண்டிருக்காதே. ஓடி உயிர் பிழைத்துக்கொள். 
இல்லையேல் உன் உடம்பில் தலை இருக்காது."

" இன்பவல்லி...இவ்வளவு அழகாக உன்னால் மட்டுமே கோபப்படமுடியும். அழகுப் பதுமையே! ஆவேசப்படாதே.

வேட்டையாடப் போன இளவரசன் திரும்பி வரப் போவதில்லை.  எனது ஆட்கள் இளவரசனின் கதையை முடித்து இருப்பார்கள்.
அரசனின் அந்திம வேளை நெருங்கிவிட்டது. இப்போது அவரது ஆயுளை முடித்துவிடப் போகிறேன். விடிந்தால் இந்த மகேந்திரபுரி 
மன்னனில்லாமல் தவிக்கக் கூடதல்லவா? அதனால் இந்த சேனாதிபதி நாட்டின் மன்னனாகத் தடை ஏதும் இல்லை."

சண்டித்தனம் செய்யாமல் என்னை ஏற்றுக்கொள். இனியும் நீ சாரங்கனை அடைய கனவு காணாதே. நீ இணங்கவில்லை
என்றால் இன்பவல்லி ... நீயாக இணங்கும் வரை பாதாளச் சிறையில் அடைத்துவிடுவேன். நீ புத்திசாலியும்கூட... புத்தம்
புது உலகு படைப்போம் வா... என்று இன்பவல்லியின் கையை எட்டிப் பிடித்தான்.

அப்போது...

"நில்... பித்தம் தலைக்கேறி சித்தம் கலங்கிப் போன இவனைக் கைது செய்யுங்கள்." - இளவரசன் வீரர்கள்புடைசூழ வந்தான்.
சரேலென சேனாதிபதி வாளை உருவிக்கொண்டு இளவரசியை நோக்கிப் பாய்ந்தான். ஆனால் அதற்குள் இளவரசன் மின்னலெனப்
பாய்ந்து சேனாதிபதியைப் பிடிக்க வீரர்கள் நாலாபுறமும் சேர்ந்து பிடித்துக் கொண்டனர்.

"சாரங்கன், உன் குள்ளநரிச் சதிவேலையை கண்டு பிடித்து மன்னரிடமும் என்னிடமும் சொல்லிவிட்டார். எதிரி நாட்டோடு
கள்ள உறவு கொண்டு சூழ்ச்சியாக சதி வலை பின்னியதை அறிந்தோம். நான் வேட்டைக்குச் செல்வதாக போக்குக்
காட்டிவிட்டு அரண்மனைக்கே திரும்பி விட்டேன்.  மன்னர் திடீர் உடல் நலக் குறைவால் படுத்த படுக்கையாகிவிட்டார் என்று 
அரண்மனை வைத்தியர் மூலம் சொன்னதும் நாடகம் தான்.

எதிரி நாட்டுப்படையை வரவழைத்து நீ எங்களை கைது செய்யும் திட்டத்தை தவிடு பொடியாக்க நாங்கள் செய்த திட்டம் தான் இது.

ராஜமாளிகையைச் சுற்றி உன்னால் நிறுத்தப்பட்டிருந்த மகத நாட்டுப் படை வீரர்கள் இப்போது சிறைப்படுத்தப் பட்டுள்ளனர்.
நாட்டைக் கைப்பற்றத் துணிந்த நீ இளவரசி மீதும் கை வைக்கத் தயாராகி விட்டாய். உனக்கு என்ன தண்டனை என்பதை மன்னரே
சபையில் நாளை அறிவிப்பார்."என்ற இளவரசன், சேனாதிபதியை தக்க காவலுடன் சிறை வைக்க உத்தரவிட்டான்.
***

"சுய நலத்துக்காக நாட்டையே எதிரிக்கு காட்டிக் கொடுத்து பணயம் வைக்கத் திட்டம் தீட்டியது, என்னையும் இளவரசனையும் கொல்லத் துணிந்தது, இளவரசியிடம் வரம்பு மீறி நடந்ததையும் வைத்து சுலபமாக உனக்கு மரணதண்டனை கொடுக்கலாம். தான் விசுவாசமற்றுப் போனதை நாளும் எண்ணி உணரவேண்டும் என்பதற்காக, பாதாளச் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவிக்க ஆணையிடுகிறேன், என்றார் மன்னர் மகேந்திர பூபதி.

