ஞாயிறு, 24 நவம்பர், 2013

<>பிற்பகல் விளையும்<>

"பிற்பகல் விளையும்"

குரு கெளம்பு....இப்ப பொறப்பட்டாத்தான் இருட்டறதுக்குள்ள டெட்ராய்ட் போய்ச் சேர முடியும்,
என்றவாறு வாசு வந்தான். என்னடா, என்னாச்சு?

குரு பதில் எதுவும் சொல்லாமல் மெளனமாக இருக்கவே, மூன்று நாள் ஜாலியா இருந்துட்டு நாளைக்கு வேலைக்குப் 
போகனுமேன்னு கவலையா இருக்கா? என்று மீண்டும் கேட்டான் வாசு.

ம்ம்...ஜலாலும் டேவிட்டும் ரெடியாயிட்டாங்களா? என்றவாறே 
குரு படுக்கையை விட்டு எழுந்தான். 

நாங்கள்லாம் ரெடி... நீ என்ன தூங்கீட்டியா? கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்தான் ஜலால்.

இதோ ஒரு நொடியில ரெடி.. நீங்க  தயாராயிடுங்க நானும் வாசுவும் வந்துடுறோம்என்ற குரு, குளியலறையில் புகுந்து கொண்டான். 

நண்பர்களிடமிருந்து விடுபட்டு குளியலறைக் கதவைச் சாத்திக் கொண்ட குருவால் தன் மனக் கதவைச்சாத்த முடியவில்லை.

"ஒருவேளை நாம அந்தப்பெரியவர் கேட்டதுக்கு சரின்னு சொல்லீருந்தா அந்த அநியாயம் நடந்திருக்காதோ 
" அந்த குளுகுளு சூழலிலும் கூட 'குப்' பென வியர்த்தது குருவுக்கு. 

அவனின் எண்ண ஓட்டம் பின்னோக்கித் தாவியது. 

நயாகரா அருவியை அங்குல அங்குலமாக ரசித்துவிட்டு, 'படகுச் சவாரி' போவதற்காக அந்த நீண்டு வளைந்து நின்ற 
வரிசையில் குரு தன் நண்பர்களோடு நின்றிருந்தபோது தான் அந்தப் பெரியவரைச் சந்திக்க நேரிட்டது. 

பெரியவர் ஒருவர், ஒரு சிறுவனையும் சிறுமியையும் கையில் பிடித்துக் கொண்டுவரிசையில் இருந்தவர்களிடம் ஏதோ 
கேட்பதும் அவர்கள் ஏதோ சொல்வதும், அவர் அடுத்தடுத்தவர்களாக கேட்டுக்கொண்டு நகர்ந்து கொண்டிருந்தார். 

அவரைப் பற்றி இவனருகில் நின்று கொண்டிருந்த சிலர் 
இந்தியிலும் ஆங்கிலத்திலும் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். 

இந்தியாவுல தான் பிச்சைக்காரங்க தொல்லைன்னா, இங்க கூடவா? என்றான் ஒருவன். அட இவுங்களும் இந்தியா தான், 
விமானம் ஏறி வந்து இப்ப இங்கயே பிச்சை எடுக்க ஆரம்பிச்சாச்சா? என்று இன்னொருவன் சொல்ல ஒரு கூட்டம் கொல்லென சிரித்தது. 

அந்தப் பெரியவரோ, "நீங்க தமிழா?.....ஸார் நீங்க தமிழா?" என 
சற்றும் மனம் தளராமல் ஒவ்வொருவராகக் கேட்டுக் கொண்டே குருவிடம் வந்தார்.

தமிழ் தான் நான், என்ன விஷயம் பெரியவரே? தமிழ் தான் என்று குரு சொன்ன மாத்திரத்தில்,பெரியவரின் கண்களிலிருந்து மளமளவென 
கண்ணீர் உருண்டு சிதறியது. 

என்ன பெரியவரே ஏன் அழறீங்க? 

"தம்பி ஒரு நிமிசம் ஒங்ககிட்ட தனியா பேசனுங்க‌. 
இதோ இப்படி வர்றீங்களா? "அவருடைய தோற்றம் 
பரிதாபமாக இருந்திருக்கவேண்டும்.

சரி வாங்க, "நீங்க போய்கிட்டே இருங்க. நா வந்து சேர்ந்துக்கிறேன், 
"நண்பர்களிடம்சொல்லிவிட்டு எதிரே இருந்த பூங்காவை நோக்கி நடந்தான். 

ம்..இப்ப சொல்லுங்க பெரியவரே...!? 