"இந்த அரசவையின், மகிழ்ச்சியான இந்தத் தருணத்தில் இன்னொரு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன். எனது மெய்காப்பாளர்
சாரங்கனின் மதிநுட்பத்தால் சேனாதிபதியின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. மகேந்திர புரி நாடு எதிரி வசமாகாது
காக்கப்பட்டது. எங்கள் உயிர் பாதுகாக்கப்பட்டது. இதற்குக் காரணமான மெய்காப்பாளரை யாம் பாராட்டுவதோடு
அவரையே சேனாதிபதியாகவும் நியமிக்கிறேன்.

புதிய சேனாதிபதிக்கு என் அன்புப் பரிசாக, என் இனிய மகள் இன்பவல்லியை பரிசாக அளிக்கவும் முடிவு செய்துள்ளேன்,
என்றார் மன்னர் மகேந்திரபூபதி.

மன்னரின் எதிர்பாராத அறிவிப்பு சாரங்கனுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மாடத்திலமர்ந்திருந்த இன்பவல்லியை நோக்கிப் பார்வையைச் சுழல விட்டான் சாரங்கன். இன்பவல்லியும் சாரங்கனை நோக்க அங்கே...வேல் விழியும், வாள் விழியும் கலந்தன.

                                  <>############<>

<>நூர்சகானின் நிக்கா!<>

              நூர்சகானின் நிக்கா!


"அலைக்கும் சலாம்"- தனக்கு சலாம் செய்தது யார் என்று கவனித்தபடியே மெளல்வி இப்ராகிம் வீட்டுக்குள் நுழைந்தார். 

யாரு கலிமுல்லாவா? அவர் கண்கள் ஆச்சரியத்தை விசிறியது. 

"ஆமாங்க" உட்கார்ந்திருந்த, கலிமுல்லா எழுந்து கொண்டான்.

"அமருப்பா". 

நானே உன்னப் பாக்க வரணும்னு இருந்தேம். ஒரு நடைய மிச்சப்படுத்திட்ட...யா...அல்லாஹ்.. என்ன வெய்யில் அல் 
ஹந்துலிலுல்லா... எம்மா நூரு தம்பிக்கு தாகத்துக்கு எதாச்சும் குடுத்தியா? " உள் பக்கம் நோக்கி குரல் கொடுத்தார். 

"தங்கச்சி மோர் குடுத்துச்சு"

"அப்டியா, கலீமு, நாளை பெரிய பள்ளிவாசல்ல ஜக்காத் கூடுது.
மதியம் தர்கா குழுக்கூட்டமும் இருக்கு. காயல்,புதுப்பட்டிணம் எல்லாத்துல இருந்தும் வர்றாங்க. ஒரு அம்பது,அறுபது 
பேருக்கு பிரியாணி, தால்சாசெய்யணும். அதான் ஒங்கிட்ட சொல்லிட்டா என் கவல தீந்துடுமில்ல"

"மன்னிச்சுடுங்க. அண்ணனுக்கு திடீர்னு ஒடம்பு முடியாம ஆஸ்பத்திரில சேத்துருக்காங்களாம். திடீர்னு தகவல்
வந்துச்சு. செலவுக்கு பணம் வேணும். அதான் ஒங்களப் பாத்து வாங்கீட்டுப் போலாம்னு வந்தேன்."

"அடடே அப்டியா? எவ்வளவு வேணும்?"

"ஒரு எறநூறு இருந்தா பரவாயில்ல"

"போற எடத்துல முன்னப் பின்ன செலவிருக்குமே போதுமா? இந்தா எதுக்கும் ஐநூறா கொண்டு போ..."

"ரொம்ப நன்றிங்க‌...நாளை..."

"அட.. அத நா பாத்துக்கிறேன். நீ கெளம்பு..."

இப்ராகிம் பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டாரே தவிர அவருடைய மனமெல்லாம் நாளைய பள்ளிவாசல் 
ஏற்பாடுகளை பற்றியதில் உழன்று கொண்டிருந்தது.

"வாப்பா...சொன்னா கோவிப்பீங்க. இதெல்லாம் எதுக்கு நீங்க இழுத்துப்போட்டுட்டு செய்யணும். ஒங்க ஒடம்பு இருக்கதுக்கு
அலய முடியுமா? " என்ற மகளின் கேள்வி அவரின் சிந்தனையிழைகளை அறுத்தது.

"நீ சொல்றது சரிதாம்மா நூரு. ஒரு வருச‌மா ரெண்டு வருச‌மா? நாப்பது வருச‌மா செஞ்சிட்டு வர்றேன். மேஸ்திரிட்ட 
சொன்னா நடந்துரும்னு வர்றாங்க. அவங்க மொகத்துல அடிச்ச மாதிரி எப்படி முடியாதுன்னு சொல்றதும்மா?

" ஒடம்புல வலு இருந்துச்சு ஓடிஒடி செஞ்சீங்க. இந்த நோம்போட
இந்த வேலை யெல்லாம் விட்டுட்டு பேசாம ஓய்வெடுங்க?" -என்றாள் மகள் நூர்ஜஹான்.

" ஒரு சின்ன திருத்தம் நூறு, இந்த நோம்போடங்கிறத, ஒன்னோட நிக்காவோடன்னு மாத்திக்கம்மா!"

" ஆமா ஒங்களுக்கு 'உ' 'ஆ'ன்னா நிக்காவுல வந்து நிப்பீங்க" என்றாள் சற்று எரிச்சலாக.

" ஒனக்கு நிக்கா காலாகாலத்துல முடிஞ்சுருந்தா ஒம் பையனுக்கோ, பெண்ணுக்கோ பதினஞ்சு வயசாவது ஆயிருக்கும். 
ம்..ம்ம் " என்ற அவரின் பெருமூச்சில் கவலை கலந்திருப்பதை அறிய முடிந்தது.

" எனக்கு நிக்காவே வேணாம். நிக்கான்ற வார்த்தையே எனக்கு புடிக்கல. ஒங்கள ஒழுங்காப் பாத்துட்டு இருந்தா... 
அதுவே எனக்கு போதும் வாப்பா..."

" ஒங்கம்மா ஒங் கவலையிலயே போய் சேந்துட்டா. ஆனா நா கண்ண நிம்மதியா மூடணும்னா ஒனக்கு ஒரு வழி 
செய்யாம முடியாதேம்மா "-

" முடியாதுப்பா. எனக்கு இந்த சென்மத்துல நிக்கா இல்லேன்னு ஆயிருச்சுன்னு போன வருச‌மே முடிவு பண்ணீட்டேன். 
ஒன்னா ரெண்டா அத்தனை பேரும் சொல்லி வச்சமாதிரி சொல்லீட்டுப் போய்ட்டாங்க. என் மனசு வெறுத்துப்போச்சு.

இப்பல்லாம் எனக்கு நிக்கா ஆகலேங்கிறத விட எனக்காக நீங்க கவலப்படறத என்னால சகிக்க முடியல. அஞ்சு வேளை 
தவறாம தொழுறீங்க. தாராவியும் விடாம தொழறீங்க. அல்லாவோட கருணை இல்லீயே வாப்பா..."- அவளின் கண்களிலிருந்து 
கண்ணீர் சரம் சரமாய் உதிர்ந்து தெறித்து விழுந்தது.

" நூறு... அழாதம்மா.. அல்லாவோட சோதனைன்னு தாம்மா நெனைக்கேம். ஒன்னோட நல்ல மனசுக்கு ஒரு கொறவும் வராதும்மா. 
நா, தொழுதுட்டு வர்றது எனக்கு அது வேணும் இது வேணும்ங்கிறதுக்கு அல்ல. நம்மள விட இந்த சமுதாயத்துல எவ்வளவோ கீழான 
நெலயிலே இருக்கிறாங்க. குடிக்க கூழுகூட இல்லாம வந்த நோய நீக்க வழியில்லாம... இப்படி இருக்கிற சமுதாயத்துல நம்மள 
அந்த மாதிரி எந்த கொறயும்  இல்லாம வச்சுருக்கிற அல்லாவுக்கு நன்றி சொல்லத்தாம்மா தொழுவுறேன். நம் மனக் கொறையை 
அல்லா அறிவார்.  தள்ளீட்டே போறதுக்கு எதாவது காரணம் இருக்கும்மா. அல்லா நம்ம கை விட மாட்டாரும்மா..."