மீண்டும் மளமளவென கண்ணீர் கசிந்து, சிதறியது. 

அழாதீங்க... ஒங்க ப்ரச்னை என்ன? 

திடீரென்று குருவின் இரண்டு கைகளையும் பற்றிக்கொண்டு , "தம்பி இந்தக் கைய ஒங்க காலா 
நெனச்சு கும்புட்டுக் கேக்கறேன்", என்று சொல்லி மீண்டும் குலுங்கிக்குலுங்கி அழத் துவங்கிவிட்டார். 

வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை. பெரியவரின் அருகே நின்றிருந்த குழந்தைகள் எங்கோ வேடிக்கை 
பார்த்துக் கொண்டிருந்தனர். 


என்னோட அப்பா மாதிரி இருக்கீங்க. சின்னப் பையனான என்னிடம் பெரிய வார்த்தையெல்லாம்சொல்லாதீங்க. 
என்னன்னு சொல்லுங்க. என்னால எதும் உதவமுடியும்னா செய்றேன். 

"தம்பி, எப்படிச் சொல்றது? என்ன சொல்றது? புரியல. திருச்சில இருந்து தஞ்சாவூர் போகனும் பஸ்சுக்கு காசு 
தரமுடியுமான்னு கேக்கலாம். அமெரிக்காவுல இருந்து தஞ்சாவூர் போகனும் பிளேன்லடிக்கட் எடுத்துத் தர 
முடியுமான்னு கேக்க முடியாது.  என் மகன்னு சொல்லிக்கவே வெக்கப்படறேன்தம்பி. 

என்னப் பிரிஞ்சு இருக்க முடியல, நாங்க வரணும்னா நாலு பேர் செலவாகும். நீங்க ஒருத்தர்தான வாங்கன்னு கடிதத்துக்கு 
மேல் கடிதம் எழுதினான். எம் பொண்டாட்டி போய்ச் சேர்ந்துட்டா, நாந்தான் ஒத்தக் கட்டையா பென்சன் 
பணத்துல காலத்த ஓட்டிக்கிட்டு இருந்தேன். 

எனக்கும் பேரப்புள்ளைகளை பாக்கலாம் போல் ஒரு  எண்ணம் வந்துச்சு. இங்க வந்தேன். இங்க வந்தப்புறம் தான் தெரிஞ்சுகிட்டேன். 
பாசம் ஏதும் இல்ல, எல்லாம் பசப்பல் தான்னு.

என்னைய ஜெயில்ல வச்ச மாதிரி வச்சு இந்தப் புள்ளங்களுக்கு காவக்காரனாக்கி விட்டான். மருமக பேச்சும் ஏச்சும் என்னால 
தாங்க முடியல. 

பத்தாதுக்கு மகனும் சேந்துகிட்டு கை நீட்டி அடிக்கக் கூட ஆரம்பிச்சுட்டான். என்னை ஊருக்கு அனுப்பி வச்சிடுப்பான்னு 
கூட கேட்டுப் பாத்துட்டேன். ஊரா? இங்கேயே கெடந்து சாவுங்கிறான் பெத்த மகன். 

இப்ப உலங்கூர்தி (ஹெலிகாப்டர்) சவாரி  போயிட்டு வர்றோம் புள்ளங்களை 
பத்திரமா பாத்துக்கன்னு சொல்லீட்டுப் போய் இருக்காங்க", என்று சொல்லி நிறுத்தினார் பெரியவர். 

"கேக்க கஷ்டமாத்தான் இருக்குங்க. இதுல நான் என்ன 
செய்யணும்னு எதிர்பார்க்குறீங்க?" 

"தம்பி எனக்கு பணம் காசு உதவி வேணாம். சமையல் செய்யத் தெரியும். ஒங்களுக்கும் நண்பர்களுக்கும் 
சமைச்சுட்டு, எதோ ஒரு மூலைய காட்டினா  மொடங்கிக்கிருவேன். வேற எதுவும்வேணாம்.  ஊர்ல இருந்து 
பணத்துக்கு ஏற்பாடு பண்றவரைக்கும்தான். ஒங்களுக்கு எக்காரணம்கொண்டும் பாரமாயிருக்கமாட்டேன்," 
என்றார் சிறு குழந்தை போல." 

தற்போதைய வேலையே அடுத்த மாசம் முடியப்போகுது. தானே என்ன செய்யப் போகிறோம்? இருக்க‌ப் போகிறோமா? 
திருப்பி வேற ஊருக்கு அனுப்பிவிடுவார்களோ? என்ற சிந்தனை அப்போது குருவுக்கு எழுந்தது. 