" என்னமோ சொல்லி என்னை அடக்கி வச்சிடுறீங்க. நானாவது அழுது கொட்டித் தீத்துடுறேன். நீங்க வெளிய காட்டாம உள்ளுக்குள்ள 
அழுது புலம்பி வேதனப் படுறது எனக்கு நல்லாவே தெரியும் வாப்பா. வெளிக்கு என்னை சமாதானப் படுத்துறீங்க. இல்ல வாப்பா."

" ஆமாம்மா. இந்த கையாலாகாதவனால அதத் தான் செய்யமுடியுது... என்று எதையோ சொல்ல வந்தவர் அதை மாற்றி, ஒரு துண்டு 
குடும்மா, வெயில் சுள்ளுன்னு வர்றதுக்குள்ள மேலத் தெரு வரை போயிட்டு வந்துர்றேன்." என்றார்.


இப்ராகீம் சின்ன பட்டிணம் பேரூராட்சியில் பில் கலெக்டரா வேலைக்குச் சேர்ந்து மேற்பார்வையாளராக உயர்ந்து ஓய்வும் பெற்று விட்டார். 
வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் அந்த மேஸ்திரி பட்டம் மட்டும் ஒட்டிக் கொண்டது. ஆஸ்துமாவோடு போராடிக் கொண்டிருந்த 
மனைவி ஆமீனா பேகத்துக்கு, தம் ஒரே மகளுக்கு வயது ஏறிக் கொண்டே போகிறது.  திருமணம் ஆன பாடில்லையே என்கிற கவலையும் 
சேர்ந்து ஆக்கிரமித்து மூன்று வருஷங்களுக்கு முன் இரவில் தூங்கப் போனவள் எழுந்திருக்கவே இல்லை.

குணத்திலும் அழகிலும் நூறு மார்க் கொடுக்கலாம் நூர்சகானுக்கு. 32 வயதாகும் அவளுக்கு திருமணம் என்பது கனவாகத்தானிருந்தது. 
அவளுக்கு அழகை அள்ளிக் கொடுத்த இறைவன் ஒரேஒரு குறையை மட்டும் கொடுக்காமலிருந்தால் எப்போதோ திருமணம் முடிந்து 
போயிருக்கும்.

அன்னவாசல் அசரத் ஏற்பாட்டின் பேரில் நாளை நூரைப் பெண் பார்க்க வருவதாக இப்ராகிமுக்கு தகவல் வந்தது. மாப்பிள்ளை 
சொந்தமாக ஜவுளிக் கடை வைத்து இருக்கிறாராம். மாப்பிள்ளைக்கு ஒரு அண்ணன், ஒரு அக்கா. இருவருக்கும் திருமணமாகிவிட்டது. 
விபத்து ஒன்றில் இடது காலை இழந்த மாப்பிள்ளை சிராஜுதீன், திருமணமே வேண்டாம் என்று இருந்துவிட்டவரை இப்போது அசரத் 
ஒருவழியாக பேசி சம்மதிக்க வைத்திருக்கிறார்.

பெண்ணுக்கு வசதி முக்கியமில்லை. குணம் தான் முக்கியம் என்று மாப்பிள்ளை வீட்டார் சொல்லி விட்டார்களாம். இதெல்லாம் 
அன்னவாசல் அசரத் சொல்லி அனுப்பிய தகவல்கள்.

" எதுக்கு வாப்பா இந்த விஷப் பரீட்சை? சொன்னாலும் கேட்க மாட்டேம்பீங்க. வர்றவங்களுக்கென்ன வாய் வலிக்காம சொல்லி
அழ வச்சுட்டுப் போய்டுவாங்க." அனுபவங்கள் தந்த வேதனையில் சொன்னாள் நூர்.

" எனக் கென்னமோ இந்த தடவை நல்லபடியா எல்லாம் முடியும்மா. நம்பிக்கை இருக்கு. சந்தோச‌மா இரும்மா." ஒரு தந்தையின் 
நிலையில் அதைத்தானே சொல்லமுடியும்!

"வாப்பா... இதுவே எனக்கு முதலும் கடைசியுமா இருக்கட்டும்." முடிவாகவே சொன்னாள் நூர்.

காலையில் இருந்தே இப்ராகிம் இருப்புக் கொள்ளாமல் தவித்தார். மாப்பிள்ளை வீட்டார் வரப் போவது தான். தலப்பா கட்டி நாயக்கர் 
கடை பிரியாணி மாஸ்டரை கொண்டு வந்து நெய் மணமணக்க பிரியாணி ரெடியாகிக் கொண்டிருந்தது.

பக்கத்து வீட்டு ஃபாத்துமா, கீழத் தெரு மம்மாணி, ஜன்னத் என்று வீடே கலகலவென்று இருந்தது.

ஒரு மணி சுமாருக்கு வந்தார்கள். மாப்பிள்ளையின் உம்மா, வாப்பா, சச்சா என பத்துப் பேர்கள் வந்திருந்தனர். எல்லோரையும் வரவேற்று 
சம்பிரதாயமாக சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு இப்ராகிம் சாப்பிட அழைத்தார். பிரியாணி சிறப்பா? இல்ல தால்சா சிறப்பா? 
வாய்க்கு வாய் புகழ்ந்து கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.

" இன்சா அல்லா இந்த நிக்கா முடிஞ்சு நம்ம சின்ன பட்டிணத்துக்கும் அன்னவாசலுக்கும் விட்டுப்போன தொடர்பு எல்லாம் மீண்டும் 
கை கூடணும். நூரு குணத்தில் தங்கம். நாங்க ரெம்ப சொல்லக் கூடாது. நாளைக்கு நீங்க சொல்லணும்." என்று தாம்பூலத் தட்டிலிருந்த 
வெற்றிலை பாக்கை மென்று கொண்டே பெரியபள்ளி முத்தவல்லி மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

மாப்பிள்ளை வீட்டுத்தரப்பிலிருந்து வந்த பெண்கள் நூர் இருந்த அறைக்கு நகர்ந்தனர்.

நூரை சுற்றி இருந்தவர்கள் விலக ஜமக்காளத்தில் அமர்ந்திருந்த நூர் வேகமாக எழ முயற்சி செய்ய, மாப்பிள்ளையின் தாயார், 
"பரவாயில்லை உட்காரும்மா என்று உட்காரச் சொல்லி அருகில் உட்கார்ந்தார். வழக்கமான மாப்பிள்ளை வீட்டாரின் 
விசாரிப்புகள் நடந்தது. பின்னர் அவர்களுக்குள் ஒரு சிறு வட்டமேஜை கிசுகிசுப்புகள் எல்லாம் முடிந்த பின், எல்லோர் 
கண்களிலும் திருப்தி தெரிந்தது.

" எங்களுக்கு ஒன்ன புடுச்சிருக்கு.  "அபுவு"க்கும் நிச்சயம் பிடிக்கும். நிக்காவே வேணாம்னு இருந்தான். அது ஒனக்காகத்தான் 
போலிருக்கு. ஜவுளிக் கடைக்குப் பின்னாடியே வீடு இருக்கு. நிக்கா முடிஞ்சு நீங்க ரெண்டு பேரும்தான் அங்கு இருக்கனும்.

நாங்க பக்கத்து கிராமத்துல இருக்கோம். அவனுக்கு லாரி ஆக்சிடண்ட்ல கால் தான் போயிருச்சு. அவனுக்கு நீதான் கையும் 
காலுமா இருந்து எல்லாத்தையும் கவுனிச்சுக்கனும்," என்று மாப்பிள்ளையின் அம்மா சொன்னாள். என்ன சொல்வது, எப்படிச் 
சொல்வது என்று தெரியாமல் நூர் தலையை மட்டும் ஆட்டினாள்.

மனசுக்குள் இனம்புரியாத சந்தோச‌ம் பொங்க, உற்சாக மத்தாப்பூக்கள் மலர்ந்திருப்பதை அவள் முகம் வெளிச்சமிட்டுக் 
காட்டியது. எத்தனை வருடக் கனவுகள்? ஏக்கங்கள். உப்புக்கரித்த கன்னங்களில் இப்போது ஆனந்தக் கண்ணீர் 
ஆர்ப்பாட்டமாக இறங்கி இனிக்க வைத்திருக்கிறது. மகிழ்ச்சிப் பிரவாகம் அவளுக்குள் நடத்திக் கொண்டிருக்கும் 
வாணவேடிக்கைகளுக்குள் பரவசப்பட்டுப் போயிருந்தாள்.