".....தம்பி யோசிக்கிறதப் பாத்தா....!?" 

"இல்ல...எனக்கு இப்ப இருக்கிற வேலை அடுத்த மாசத்தோட  முடியுது. அப்புறம் நானே எங்க போவேன்னு எனக்கே தெரியாது. 
அதான் யோசனை பண்ணிட்டு இருக்கேன்." 

"தம்பி ஒங்க நண்பர்கள்கிட்டயாவது சொல்லி ஒரு ஏற்பாடு செஞ்சீங்கன்னா கோடிப் புண்ணியம்ஒங்களுக்கு...!" என்று சொல்லி 
குருவை இரட்சகன் போல பெரியவர் ஏறிட்டார். 


"ஒங்க வீட்டின் நிலை பேசி எண்ணைக் கொடுங்க ஏதாவது ஏற்பாடு பண்ண முயற்சிக்கிறேன்." 

"தம்பி ஒங்கள வற்புறுத்திக் கேட்க எனக்கு கொஞ்சம் கூட உரிமை இல்லை. இங்க எனக்கு வேறவழியும் தெரியல. இல்லன்னா 
சாகறது தான் ஒரே வழியா தெரியுது." 

"நான் முயற்சி பண்றேன். ஆனா இப்ப உறுதியா ஒங்ககிட்ட ஏதும் சொல்ல முடியாது. மகனுக்காக இருக்கிறவரை கொஞ்சம் 
அனுசரிச்சுப் போங்க பெரியவரே. தூரத்தில் நண்பர்கள் சைகை செய்யவே அப்ப நா வர்றேன்.  தொடர்புகோல்கிறேன். கவலப் படாதீங்க." 


"இவ்வளவு பேர்ல நீங்க ஒருத்தராவது மனிதாபிமானத்தோடு  வந்து கேட்டீங்களே. ரெம்ப நன்றி தம்பி,என்று தலைக்கு மேல் 
கையெடுத்துக் கும்பிட்டார் பெரியவர்." 

<>000000<>

வானத்திலிருந்து பூமிக்குத் தாவிக் குதிக்கிற நயாகரா நதியழகை கீழிருந்து நனைந்து கொண்டேபார்க்கக் கண்கோடி வேண்டும். 
அமெரிக்கப் பகுதி, குதிரைக் குளம்பு பகுதி, (குதிரைக் கால் போன்றஅமைப்பு ) கனடா பகுதி என மூன்று பிரிவும் ஒரே அருவியாக 
அணி வகுத்துக் கீழிறங்குகிற அற்புதத்தில் மனதைப் பறிகொடுத்து இருந்தான் குரு. 


படகுச் சவாரி முடிந்து கூட்டணிக் கடையில் பீட்ஸா சாப்பிட்டு , மெழுகு பொம்மை கண்காட்சி கூடத்துக்குள் சென்று விட்டு வெளியே 
வந்தபோது தான் அந்தக் கொடூரம் அரங்கேறிப் போயிருந்தது. 

வாகனங்கள் நீண்ட வரிசையில் ஸ்தம்பித்து நிற்க, சற்று தூரத்தில் ஒரு கூட்டம் மொய்த்துக் கொண்டிருப்பதையும், காவலர்கள் கூட்டத்தை 
ஒழுங்கு படுத்திக் கொண்டிருப்பதையும் குரு கவனித்தான். கும்பலாய் இருந்த இடத்தை அடைந்து பார்த்த குருவிற்கு இருதய இயக்கமே நின்றுவிட்டதுபோலானது. 

அங்கே... அந்தப் பெரியவர்... இரத்தச் சகதியில் இடுப்புக்கு கீழ் கூழாகியிருக்க முகத்தில் அங்கங்கே இரத்தப் பொட்டுக்கள் உறைந்து ... 
பார்க்கச் சகிக்காமல் உடம்பைக் குலுக்கி நிமிர்ந்த குரு, பெரியவருடன் வந்த இரு குழந்தைகள் தட்டுப் பட்டனர். 

அருகில் சுடிதாரினி, கொஞ்சம் தள்ளி காவலரிடம் பேசிக் கொண்டிருந்தது அந்தப் பெரியவரின் மகனாக இருக்க வேண்டும். பார்த்துக்
கொண்டிருக்கும் போதே சுடிதாரினி பெரியவரின் மகனை காவலரிடமிருந்து பிரித்து, குரு இருந்த பக்கம் ஒதுங்கினார்கள்.