" அப்ப நாங்க கெளம்புறோம்."- எல்லோரும் எழுந்து கொண்டார்கள். திடீரென அவர்கள் எழுந்ததும், சுய நினைவுக்கு வந்த 
நூர், தட்டுத் தடுமாறி கையை ஊன்றி எழுந்த போதுதான் எல்லோரும் அவளை முழுதாக கவனித்தனர்.


" அட இதென்ன? ஒனக்கு கால் இப்புடீன்னு சொல்லவே இல்லியே!? நல்ல வேளை இன்சா அல்லா என்னோட மகனை 
காப்பாற்றினார்." என்று உரத்துச் சொல்லிய மாப்பிள்ளையின் அம்மா வெளியே வந்தவர், பெண்ணுக்கு கால் ஒச்சம்னு 
சொல்லவே இல்லையே. எம் மகனுக்கும் கால் ஒச்சம் தான். அதுக்காக நாங்க நொண்டிப் பெண்ணை எடுக்க மாட்டோம்.

ஒரு வார்த்தை சொல்லாம நிக்காவ முடிச்சிறப் பாத்தீங்களே. நல்ல வேளை. எந்திரிங்க போவலாம்..." என்றார்.

இப்ராகிம் எதோ சொல்ல வந்தவரை, " போதும் நீங்க ஏதும் சொல்ல வேண்டாம். எங்களுக்கு இந்த நிக்காவில் 
விருப்ப‌மில்லை...வாங்க போகலாம்..." விடுவிடுவென்று எல்லோரும் வெளியேறிவிட்டனர்.

நூருவின் கதறல் அங்கிருந்தவர்களை உருக்குலையவைத்தது. வாராது போல் வந்த திருமணம், நிமிட‌ங்களில் நிர்மூலப்பட்டுப் 
போயிற்றே. அவள் மனதிற்குள் பூட்டிச் சிறை வைத்திருந்த ஏக்கங்களுக்கு விடிவு வந்துவிட்டதென எண்ணி ஆனந்தித்துப் 
போயிருந்த அந்தப் பொழுதுகளுக்கு அவ்வளவு சீக்கிரமாகவா ஆயுள் குறைவு நேர்ந்துவிட்டது?

அலைஅலையாய் ஆர்ப்பரித்த சந்தோஷங்கள் நொடியில் அடங்கிப் போனது. கண்ணீர் துளிகள், பன்னீர்துளிகளாக மாறிவிட்டது என்கிற
ஈர நினைவுகளில் நீந்திக் கொண்டிருந்தவளை, வக்கிர வார்த்தைக் கொதி நீரில் அல்லவா தூக்கி வீசிவிட்டார்கள். அவள் கனவுகள் 
வெடித்துச் சிதறியதில் வெளிப்பட்ட விம்மல்கள்... வேதனை கண்ணீர்த் துளிகள் கல்லையும் கரைத்து விடும்;

அவளின் கண்ணீர் துளிகளுக்கு மட்டும் சக்தியிருந்தால், திராவகத் துளிகளாக மாறி, வார்த்தைகளில் அக்கினியை விசிறிச் சென்றவர்களை 
வீழ்த்தியிருக்கும். நொறுங்கிச் சிதறிய அவள், இரத்தக் கண்ணீர் வடித்ததில் முகமே வீங்கி விட்டது. ஒரு மென்மையான மலரை 
வன்மையாகச் சிதைத்துவிட்டுப் போய் விட்டார்கள்.

"நூரு அழாதம்மா. ஒனக்குன்னு ஒருத்தன் இனிமே பொறக்கப் போறதில்ல. ஒனக்குன்னு பொறந்தவன அல்லாஹ் கொண்டுவந்து 
அவரா நிறுத்துவார். நீ அழாதம்மா..." என்று முத்தவல்லி ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தார்.

"பாய் அவள அழ விடுங்க; அழட்டும்.....அழட்டும் பாய்...அழட்டும்...அழுதாத்தான் அவ மனசு ஆறும். நிக்காவே வேணாம்னவள நான் 
தான்...நாந்தான்...என்னாலதான். ஆமீன் இதெல்லாம்... இந்தக் கொடுமையெல்லாம் பாக்க வேணாம்னுதான் போயிட்டியாம்மா..." 
என்று -சொல்லிக் குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தார் இப்ராகிம்.

யாரைத் தேற்றுவது என்று தெரியாமல் அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப் படுத்துவதில் தோற்றுப் போய் இருந்தார்கள்.

ஒரு கால் ஊனம் என்பது பெரும் குறையா? மனம் எப்படி? குணம் எப்படி? அதெல்லாம் பாக்க வேணாம்?

திருமணத்துக்கு முன்னால ஊனப்பட்டவளை வேண்டாண்டு சொல்றாங்க. இதுவே திருமணமாகி விபத்தில ஒரு காலோ, 
கையோ ஊனமானா அப்போ என்ன செய்வாங்க. மனைவியே வேண்டாம்ன்னு நிராகரிச்சுடுவாங்களா!? என்ன ஒலகமிது
என்று கலீமுல்லா மனம் பொறுக்காம இரைந்து சொல்லிக் கொண்டிருந்தான்.

அப்போது...

"அய்யா...அய்யா" என்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடி வந்த பக்கத்து வீட்டுச் சிறுவன், " ஒங்க வீட்டுக்கு வந்தவங்க மீது 
சந்தை ரோட்டுலருந்து வந்த பஸ் மோதீருச்சு. ஒரே கூட்டம்" என்றான் சிறுவன்.

"யா அல்லா... இதென்ன சோதனை..." என்ற இப்ராகிம் முத்தவல்லியை கூட்டிக் கொண்டு ஓடினார்.

மாப்பிள்ளையின் அம்மாவிற்குத்தான் தலையில் பலத்த அடி. வாப்பாவிற்கு முதுகிலும் தோள்பட்டையிலும் காயம். அரசு 
மருத்துவமனையின் கலவையான மருந்து நெடி மூக்கைத் துளைத்தது.

"ச‌மீலா உறவுக்காரங்க யாரு?"- என்றபடியே எமர்ஜன்சி வார்டிலிருந்து டாக்டர் வேகமாக வந்தார்.

இப்ராகிமும் முத்தவல்லியும் எழுந்து நின்றார்கள்.

"யார் நீங்களா... ஓ பாசிட்டிவ் ரெண்டு பாட்டில் வேணும். உறவுக்காரங்கள்ள கெடச்சா நல்லது.

இல்ல லயன்ஸ் கிளப்ல ட்ரை பண்ணுங்க. ஒரு மணி நேரத்தில எங்களுக்கு வேணும். இல்லன்னா நாங்க ஒன்ணும் செய்ய 
முடியாது என்ற மருத்துவ‌ர், அரசாங்க மருத்துவருக்கேயுள்ள இயந்திரத் தனத்தோடு, பதிலைக் கூட எதிர்பாராமல் போய்விட்டார்.

" என் மகளோட இரத்தம் 'ஓ' பாசிட்டிவ் தான் பத்து நிமிட‌த்துல வந்துர்றேன் " என்று முத்தவல்லியை இருக்க வைத்துவிட்டு 
இப்ராகிம் கிடைத்த டாக்சியில் வீட்டுக்குப் பறந்தார்.

* * *

" என்னை மன்னிச்சுரும்மா. ஒன்னை வேணாம்னு வந்தது அல்லாவுக்கே பொறுக்கல. கை மேல பலனக் கொடுத்துட்டார் 
பாத்தியா?" -என்றாள் ஜமீலா, மாப்பிள்ளையின் அம்மா.

" நீங்க பெரியவங்க அப்படி எல்லாம் சொல்லக்கூடாது." என்றாள் நூர்.

" உன் ரத்தம் குடுத்து என்னக் காப்பாத்தியிருக்க... நீ தான் என்னோட மருமக... இல்ல... என் மக " என்றாள் ஜமீலா.

இப்ராகிம் கண்கள் பனித்தன.

அப்போது அபு, ச‌மீலாவையும் நூரையும் நோக்கி 'டக்டக்' என கம்பீரமாக வந்து கொண்டிருந்தான்.

"ஒனக்குன்னு பொறந்தவன அல்லா கொண்டு வந்து அவரா நிறுத்துவார்னு " முத்தவல்லி சொன்ன வாக்குப் பலித்துவிட்டது.

இனி நூர் அழ மாட்டாள்!

திருமணங்கள் சொர்க்கத்தில் மட்டும் நிச்சயிக்கப் படுவதில்லை, அரசு மருத்துவமனைகளிலும் கூட நிச்சயிக்கப்படுகிறது!!