"எங்க ஔறிக் கொட்டிருவீங்களோன்னு பயமாயிருச்சு. நல்ல வேளை... நான் சொன்ன மாதிரி சொல்லீட்டிங்க. அப்பாகிப்பான்னு சொல்லி 
பாடிய நாம வாங்கி, கிழத்தைப் புதைக்கவே ஆயிரக்கணக்குல டாலர் செலவு பண்ணனும். நயாகரா வந்த எடத்துல தற்செயலா சந்திச்சோம், 
எங்கநாட்டுக்காரர் என்பதைத் தவிர வேற ஏதும் தெரியாதுன்னு சொல்லீட்டிங்க; நாம தப்பிச்சோம்.சரி...சரி நாம இந்த எடத்தை விட்டு 
மொதல்ல கெளம்புவோம்." 

குருவுக்குத் திக்கென்று இருந்தது. 
அதே இடத்தில் அவர்களை அடித்துப் பந்தாட வேண்டும் 
போலிருந்தது. சே... என்ன மனிதர்கள்? என்ன வாழ்க்கை? 
பெத்த அப்பாவை யாருன்னே தெரியலைன்னுஎப்படி மனம் கூசாமல் சொல்ல முடியுது? 


சில மணித்துளிகளுக்கு முன் பேசிய ஒரு உயிர்ப் பறவை 
சிதைந்து கிடப்பதைப் பார்த்ததுமே, என் உள் மனம் 
பெருங்குரல் எடுத்துக் கதறுகிறதே, தோளைத் தொட்டிலாக்கி, 
நெஞ்சைப் பஞ்சு மெத்தையாக்கி, எறும்பு கடித்தால் 
பதைபதைத்து, எத்தனைஎத்தனை இரவுத் தூக்கம் 
தொலைத்து இந்த வாலிபத்தை வளர்த்தெடுத்த 
அன்பான ஒரு தந்தையை எப்படி அனாதையாக 
விசிறிவிட்டுப் போக முடிகிறது? 

தொண்டை அடைக்காம, துக்கமில்லாம எப்படி? எப்படி இவர்களால் பாறாங்கல்லாய் இருக்க முடிகிறது? 

"டேய்...இன்னும் என்னடா பண்றே..?" கதவு தடதடவென தட்டப்பட குருவின் நினைவிழை அறுந்தது. 

<>000000<>


ஒருமணி நேரத்துக்கு மேல் வண்டியை ஓட்டிய ஜலால், "டேய்...என்னாச்சு ஒரு மைல் நீளத்துக்கு வண்டி டிராபிக் ஜாமாகி நிக்கிது,"என்றான். 

சரிதான்... எப்ப இதெல்லாம் சரியாகி, நாம எப்ப போய்ச் சேர்றது? 

இப்பப் போனாலே டெட்ராய்ட் போய்ச்சேர இராத்திரி ஒம்பது 
ஆயிடும்... என்றான் டேவிட் எரிச்சலாக.

"சரி நான் கொஞ்சம் முன்னாடி போய் என்ன?ஏதுன்னு போய் பாத்துட்டு வாரேன்" குரு கிளம்பினான்.

இந்தமாதிரி போக்குவரத்து நெரிசலில் எப்படித்தான் அமெரிக்கர்கள் பொறுமையாய் இருக்கிறார்களோ? நம்மூராய் இருந்தால் 
குறுக்கமறுக்க பூந்து போறவன் போயிக்கிட்டே இருப்பான்...என்று நினைத்துக்கொண்டே நடந்ததில் கார்கள் நிற்கும் 
முன்பகுதிக்கு வந்திருந்தான் குரு. 


அங்கே.... அப்பா...அம்மா... என்று மெலிதாய் அழும் குழந்தைகள்.....அட...அந்தப் பெரியவரோட பேத்திகள்.

மகிழுந்து தலைகீழாய் கவிழ்ந்து கிடக்க சரக்குந்தின் பின்புறத்தின் கீழ் மகிழுந்து.. இரத்தம் உறைந்து கிடக்க....சுற்றிலும் காவலர்கள் தலைகள்.

அரசன் அன்றே கொல்லுவான்; தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். பெரியவரின் சாவுக்கு காரணமான இருவருக்கும் தண்டனையைத் தெய்வம் காலம் தாழ்த்தாமல் வழங்கிவிட்டதோ.... குரு அந்தக் குழந்தைகளை நோக்கிப் போகிறான்! 

                                    <><><><>00000<><><><><>

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக